வியாழன், 4 ஜூன், 2009

வாகை எம் கைவசம் வசமாகுமா?


விரிந்து,விரவி, நீட்சித்த வானம்,
விதிர் விதிர்த்து,விக்கித்து விகல்ப,
சரிந்த உடலங்களின் சத்திய சாட்சியாய்,
உதிர்ந்த உயிர்களின் உத்தகங்களை,
உள்வாங்கியபடி வானம் வகையின்றி,
வெப்பியாரம் சூடியகதை வெந்தெடுத்த வதைமாறுமா?

படுகாயங்களின் பச்சை ரத்தங்களை,
படுதலம் தாங்கிய பாச(வி) மண்,
கொடுமைகளின்,கொலைவலயங்களில்,
கோரமாக,விக்கித்து,ஜீரணித்த,ஜீவிதங்களின்,
சாட்சியம்,சாசுவதமான வதந்தானா?
கொலைக்களங்கள்,
இவ்வகை கோரங்களை கோர்க்கவில்லை.
இது இகத்தில் வரலாறு,
தமிழன் வதைந்த வரலாறு.

பாரில்,
பரந்த இவ்
வையகத்தில்,
மனிதம் இன்னமும் மகோன்னதம்,
சூடியதான சூசகங்கள் சூம்பி சொதக்கிய,
சோகத்தை விஞ்சிய வேரடி மண்ணழிப்பின்,
பாகங்கள்,அதன் வதங்கள்,
முடியவில்லை,மனதாலும்,நினைவாலும்,
நிழலாக என் மனம் மரிக்கும்.

காரும் கந்தக சிந்தனையின் கனதிகளை,
ஊரும்,உறவும்,என் இன பந்தங்களும்,
ஊரோடு எரித்த பகையின் பாங்கினை,
மனிதத்துவம்,
மனமரிக்கும் அவலங்களை,
வகைக்க மறுக்கும், வசப்படாத கோரங்களை,
கோலி,குழாமள்ளி,குருதியின் குருத்துக்ளையும்,
வலிமையிழந்த என் சமூகங்களை,
வரிந்தெறிந்த ஏவுகணைமுதல்,எரிவாயு ஈறாக,
பொஸ்பரசு,கொத்தாணிக்குண்டுகள் ஊடாக,
ஏகத்திற்குள் அப்பாற்பட்ட எம்மகங்களை,
எரித்து இருப்பழித்த, வடுமைகளை,
ஊனமாக்கப்பட்ட உறவுகளின் சோகம் தாங்க,
அவர் யாகம் தீர்க்க,

நெடு வீதி சூழ்த்தி வஞ்சகர்கள்,
நாளும்,பொழுதும்,நாலுபக்கமும் முட்கம்பி சூழ்த்தி,
ஆவல் அழித்து ஆற்றாமை சூட்டித்து,கயமை
ஆற்றும் கனதியை எவர் கணக்கெடுத்தார்?

விடுதலையின் பூக்களை,
தறுதலைகள்,
தரம் பிரித்தல் எனும் தளத்தில்,
ஊறு உலைத்து உறுப்பறுத்து,உய்வெல்லாம் அவர் வசமகற்றி,
பேறு கொண்ட பிறப்பதனை பேதலிக்க முடித்து வைக்கும்,
கூறுகளை என்னென்பேன்,
கூற்றனவன்,
குதூகலத்தை என்னென்பேன்?.

கூடி,உறவாடி,கூம்பாக குலமுயர்ந்த குலம் இன்று,
வாடி,வகை பிறழ்ந்து,கூழாகி,குதம்பி,
நாடும்,இதை நாளும் இழந்த நாற்புலத்தை என்னென்பேன்.
கூடும் இனியில்லை,
கூட உறவில்லை,
தேட நாதியில்லை,
தேடி தேம்பி அழக்கூட தெம்பில்லை,
உணர்வில்லை.உயர்வில்லை,உயிரில்லை,

முட்கம்பி போலவே,
இவர் வாழ்வும் முறுகலாற்றும்,
முகையில் இவர் வாழ்வு இனி,
முடிவடைந்தே முற்றாகிவிடுமோ?


இந்த வையகத்தில் வலிமையுள்ள,
நெஞ்சங்கள் இல்லையா?நெருடுதே,
ஊடறுத்து,உயிர்ப்பளித்து,உத்வேகம் உரமேற்ற,
எங்கள் உள்ளம்,
நெடுவீதி பார்த்து நெடுமூச்செறியும்,
நெஞ்சகத்தை,
வாஞ்சையாய் கோதி,நியமாக ஒற்றி,ஒன்றி,
ஆக்ஞாபிக்கும்,அறம் அதன் லயம்.
வருடிவிடும் வகை தேடுகின்றோம்,
வாகை எம் கைவசம் வசமாகுமா?
காலம் களித்து கரை ஏற்றுமா?இல்லை
காலன் கரைத்ததாய்!
காதை கலமிடுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்