வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

இன்னா செய்தாரை ஒறுத்தல்-அவர்
நா நயம் செய்துவிடல்.

இரண்டகமும்,எதிரி பாகம்
இணைந்திருந்து தன் இனத்தையே
அழித்தவனிற்குமா?
இதை வள்ளுவன் வரைந்தான்?

இப்படியும் இயம்பும் ஈனர்களை
எந்த லயத்தில் இருத்தி
இலங்கல்களை இழைப்பது?
தம்படி நிலம் கூட எங்கள் தரத்தில்
தரணியிலற்று போனதால் தகமெல்லாம்
ஈரமற்று போய் விடுமா?

விலங்கிலும் இழிய வாழ்வேற்று
துலங்குமா எங்கள் துயரமும்,வேதனையும்?
மலங்க விழிக்கும மானிடரானோம்!
குலங்கெளெல்லாம் குடியற்று,குவிவற்று
கொடியவரால் குதறப்பட்டு
மடியும் இந்த மானிலத்தில்-எந்த
விடியலாற்ற வீணர் எம் களம் கலைத்தார்?

இருப்பதை விட்டு பறப்பதை பற்ற எண்ணும்
பேதமை என்று விலகும்?
நெருப்பாற்றில் நீந்திய எம் நேத்திரர்கள்
விருப்பாற்றி வீதி கீறிய விதிகள்
இதை விட்டால் வேறு வழியில்லை என்பதை
மீண்டும் மதி கீறும்
பேரினத்தின் விறுமம் கரைக்க
ஓரினமாய் எங்களினம் மீண்டும் இணையுமா?
ஈர்க்குமா?

இல்லை வேறு வழியில்லையென
சரணடையும் சாரம்தான் சங்கதியாகுமா?
போனதில் போக்கற்று வீர வரி கீற
விறுமம் இனி வரையுமா?
எங்கள் வீதி வெறிச்சோடி,எங்கள் வானம்
வெளிறி,எங்கள் கடல் குருதியில்?

நாளும்,பொழுதும்
காணாமல் போவோர் எத்தனை பேர்?
கிராமத்து கிணறுகள் விழுங்கும்
இளைஞர் எத்தனை பேர்?
இருட்டிற்குள் இன்னல்களே வாழ்வாய்
உருக்குலையும் எங்கள் குமர்கள் எத்தனை பேர்?

பலமாய் தமிழர் பாலம் அமைத்த அந்த
இளவேனில் ஈழத்தில் இந்த அவலம் இறைந்ததா?
இரவில் இளைஞிகள் இன்கலற்று திரிந்த
அந்த
ஈரமான நிலத்தில் என்றாவது இந்த இழவுகள்
இழைந்ததா?

ஆனால் இன்று
ஈழத்தில்,யாழில் நடக்கும்
சிங்களரின் சின்னகத்தனங்கள்
பலமற்று போனோம் ஆகவே
வலமற்றும் போனோம்.
எண்ணத்தை,எதிர்ப்பை,
எந்த வகையிலும் வார்க்க முடியாத
வகையற்று போனோம்.

இன்னும் எத்தனை நாள் இந்த அவலமும்,
அரியண்டமும்,ஆக்கினையும்.
மீண்டும்-
மகிந்தா என்ற மனிதமற்ற பேயாட்சி
மந்திகள் எல்லாம் எங்கள் மயிலாசனத்தில்?
சிந்திப்பானா தமிழன்?சினமாற்ற
சீற்றம் தொகுப்பானா?
தொகுத்தால் தொகுதி மீண்டும்-இதை
பகுத்தால் எங்கள் பருதி நிச்சயம்
ஆரை ஆர்க்கும்.

இப்போது
இன்னா செய்தாரை ஒறுப்போமா இல்லை
ஒன்றிணைந்து ஓர்மம் ஒற்றுவோமா?

வியாழன், 28 ஜனவரி, 2010

அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.


சிரிக்கும் மலர்களிலே,அது
விரிக்கும் இதழ்களிலே-அறமிழக்க
மரிக்கும் கண்ம் உண்டு.அதுபோல்
எவர் தரிசிக்கும் அறமற்ற அரியாசனத்திலும்-
அழிவுண்டு.

ஆற்றும் திறனது அழியாது.
பிறரும் போற்ற பின் விழைவினை,
முன்பே தெறிக்கும் தெரிவுகள் ஆற்றினால்,
தெம்பே தெளிக்கும் செழிப்புக்கள் செப்பனிட.

தேர்வுகளில் தெளிவற்று,
பார்க்கும் பார்வைகளில் பரிவற்று,
ஊற்றெடுக்கும் உணர்வுகளை!
புரிவகற்றி,ஆற்றல்கள் அமைத்தால்
வலுவற்ற பாதை வாதைகளையே வார்க்கும்.
போகும் பாதை தெரிவற்று???
என்ன தேர்ச்சியை எவர் தேர்ப்பார்?

புரியாத பரிவெழுதும் புதர்களிலே!
வலியான எம் பார்வை எந்த வலுவேற்றும்?
வலுவெல்லாம் வதைமுகாமில்!
தெளிவெல்லாம் புறமுதுகில்!
வழியெங்கே?
வரித்தெடுத்த தெளிவெங்கே?
அத்தனையும் மெளனத்தில் மரிப்பெழுதுமா?

இல்லை!
இறைதலும், இலங்குதலும்,இயங்குவதும்
எந்த இழையை இனி இரப்பேந்தும்?
தளமும் அற்று,களமும் கலைந்து,
ஏந்த ஒரு உலையும் அற்று!
இப்படி எல்லாமே அற்றதாய்!?-
சூனியமே சுவடாய்!

இங்கிருந்து எந்த காரியத்தை?
மங்களமாய் நாம் மதிப்போம்?
வெங்களத்தில் எங்கள் வேதினியர்
சங்காரமாக்கிய சங்கதிகளை??
இங்கிதமகற்றி இந்தியனுடன் இன்ன பிற
வெங்களாந்திகளும்--

எம் களங்களை இனி
எந்த சந்தம் ஏற்றி?
ஆயுதம் அற்றபோது நாம் ஆளுமை இழந்தோம்.
இதனால் நாம் ஏதும் ஏந்தும்
ஏதனமும் இழந்தோம்.
பலமற்றவன் பவனிவர எந்த
பார்வையிலும் பாதை இல்லை.

இப்போ நாம்!
வெறும் வாய்.
மெளனமாக,
அவல் மட்டுமல்ல-
அவலமும் கூட மெல்கின்றோம்.
மெளனம் மேதினியில் மெய்சிலிர்க்க,
மேவும் நாள் கை கூட.அதுவரை
வரைமுறையற்ற வன்மங்கள்
மனமொழுக.

எம் மாவீரக் கல்றைகளே!
உற்றவன் இல்லையெனில்,
யாவும் அறமற்று அற்றே போகும்.
ஆயினும் எம் மனங்களில்
மாதவமாய் நீவிர் வாழும்
வேதத்தை எந்த வேமனும்
அழிக்கவோ,அகற்றவோ முடியாது.

நீங்கள் வாழ்வது,
எங்களின் ஆத்மார்த்த ஆன்மாவில்.
உங்கள் புன்னகைப் பூக்கள் என்றும்
கருகாது.
கால,காலமாய் கனதியாய் வாழும்.
மீண்டும் இந்த மேதினியில்
கல்லறை மேனி கலவரமின்றி
களமேற்றும்,
கலமேந்தும் எங்கள் காலக் கடனால்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.


அழுகைக்கு நிறமில்லையா?
அது உந்தன் ஆளுமைபோல் அல்லாது போயினும்,
உணர்வுகளின் உறைவிடமாக,
உணர்ச்சிகளின் கனதியாக ஓர்
உறுத்தல்,
இல்லை
இயலாமையின் இறைஞ்சல்.
அல்லது
துணையற்ற ஓர் தூரத்தில்
ஏதும் ஆற்றமுடியாமல்,அற்ற சூன்யத்தில்
இதுதான் என்பதான எந்த வழியும்,விழியும்
ஈற்ற முடியாத ஓர் கையாலாகாத் தனத்தின்
காவுகை,

அழுகை!
இடம்,பொருள்,ஏவல் சார்ந்ததாக
இப்படித்தான் என ஏதும் வெளிப்படுத்த முடியாத
அல்லது வெளிக் காட்டக் கூடாத ஒரு குவியம்.
ஆயினும் நிறமற்றதாக அழுகையை
ஆளுமை ஆற்றல் அது என்றோ ஓர் நாள்
பெரும் ரூபம் தரிக்கும்.

அழுகை
சந்தர்ப்பம் சார பழி வாங்கும்.
ஏன்?
அது அதமங்களை ஓர்மத்துடன்
வசதியாக அணிவகுத்து வன்மம் இறைக்கும்.
ஏற்ற அந்த இலங்கல் இழைய கொலையாக கூட
கூர்ப்பேற்றும்.

அழுகைக்கு நிறம் உண்டு.
இதை இலக்குவோர் இணைந்திருப்பர்,
தனதான தேவைகளையும்,சேவைகளையும்
கூவையாக குவித்திருந்து
கூர்மையான புலம் பருவ
தீர்மையான திடம் தீற்றும்.
அஃதின்றேல் அது அழுகையல்ல.

அழுகை மன்னித்தலை மனம் கொள்ளாது.நான்
இங்கு கோடிட்ட அழுகை
மாந்தர் எம் மைந்தர்கள் மையித்த
மறக்கவே,மறைக்கவோ,
ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத
ஓர்மத்தின் வேரை.

அழுகைக்கு நிறமுண்டு -அது
தொழகையகற்றி,தொய்வகற்றி
திடகாத்திரம் செதுக்கி திண்மையாய்
தீர்வாக தீட்ட தண்மையாய் தனை தகம் கொள்ளும்.
அந்த கொள்ளிடம் கொலுவேறும் வரை
கொய்யம் ஏதும் கொற்றம் காட்டாது.

வியாழன், 21 ஜனவரி, 2010

உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.


உடலையும்,உணர்ச்சியையும்
கொன்று குவிக்கும்
கோலோச்சிகளே-எங்கள்
உணர்வுகளையும்,ஆத்மார்த்த
உறுப்பான தாகத்தையும் எந்த
தர்ப்பணத்தில் தகித்தெறிவீர்?

மானிடம் கலைத்த ஊனர்களே!
என்றோ ஓர் நாள்-அந்த
சாளரத்தை நீ சாசுவதமாய் சுகிக்க
அந்த அந்திமத்தில் எந்த கோணத்தில்
உன் சுயம் செரிப்பாய்?எல்லாம்
ஆட்சி தரும் ஆவணம்,
ஆணவம்-
மிட்சியற்று நீ மிதிபட எந்த மீந்தனத்தில்
உனதான மிதப்பு?

உனக்குள் உறங்கும் மனசாட்சியே!
கனக்கும் உன் கனதியாக -நீ
சுவாசம் சரிக்கும் முன்னே முகிழும்
சகவாசம் உனதான பரிவிற்குள் ஏந்த எந்த
பச்சோந்திகளும் உன் பாதம் பார்க்கார்.

உனக்கான பருதி குன்றும்.இது
தனக்கானதாக ஏதும் விட்டம் வரையா
ஆரையை உந்தன் அகம் அருக்கியதால்
அழிவில் உன் அழிவில் எந்த
ஏற்பானும் உனை ஊக்கான்.

புரிதலை பதவி புறந்தள்ளும்-இது
உனதான தனி பாதையல்ல!
உலகில் ஈழ உலகில்
அரசென்னும் சிரசில் இத்துணை அழிவாற்றிய
அத்தனை அரக்கர்களும் ஆதித்த ஆற்றலது.
வரலாற்றில் அவர்கள் வற்றல்களையே தம்
சந்ததிக்கு சிந்தாக சிந்தினார்கள்.

விளைவு குருதி சிந்தும்
குவலயமாய் ஈழ நிலம்.எனினும்
தரிசாகிப் போயினதாய் தம்பட்டம் தட்டும்
சகட்டு மேனியரே!
செவிடன் காதில் சங்காய் உங்கள் சேந்தல்கள்.
நாளை மீண்டும் நுகை மிளிர,
மாண்டதெல்லாம் மெருகேந்தும்.
தோன்றும் தொய்வில்லா சோதிகள்-உந்தன்
மன்றத்தில் மெளனம் கலைக்கும்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.


நினைவெரியும் நீங்கா நியம் எரியும்-
தணலெடுத்து இந்த தளத்தில் தகிக்கும்,
உணர்வுகளை உலையிறக்க நெகிழும் எம்-
மூச்சுத் திணறல்களை எந்த மூலிகையில்
புனருத்தாரணம் புனைக்க?

கனவிருக்கும்,காத்திரமான களமிருக்கும்.
நினைவிருக்கட்டும் நீலியர்களே!உந்தன்
கானல்கள் உங்கள் கழுத்திறுக்கும்.
காலம் கலம் சுருக்கும் கனதிகள் உன்-
கண்களில்,
தேர்தல் தேற்றத்தில் உந்தன் ஊர்தலுடன்
உணர்வுகள் உற்ற உரமேந்தி--

ஒற்றர் குல ஒத்தடம் இன்னும் எத்தனை நாள்?
கற்றல் என்றும் உன்னில் கருக்கொள்ளாது.
விற்பனங்கள் அற்ற விதையற்ற வீணர்களே!
சொப்பனங்களை இனி என்ன செய்வதாக உத்தேசம்?
நெருங்கும் நாளது உற்ற உன் நெற்றியை உறுதியாய்-
விறுமங் கொள் விபரமாக --

புத்தனின் அகத்தில் எந்த முகைப்பிருந்ததோ?
அது-
எந்த சித்தனின் சிரசிலும் சிறப்பெய்யவில்லை.
அது
நுகைகூட நோக்க தேற்றம் கொள்ளாது.
எத்தனின் ஏகாந்தம் ஆக நீ
எந்த மூலையை முகர்ந்தாலும் முகத்தில் ஒளி உமியாது.
பக்தனாக நீ எந்த பகடையான பட்டுடையுடுத்தாலும்,
வித்துக்களை எங்கள் வியூகம் யூகிக்கும்.

சற்றே பொறு போக்கற்ற இரண்டகர்களே!
முற்றிலும் மாற்றான முகை நீ இளைக்க,
வெந்தணலில் வெந்ததான உன் வெளிகளை
வெற்றிச் சங்கூதி எம்மவர் மேதினியில்
வேலியோடு வதைப்பர்.

முடிவல்ல!
இது முகிழ்வென எம் முற்றம் முகம் பூரிக்கும்.
அழகல்ல!
அளவளாவும் அத்தியாயமுமல்ல!
சரிவல்ல!
சங்கம் வளர்த்த தமிழ் சாதிக்க இன்னமும் இழையோடும்.
வரிவெல்ல!
கரிகாலன் காலம் உரைத்த களம் மெல்ல,
மேதினியில் மேவ.
உளம் பூண்டு உறுதியுடன் புலம் பூத்த
புவனம்.

எடுத்த காரியம் எதுவும் உடன் அறுவடையாகாது.
எந்த வித்தும் நட்டவுடன் பலனளியாது.
அடுத்த அசைவுகள் ஒவ்வொரு ஓர்மத்திலும்
ஓசையற்று நகரும்.
நர்த்தனங்கள் நடனத்தில் மட்டுமல்ல -ஈழ
கட்டுமானங்களும் அதே கனதியில்.
விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.

புதன், 13 ஜனவரி, 2010

ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-

ஆதவனின் ஆதங்கக் கதிர்கள்,
ஆரமது வெளித்து ஆனந்தமாய் அரங்கேற,
புள்ளினங்கள் புவி மீது பூபாளம் இசைக்க,
வண்டினங்கள் ரீங்காரித்து செண்டினடி சேர்ந்து,
பண்ணிசைக்கும் வேளையிது 'பா' இசைக்க வாராயோ?

விடியலின் வேதினியில் படிமங்கள் பல உண்டு.
மடியல் அதை விலக்கி மாண்பு பல இயைந்திங்கு,
படையலதை பக்குவமாய் பரந்திங்கு பரப்ப வேண்டி,
உடையன,அறுவடையில் அரிந்தன,செடி,கொடியில் சேர்ந்தன,
செங்கதிரோன் செவ்வடியில் சேமமாய் செதுக்கி வைத்து,
நன்றிக் கடன் நயக்க வேண்டும் நாம் அதை செபிக்க வேண்டும்.

உழவர் திருநாளில் உவகையாய் இவைகளெல்லாம்-சூரிய
உதயத்தின் முன்னே உளமாக இயக்க வேண்டும்.
இதயத்தை நெக்குருக்கும் நேயங்கள் நேர்த்தபடி,
அவயங்கள் ஆதவனை அர்ப்பணிப்புடனே அணைக்க ஏவும்,
தூயமலர் துலங்க அவன் தாளடி அடிபணிந்து,
வேணவேண்டும் அவன் வேதனம் எமக்களித்ததை.

ஆண்டாண்டு இக் காரியத்தை ஆதங்கத்துடன் அர்ப்பணித்தோம்-
ஆனால் ஆண்டு 2009ல் யாண்டு கொன்று,கொண்ட
யாத்திரத்தை நினைவேந்தும் நேத்திரங்கள் எமை வதைக்கும்
சூத்திரத்தின் வேதனையில் சூரிய வணக்கமது வனக்கவில்லை.

பிணக்கது தீராமல் எந்த பிண்டத்தில் பிதிர்க் கடனாற்றுவோம்?
இணக்கமது இன்றுவரை வரைபின்றி எங்கள் சுற்றமெல்லாம்,
சுணை ஏதும் இல்லாமல் சுற்றிவர முட் கம்பி வலைக்குள்ளே
பிணை எடுக்கக் கூட பிறப்பின்றி வெறிச்சோடி வேகின்றார்.

உற்றமே,உறவே!
உனக்கிது புரியுங்கால் சுற்றத்தின் சுவாசத்திற்கு
என்ன கடனாற்றுவதாய் இன்று உறுதி கொள்கின்றாய்?
ஆக்கி படைப்பதுவும்,ஆனபின் மூச்சு முட்ட உட் கொள்வதுவும்,
ஆசுவாசமாக பின் அரட்டை அடித்து,அயலவரை நக்கலடித்து,

இப்படியே உன் பிறப்பின் பயனெய்து!
எப்படியும் சுரக்காத உன் சுவாசத்தால்-எந்த
செப்படி வித்தை செய்வதற்காய் சேந்தனடி தொழுகின்றாய்?
அப்படியே உன் ஆத்மார்த்த ஆண்டவனடி சென்று இவர்கள்
ஆன "பயனென்கொல் வாலறியான் நற்றாள் தொழார்" எனின் என்று
உச்ச குரலில் உனை மறந்து குரல் கொடு -அத்தனையும் சேமம்

அடுத்த ஆண்டும் தை பிறக்கும்-ஆனால்
எங்கள் முற்றத்து மல்லிகையின் முகைகள் பிறக்குமா?
ஆரியனின் ஆழ சிறைதனில் அந்தரிக்கும் அவர்கள் ஆத்மா தரிக்குமா?
ஐயனே!
ஆற்ற உன்னால் ஏதும் ஆகாதெனில்-அவர்கள் முக(கா)ம் தரிசி
ஆக்கி படைக்க,புதுப் பட்டாடைக்கு நீ நுகர வைத்திருக்கும்
பணமோ? இல்லை உன் மனதோ எதுவாகிலும் அவர்கள் உளம் தரிசி.

உன் அரவணைப்பு!
ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
ஆயிரம் ஆசிகள் உன் அகம் கொள்ளும்.
புலத்தில் வாழும் என் அகத்தோரே!
உங்கள் புலவில்
தை திருநாளில் செலவாக்கும் லயத்தில்
புழங்கும் பணத்தில் பாதியையாவது -அங்கு
எந்த உலவுமற்று உலங்கும் உன் உறவிற்கு,
உதவ மதம் கொள்.
மனம் கொள்.

ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?


நீ வர நினைவெழுதும் என் புலர் முகம்-நீ
வந்த பின் அது வாடும் வயப்பு என்ன?
போன பின்னே உன் போக்கங்கள் புனையும்,
பாவனைகளை எந்த பக்கங்களில் பயனாக்குவேன்?

வாசம் தரும் பூவெல்லாம் வசமிழந்து வாட,
நேசமெல்லாம் உன்னாலே நெக்குருகி போனதடி.
பாசமதின் பவித்திரங்கள் பாழாகிப் போகுமுன்னே-
ஊசும் என் உயிர்ப்பெழுத உற்றவளே உயிர்க்காயோ?

வீசும் தென்றலிலே விரக தாபம் எனையேந்தும்!
கூசும் இந்த கூர்ப்பெழுத குயிலே நீ குரலாலே,
பூசும் உன் புன்னகையில் புதிர் கரைத்து புலவாயா?
நீசர் சிலர் எம் நித்திலங்களை நிர்ணயிக்கும்,
நிலைகளிற்கு நீயேன் நிறைவெழுதிப் போகின்றாய்?
நிந்தனது ஞாயங்களை நீயே பரிவெழுது.

காயம் அது காயும் காலம் அதை ஆற்றும்-ஆர
மாயம் அதை வரையும் மன்றங்களை நீ கலைத்து,
ஆயம் அதை ஆக்கி அனந்தவளே எனை அவைப்பாய்
யாகம் அது மிளிர யாக்கும் என் யாகசகங்களை,
பாகம் அதில் பகிர்ந்து பாவையே நீ பரிவாய்.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.


விரட்டு!
ஓட,ஓட விரட்டு!
எங்கள் ஓர்மங்களை,அதன் வேர்வரை,
பிடுங்கி,எம் உறவுகளை உலைத்தவனை,
விரட்டு ஓட,ஓட விரட்டு.

உந்தன் நாட்டை விட்டு மட்டுமல்ல- முடிந்தால்
உலகை விட்டே!
உரசும் உள்ளங்களில் நாளும் கெழிக்கும்,
நஞ்சின் நர்த்தனங்கள் என்றுமே சயனிக்காது.
விஞ்சும் நாளொன்று விடையெறியும்-அதுவரை
எஞ்சி நிற்கும் எம் உறவுகளே!
விரட்டு இந்த விதை விடைத்தவனை,
ஓட,ஓட விரட்ட உமக்கு கிடைத்த-
ஓலை எழுதும் இந்த ஓர்ப்பினால் விரட்டு.

மற்றவனை நாம் மன்றத்தால்,
மருவும் ஓர் வலைப் பின்னலில்,
உருவி ஒட்டி ஒரு வகை பண்ணுவோம்.இப்போது
உடனடித் தேவை உலையன் மகிந்தாவை,
உரிந்து அவன் உடமைகளை உறுப்பாய் உருவி,
வரிந்து வகையற்ற வக்கணை வகுத்து,
விரட்டு அவனை விரட்டு!

கால,காலமாய் தமிழனை ஏமாற்றும் இந்த-
பேரினவாதியின் பேச்சை மறுத்து,ஊரினை விட்டே,
ஒரேயடியாய் விரட்டு.
ஈழத் தமிழனே!
இப்போது கிடைத்த இந்த சந்தர்ப்பம்-
இனியும் உன் வாழ்வில் இலங்கவே மாட்டாது.எனவே
சிந்தனை ஒன்று உனக்கு உவகையாய் சீண்டும் இந்த-
சீலாக்கியத்தை சிறப்பாய் சிரத்து.

அதற்காக பொன்சேகாவை போற்றென்று-
அர்த்தமற்று அர்த்தம் கொள்ளாதே-காலத்திற்கு ஏற்ப
சாதகமாய் சில சந்தர்ப்பங்களை சரக்கேற்ற வேண்டும்.
பூதாகரமாய் இந்த புலையன் புவி கொள்ள பூண்டிருக்கும்-இந்த
மீதாரத்தை மிகையாய் மிளிர்வகற்று.

அன்றேல்!
சனநாயகம் அந்தோ பரிதாபமாய்-
சன,சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
ஆதலால்!
எம் அன்பான ஆற்றல் மிகு என் இனமே!
ஆவன செய்வாயென ஆதங்கமாய் நாம் இங்கே.

மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றுதான்.
தேற்றம் இதுதான் தேய்வில்லை தேம்பி அழுதல்
மார்க்கமும் இல்லை,மாயவனை தொழுதலும் தோற்றம் இல்லை.
துர்க்கனை இந்த துருப்புச் சீட்டாம் உன் வாக்குச் சீட்டால்-
வகுந்தெடுத்து வாகையை மாற்று.
இப்போதைய,தற்போதைய தேவையான மாற்றம்.
மகிந்தாவை மனைக்கு மட்டுமல்ல விதைத்த
வினைக்கு வினையாற்ற! மறவாதே எம் மானிட தமிழரே.

திங்கள், 11 ஜனவரி, 2010

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!


ஈட்டிய வெற்றியின் ஏகாந்த முகப்பு நீ.
தீட்டிய திட்டத்தில் தீயாத தீம்பு நீ.
காட்டிய காத தூரத்தின் சுனையான கானல் நீ.
அப்படித்தான் நீ காண்பது கானலென கற்பித்தாரே-பின்
நீ சுனையென உன்னை சுற்றமெல்லாம் சுற்றக் கண்டோம்.

வெற்றிக் கொடிகள் பல நீ ஏந்தினாய்-அதனால்
கொற்றவனின் கொற்றத்தில் உன் முற்றங்கள் முனைப்பாக
கூற்றனாகினாய் பகை தொட, அவன் பரமங்கள் பங்கப்பட
புறமுதுகு காட்ட வைத்த கூற்றுவனே!
எத்தனை வெங்களம் கண்டாய் அதுவல்ல உன் திறப்பு
எத்தனை போராளிகளை பகை புலமேற்றி பங்கமில்லா
முகிழ்வனாய் பாதை நீட்சித்தாய்.



நீ கடந்த பாதை முற்றிலும் புதர்கள், புதிர்கள்.
நீ படைத்த பாதைகள் முற்றிலும் புதுமைகள்,புரட்சிகள்.
நீ கடிந்த்தால் போராளிகள் அத்தனையும் முத்துக்கள்,சொத்துக்கள்
ஆக்கி நீ வைத்ததால் ஆகினர் அஞ்சா நெஞ்சினராய்,வித்துக்கள்
உன் பாதையை,பார்வையை எத்தனை கல்லறை மேனியர்
கனதியாக உன்னால் பேணினர்?

விடுதலை காற்யையே மூச்சாக சுவாசித்தாய்-உன்
வடுக்கள் தாங்கிய மேனியால் அதையே வாசித்தாய்.
துடுக்கானதாக உன் சுவாசத்தை சுகித்த சுமைதூக்கா
தர்க்கர்கள் கூட உனதான தகமறிந்து தூக்கினர்
விடுதலை சுமையை.

ஆர்த்தெடுக்க அடிபணியா அறமேந்திய ஆற்றலே-உன்
இறுதி மூச்சை இந்தி ராணுவமா இயமன் கைவசப் படுத்த
இயலா இறுக்கம் ஈற்றது.

எழுந்த போதும்,எரிந்த போதும் நீ விரனாகவே எதிர் வினையாற்றினாய்-
பழுத்த விடுதலை பரமனாய் பாரிலே பரந்தாய்.
கொழுத்த உனை முடியாமல் கோழையர் களம் நழுவிட,
விழுத்தி உனை முடிக்க வீணர்கள் விழைய,வீரம் வினைத்த
விழா முடியே முகியே,
பகை மகிழ பாழும் இந்தியனால் இகம் இழந்தனையா?

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
கிட்டும் வெற்றியினை தொட்டு தாலாட்டிச் சென்றவனே
முட்டும் பகை வாசல் உன்னால் முற்றமிழந்து புறமுதுகு காட்ட!
எட்டுத் திசையிலும் ஏகாந்தனாய் ஏறிய உறுப்பனே.ஏந்தலே!

கொட்டும் மழையிலும்,கொளுத்தும் வெயிலிலும்,
சுடுக்கும் பனியிலும், சுற்றமறியா காடுகளிலும்,
களம்மைத்த கரிகாலனின் காத்திரனே!
உன் காலடிச்-
சுவட்டில் உளமேந்தும் உவகையர் உனதான,
பாதையில் உன்னதமாய் உருவமைப்பர்.

நீ
ஏந்திய தாகம்,ஏற்றிய சுடர்,வீற்றிய வீரம் எதுவும் விலை போகாது
சிந்திய குருதிக்கு மங்காத ஒளி சமைப்பாம்-நீவிர்
சிதை கொண்ட பள்ளியில் எங்கள் பாகம் பகற்போம்-
விதையான உங்கள் விம்பத்தாடு விலை போகா தலைவன்,
பாதையில் உனதான தாகம் தீர்ப்பாம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாகந்தான் என்ற
ஈடாத வேதம் எட்டும்வரை ஏறெடுப்பாம்.
பீடுடைய பிரமங்கள் பின் தங்கா.

தொடரும்

பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.


பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.

தமிழர்களாகிய நாம் இந்த விழாவை ஏன் விமர்சையாக கொண்டாடுகின்றோம்?தமிழர்க்கும் இந்த பொங்கல் விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இதன் சிறப்பு யாது?

இந்த உலகில் உயிரினம் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை சூரியனிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்றன.ஆம் இந்த அகிலத்தின் அசைவை நிர்ணயிக்கும் மூலகாரணியே சூரியன் என்றால் அது மிகையாகாது.
சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்தே இந்த பஞ்சபூதங்களின் அசைவு இயங்குகின்றது.
ஆம்! இந்த பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என்பன சூரியனின் சூட்சுமங்களில் இருந்தே இயங்க ஆரம்பித்தன என்பது ஆதாரபூர்வமாக பல அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.இதுவே யதார்த்தமும் ஆகும்.
ஆக சூரிய ஒளியின் கதிர்களால் இந்த பூமி இன்றும் இயங்கிகொள்கின்றது.

அதன் அசைவின் இலங்கல்களில் மழையும்,காற்றும் எம் வாழ்வின் இன்றியமையாத கூறாக உள்ளது.மனித மற்றும் எந்த சீவராசிகளிற்கும் உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாகும் .மண்ணில் தாவர,மற்றும் எந்த உயிர்களின் வளர்ச்சிக்கு உணவு வேண்டும்.

பூமியில் உணவாக மிருகங்கள் மிருகத்தையும்,சில விலங்குகள் தாவரத்தையும்,வேறு சில உயிரினங்கள் இவ் இரண்டையும் உணவாக உட்கொள்கின்றன.அந்த வகையில் மனித இனமான நாங்களும் இந்த இரண்டு வகையான உணவையும் உண்கின்றோம்.

மண்ணில் உள்ள பலவிதமான கழிவுப் பொருட்களும் தாவரத்திற்கும்,மரத்திற்கும் பசளையாக அதாவது உணவாக அமைகின்றது.
இந்த உணவு மண்ணில் உற்பத்தியாக,தாவர மற்றும் யாவற்றிற்கும் சூரிய ஒளி வேண்டும்.
ஆக உலக வாழ் சகல உயிரினத்திற்கும் உணவு உற்பத்திக்கு சூரியனின் மிகப் பெரிய தேவையாக உள்ளது.
எனவே உணவு உற்பத்திக்கு சூரயனின் அளப்பரிய பங்களிப்பை மனதில் கொண்டு சூரியனிற்கு நன்றி செலுத்து முகமாக தமிழன் இந்த நாளை தேர்ந்தெடுத்து ஆதவனிற்கு தன் ஆகக்கூடிய மனித நேயத்தை காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளே தைத் திருநாளாகும்.

இன்னமும் விளக்கிக் கூறின் மழையையும்,சூரியனையும் நம்பி தனதான வயல்களில் நெற் பயிரை விதைத்து அதன் பலாபலனை அதாவது அறுவடை செய்த முதல் நெற்கூற்றை ஒரு பானையில் பொங்கி அதை அமுதாக ஆதவனிற்கு படைத்து தன் சுற்றம் சூழ மகிழ்வாக இருத்தலை தனது பண்பாக, தனதான இனத்துடன் சேர்ந்து ஆதி முதல் இன்றுவரை கொண்டாடி வரும் இத் திருநாளே தைத்திரு நாளாக இன்று நாம் கொண்டாடும் நாளாகும்.இது தமிழரின் கலாச்சாரத்துடன் தொக்கி எமது அடையாளமாக இன்றும் பலருக்கும் ஒரு முன்னுதரரணமாக விளங்குகின்றது.

„உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வரென“ ஒளவைப் பிராட்டியார் சும்மாவா சொல்லி வைத்தார்.
இங்கு புலம் பெயர் நாட்டிலும் சரி எமது தாயகத்திலும் நாம் ஓடியோடி உழைப்பது எல்லாமே இந்த வயிற்றுக்குத்தான்.
„ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாள் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாள்“,என்று வயிற்றுப் பசியை மேலும் ஓளவையார் நொந்து கொள்ளும் இந்த நிலைமை யதார்த்தமே.அதாவது ஒரு நாளுக்கு உணவை நிறுத்து என்றால் வயிறு கேளாது.ஒரேதாக இரண்டு நாளுக்கு ஏற்றவாறு உண்வென்றாலும் வயிறு ஏற்காது,அப்படியான இந்த வயிறால் நாமெப்படி வாழ முடியும்.அதாவது நேரம் தவறாமல் நாளும் மூன்று வேளைக்கும் உண்ணவேண்டும்.ஆக உணவு உயிர் வாழ்வில் முக்கியமான அம்சமாக எல்லோர்க்கும் உண்டு.
இந்த வயிற்றுப் பசிக்காக நாம் பயிரிடும் உணவு பதார்த்தத்தின் வளர்ச்சியை ஒழுங்காக பயன் படுத்த சூரியன் மிக முக்கிய பாத்திரமாகின்றான்.

நாம் இன்று சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாக கொண்டாடும் அதேவேளை எமது தாயகமாம் தமிழீழத்தில் எமது உறவுகளும்,உற்றார்களும்,சொந்த பந்தங்களும் இந்த நாளை மட்டுமல்ல எந்த கேளிக்கைகளையும்,திருவிழாக்களையும் என்றுமே கொண்டாட கூடியதாக ஈழத்தின் புற நிலை பாடுகள் சாதகமாக இல்லை.

இங்கு நாம் என்னதான் உற்சாகமாகவும்,உணர்வுடனும் இந்த நாளை கொண்டாடினாலும் என்று எமது தாயகத்தில் ஒரு விடிவு பிறந்து
எமது சுற்றம், உற்றம் எல்லாம் முற்றம் கூடி இந்த நாளை சுதந்திரமாக பொங்கி இந்த சூரியபகவானிற்கு படையலுடன் விருந்து படைக்கின்றோமோ! அன்றே ஈழத்தமிழரின் உண்மையான தைப்பொங்கல் திரு நாளாக விளங்கும்.உண்மையில் நாம் இங்கே இன்று மனதில் பெரும் பாரத்துடனே இந்த விழாவை சிறப்பிக்க விழைகின்றாம்.

எனதான உறவுகளே!
உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள் மன நிறைவுடனா இந்த விழாவை புலம் பெயர் நாட்டில் இன்று கொண்டாடுகின்றீர்கள்?
ஆயிரம் இருந்தாலும் எமது இளைய சந்ததிக்கு எமது கலையுடன் கூடிய கலாச்சாரத்தையும் ஊட்டுவிக்க வேண்டிய பண்பாட்டு நாகரீகத்தை மனதில் கெளவ்வியபடி நாங்கள் எமது ஆழாத் துயரத்தையும் ஒரு பக்கம் ஒதுக்கி இந்த விழாவை சிறப்பிக்க கூடுகின்றோம் என்றால் அதிலிருந்தே புரிகின்றது இந்த தைப் பொங்கல் விழாவின் சிறப்பு.

இந்த விழாவினூடாக நாம் எமது இளையதலைமுறைக்கு ஊட்டும் பாடம்
1.நன்றி மறத்தல் நன்றன்று
2எத்தகைய துன்ப துயரங்களிலும் எமது கலை கலாச்சாரங்களை சீராக பேணவேண்டும்.
3.நாளைய விடியல் நல்ல பொழுதாக விடிய ஓயாமல் உழைக்க வேண்டும்.
4.எமது இவ் பண்பாட்டை புலம் பெயர் நாட்டில் வாழும் இளைய சந்ததிகள் ஒழுங்காக பேணுதல் மூலம்
தாயக உறவுகளை நாமும் தொடர்ந்து பேணி எமதான உறவுகளிற்கு நாம் உற்ற துணையாக என்றும் இருப்போம் என அவர்களிற்கு நன் நம்பிக்கை ஊட்டி எமதான தாயக தொடர்புகளை இன்னமும் வீச்சாக்க எம் கரங்களை தாயகம் நோக்கி நீட்டவேண்டும்.
5.அதாவது இளைய தலைமுறைகளிடம் எமதான வேரின் உறவுகளை சீராக பேண இதன் மூலம் வழி வகுத்து அவர்களையும் ஈழம் நோக்கிய பார்வையை விரிவுபடுத்த வேண்டும்..இதுதான் உண்மையும்கூட.

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனமும் தனதான பாரம்மரிய கலாச்சார வடிவமாக சில கலைகள் அல்லது கலாச்சாரங்களை,தனதான பண்பாட்டு விழுமியங்களாக இன்னமும் உள்வாங்கியபடி அதை தனதான அடுத்த சந்ததிக்கு விரிவுபடுத்தியபடியே உலக சக்கரத்தில் அதை சீரும் சிறப்புமாக பேணி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழர்களாகிய நாமும் எமக்கான தனித்துவமான பல கலை,கலாச்சாரம் தழுவிய பண்பாட்டு வினைகளை இன்னமும் பேணி வருகின்றோம்.இதில் சிறப்பு என்னவென்றால் எமது தாயகத்தில் சிங்களவரின் அட்டகாசத்தால் இனவழிப்புக்கு அதன் கோர முகத்திற்கு அஞ்சி அல்லது உயிர் வாழ்வதற்காக புலம் பெயர்ந்த எமது இனம் தனதான புலம் பெயர் வாழ்விலும்,எந்த இக்கட்டான சூழலிலும் எமக்கே உரித்தான சகல பண்பாட்டு விழுமியங்களையும் தொடர்ந்து பேணி அதை இளைய சமுதாயத்தின் மூலம் இன்னமும் வலுவாக ஊட்டி,
அதை அடுத்த தலைமுறைகளிடம் நேர்த்தியாக ஒப்படைத்து மகனே எங்குதான் நீவிர் வாழந்தாலும் உனது வேர், உனது மண்,உனதான சகல சமூகங்களும் ஈழப் பரப்பில்தான் என்பதை இப்படியான விழாக்கள் மூலம் எமதான மூலத்தை வேணி காக்க இந்த விழாக்களும் பல வகையில் உதவுகின்றன.

„திரைகடலோடியும் திரவியம் தேடு“ என்பதையும் தமிழரினம் இன்னமும் கடைப்பிடித்தபடியே வாழ்கின்றனர்.இந்த நிலை கேடுகெட்ட சிங்கள ஆரியனால் எமது சமூகத்திற்கு அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ எமது இனத்திற்கு நிகழ்ந்த அவலம் என்றும் கூறலாம்.எது எப்படியோ? உலக சக்கரத்தில் கச்சதீவைத்தவிர சகல எல்லைகளிலும் தமிழன் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், அவ்வவ் நாடுகளிலெல்லாம் தமது பாரம்பாரியத்தை தர்மமாக கடைப் பிடித்து அதன் படியே ஒழுகி தனதான கலாச்சாரத்தை இன்னமும் வீச்சாக கடைப்பிடித்து தான் தமிழன் எனும் இன வேட்கையை முறையாக ஒழுகுவதால் இன்னமும் அந் நாடுகளில் சிறப்பு பெறுகின்றான்.

எவனொருவன் தன் இனத்தையும்,அதன் மொழியையும் சிறப்பாக கைப்பற்றமறுக்கின்றானோ! அவன் தானாவே தனதான இனத்தில் இருந்து விலகும், அதேவளை உலக மக்களிடம் இருந்தும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டு அனாதையாக அவல வாழ்வையே அவனும்,அவனுடனான அடுத்த சந்ததியும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் கிட்டும்.இது நியதி, இந்த நிலை தமிழனிற்கு மட்டுமல்ல ,எந்த இனத்தையோ,எந்த மதத்தையோ,எந்த நாட்டையோ சார்ந்த யாராகினும் அவர்க்கு இது எழுதப்படாத ஆனால் கிடைக்கும் கீழ் நிலை தேர்வு இவ் அவல வாழ்வாகும்.இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

இந்த வகையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களாகிய நாம் இங்கு பிறந்திருந்தாலும், எமது சிறார்களை பெற்றோர்களும், ஆசான்களும் அவர்களை நல் வழிப்படுத்தி எமதான பாதையை ஒழுங்காக நெறிப்படுத்தி இப்படியான எமது பண்பாட்டு விழுமியங்களை அவர்களிற்கு போதித்து வெறும் பார்வையாளனாக இல்லாமல் பங்காளனாக தமிழீழச் சமூகத்துடன் ஒற்றி அவர்கட்கு எமது மொழியின் சிறப்பையும்,அதன் கலையின் தாக்கத்தையும் சீராக புலப்படும் வகையில் எடுத்தியம்பி, நாம் தொடர்ந்தும் எமது கட்டுமானமான பண்பாட்டை சீராக கடைப்பிடிக்க, இந்த பொங்கல் பெரு விழாவும் உதவிகரமாக விளங்கும் என்றால் அது மிகையாகாது.

ஆகவே எனதான உறவுகளே நாங்கள் எங்கு,எப்படி வாழ்ந்தாலும் எங்களின் இந்த அடி நாதமான பண்பாட்டு, கலாச்சாரங்களை மிகவும் நேர்மையுடனும், கண்ணியத்துடனம் கடைப்பிடித்து நாம் நல் வழிகாட்டலுடன் உலக ஒழுங்குடன் ஏகுவோம்.

மேலும் இந்த ஆண்டு முதல் தைத் திருநாளே தமிழர் தம் வருடப் பிறப்பாக தமிழக அரசு நடைமுறைப்படுத்துகின்றது.ஆக இந்த வருடம் முதல் சித்திரையில் கொண்டாடப்படும் புது வருடப் பிறப்பு இனி இல்லை என ஆகின்றது.இந்த புது வருடப் பிறப்பின்பால் தமிழீழத் தமிழர் தம் வாழ்வில் புது பூம் புனலை சுரப்பிக்கும் என நம்பிக்கையுடன் இவ் விழாவை இனிதாக வாழ்த்தி சிறப்பிப்போம்.

நம்பிக்கைதான் வாழ்வின் ஆதார்சம்,ஆயினும் நாம் அந்த நம்பிக்கையை அத்திவாரமாக அகக்கொண்டு எமதான தாயக தேசியக் கடமையையும் இன்னமும் வீச்சாக முன்னெடுப்போம் .இன்று போல்தான் நாளையும் விடியும், அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை.இருந்தாலும் நாம் இவ் வையகத்தில் பிறந்த நாள்போலதை மகள் பிறக்கும் ஆண்டாக பெரு நாளாக,எமதான ஐ தீகத்துடன் முன்னெடுப்போம்.

வியாழன், 7 ஜனவரி, 2010

உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.



திருவாளர் வீரசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களினுடைய நினைவுசுமந்து.

ஆற்றல் மிகு பெருந் தலைவனை-இந்த
அவனிக்கு அளித்தவரே-உமைப் போற்றி
உறுப்பெழுதும் மறத் தமிழினத்தின்
மாற்றுதலை காணாமல் மறைவெழுதிப்
போனீரோ?
தேற்ற இங்கு யாரும் இல்லை-உம்
துணையை தோற்ற அருகில் யாருமில்லை.
வேற்று கிரக மனிதர்களாய் நாம்-
வேலி இழந்து பரிதவிக்கின்றோம்.

இங்கிதங்கள் சிறிதுமற்ற இராணுவத்தின்
இரும்பு கரங்களில் உம் இறுதி யாத்திரையா?
ஐயகோ!
என அரற்றும் எங்கள் ஆயிலியத்தை
எங்கெறிந்து ஆசுவாசிப்போம்?எம்மவரே
உங்கிருந்த உந்தனது உணர்வுதனை யார் மதித்தார்?
பங்கமது நாளும்,பொழுதுமாய் உன் அங்கமதை
அயோக்கிய கிங்கிதரர்கள் எங்ஙனம் ஆராதித்தார்?
எவர் அறிவார்?

சாதுவான உங்களது சகவாசம் எவர் சுரப்பார்?
ஏதுவான சமர்க் களம் ஏதிலியாய் போனதனால்,
யாது மற்று யாம் யதார்த்தம் யாவும் இழந்தோம்-இன்று
பேத மாற்றும் பேய்க் குழிக்குள்,
பெருமிழவாய் தவிக்கின்றோம்.

ஊத பகை சாயும் இந்த ஊற்று இனி சுரக்கும்.
வேதம் எழுதிய எங்கள் வேதினியர் எழுவர்-இந்த
பாதம் வரை பாதகரை படு குழிக்குள் பரவ
பாதை அவர் வகுப்பர்.பகலவன் பாதை விரியும்-அந்த
பகுப்புக்கள் பாரில் தெரியும்-பார்த்தனின்
மெளன மொழி விழிக்க!

யாவும் இங்கு யதார்த்தயாய் பதிவெழுதும்-இது
சாவும் பொழுதாக உதிர்ந்தன உயர்வெழுதும்.
பூவும் புதுமலராய் பூம்புனல் பூக்கும்-புவி
நீவ காவியம் களிப்பெழுதும்-இவை
யாவும் இயங்கும் இனிதான மலர்வாய் இகம்
இதை வரையும்.

ஐயனே!
உந்தனது அந்தி பொழுதில் என்ன பாடல் இசைத்தீரோ?
"மா" வீரனை பெற்றதால் மகிமையாய் அதை இழைத்தீரோ?
இல்லை ஊழ்வினையென உந்தன் உதிரம் உயிர்க்க,
தொல்லை அகன்று தோகை விரித்தீரோ?வல்லை
மண்ணில் வகுத்த வாரியன் வகை வகுப்பானென!
புண்ணியமெழுதிப் போனவரே-உந்தன்
புன்னைகையின் பொற் பாதம் உந்தன் வீர
புதல்வனால் உயர்வு சொரிய உதயமாகும்.

நிறைவாக நிவிர் துயில- பிறையாக
நுதல்கள் நிமிர -
உறவான உறவுகள் உயிர்க்கும்-உங்கள்
உளக் கனவு உயர்வு சொரியும்.
துறவான தூயவர் துலங்க உறங்கும்-
உங்கள் உயர்வான கரங்களால்
உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.

புதன், 6 ஜனவரி, 2010

பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.


உள்ளத்தில் ஒன்று வைத்து புறமொன்று பேசும்
கள்ள மனதின் கருமாந்தர்களே!
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
கழிவுகளாக உந்தன் காலமது கழிந்து விடும்.
பள்ளத்திலே உந்தன் பாதடிச் சுவடுகள்.

உள்ளும்,புறமும் உரசாமல்
துள்ளும் நெஞ்சமது வேண்டும்,அஞ்சாமல்
மனமது விரித்து ஆளுகின்ற ஆற்றலதுவும் வேண்டும்.
தோற்றமதில்,மாற்றம் மகிமை சுரக்க வேண்டும்.
ஊற்றெடுக்கும் உறவதனில் ஊசாத உறுப்பு உறையவும்,
தேற்றமது தெள்ளறிவாய் தேறவும்,சாரவும்
சரம் சேரவேண்டும்.

மெள்ளவும் முடியாமல்,கொள்ளவும் முடியாமல்
கோர்த்து நிற்கும் கோரம் குலைய வேண்டும்.
மெளனமாக வஞ்சிக்கும் வரைபுகளும்,
உதவும் தருணத்தில் விலகும் வியாக்கியானங்கள்
விலகவும் வேண்டும்.உலவும் உள்ளங்களில்
களிப்பெழுதும் கலை வேண்டும்.ஆக
கற்றதனால் ஆன பலனென்கொல் என்பதை
ஆசுவாசமாக பற்றவும் வேண்டும்.

பயன் பிறர் அடைய பற்றுதலும்,
மயன் கொள்ளா மாற்றுதலும்,
துயரெறிய தூக்கிவிடும் துடிப்பும்,மற்ற
மானிட மார்க்கமும் மனப்புற மடிப்பும் வேண்டும்.
ஊனிடும் உறவும்,கூனிட நிமிர்வும்,தானிட
தர்மமும் தரணியில் தரமாய் வேண்டும்.
இடு என்று இல்லா இறையிடம் இறைஞ்சல்
இதய பூர்வமாய் தவிர்க்கும் தர்மமும் வேண்டும்.

உனதான இதயக் கதவுகளை இது சாரும்-
தனதான இருப்புக்களும் இனம் சார் உறவுகளிற்காய்,
விரிக்கும் விசாலமது வியாபிக்க,
தரிக்கும் சாந்தம் சார சகமான உற்றத்திற்காய்,
உதவும் உயர்வும்,
உனதானதாக உளம் சிறக்க வேண்டும்.

மற்றெல்லாம் இந்த மகிமை மையிக்க,
தான் தோன்றும் சாலச் சிறக்க,என் வீட்டு-
முற்றத்தில் தினம் சுரக்கும் போதெல்லாம் இவை
மற்ற வீட்டு மனைகள் திறக்க மனம் கெளவ்வும்.
மானிடம் உயிர்க்கும்,மாதவம் மனந்திறக்கும்.

தூவ,மனிதம் தூவ ஏது இங்கே பாவ,புண்ணியம்?
பாவ, இவை பாவ பரவும் இங்கே செளபாக்கியம்,
இருப்பதை இல்லார்க்கு இணங்கி இலக்க,
செருக்கது அகலும்,செல்வாக்கு செழிக்கும்-
உருக்கது இழகும் இயக்கம் இங்கே இமயமாகும்.
ஒற்றுமை ஒற்ற வேற்றுமை விலக,
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
பற்றுவோமா?

இல்லை
பரிதவிக்க எங்கள் உறவெல்லாம்
பரிதவிக்க விற்போமா?
விலை போவோமா?
எங்கள் பவ்வியங்களை எல்லாம் பரமன் பா(மா)ண்பென??-

ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்,
உத்தமர்களே உலக வலத்தில் வாசகமாக,
கள்ளமொன்றும் அறியாதாராய் கதைகள் பல,
அளந்திடும் பக்தர்களாய் பல அரிதாரம்.

யாரும் இங்கு உத்தமர்களல்ல!
முகத்திற்கஞ்சி வேசையாடும்,
முகத்திரை மூடும் முகையர்களே!
அகத்திரையை என்றேனும் ஆழத்
திறந்திருந்து அமைதியாய் சிந்தித்ததுண்டா?

ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
கவ்வும் உங்கள் கனதியை எண்ண!
சுய பரிசோதனையை என்றாவது சுகித்ததுண்டா?
அப்போதாவது ஆத்மாவை திறந்ததுண்டா?

இப்போதாவது இதயத்தை திறவுங்கள்-அங்கு
சித்தம் கலைக்கும் பித்தம் பிதிர்க்கும்,
சொப்பனங்கள் விலக விழியுங்கள்.அஃதின்றி
ஒவ்வொன்றிற்கும் ஓராயிரம் காரணம்
கற்பித்தலை, அந்த கயமையை சித்தம் விலத்தி
வீசி விசுறுங்கள்.

ஒவ்வொரு தாக்கத்திலும் மறு தாக்கம் உண்டு.இதை
மானசீகமாய் மையித்தே இருஙகள்.
உள்ளத்தை திறந்து உண்மையை கூறு
அவ்வியம் அகன்ற அவலத்தை நினைத்து.
ஊடுருவும் ஒவ்வொரு இழப்பை இழைத்து.

தன்னைப் போல மற்றவனை மதிக்க,
உன்னால் ஆகும் உளமதை திறக்க.
சொன்னால் புரியும் சொந்தங்களை எண்ண
சினங்களை உறக்க,சுயநலன்கள் விலக்க
மனங்களை என்றும் மதியூகமாய் மனைக்க.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,

வல்ல பகை சாய்த்தான்-வாகை
பல வகுத்தான்-வெல்ல இனி
வகையற்ற பகை-
ஆயுத மெளனித்தலை,
தேசத்தின் சேதம் அகற்ற பேசித் தீர்க்க,
பேராண்மையுடன் பேரமகற்றி பெரும்-
போர் நிறுத்தம் யாசித்தது.

ஆயுத மெளனித்தலை ஆழமாக ஆக்க,
அனுசரணை வேண்டினான் ஆதவன்.
ஆதங்கமது மையிக்க ஆரோக்கியம் ஆரோகணிக்க!
அவனியில் சில நாடுகள் நாடின.
ஆயின்!

சில அசைவுகள் அயல் நாடுகளில்,
அவை அமைத்த ஆசுவாசமான ஆயத்தத்துடன்-

ஆயினுமென்ன?
அனுசரித்த எந்த அவயங்களையும் ஆக்கவில்லை.
நேர்மைத் திறனகற்றி நேத்திரங்கள்.
எந்த அசைவை ஆக்கும்?
நேரங்களை,காலங்களை-
கருக்கி ஆரியர் ஆயுதகொள்வனவிலும் ஆட்பலத்தையும்
பயிற்சியையும்,
நவீன படைக் கலங்களின் கட்டுமானத்திலுமே
ஆசிய நாட்டில் மட்டமன்றி,
ஐராப்பிய அங்கத்திலும்,அமெரிக்க மட்டத்திலும்,
அகமாக அதீதமாக ஆரோகணித்தன.

சுமூகமான,
நேர்மையான வழியில்-
சிறீலங்கா பயணிக்க மறுப்பதை தலைவன்-
தரணிக்கு சாற்றியதை எந்த சாதகனும்,
சிரக் கொள்ளவே இல்லை.

இங்குதான் எங்கள் இயக்கத்தில் கிழக்கின்,
பெருந்தளபதியாக கருணா என்ற கயவன்
எட்டப்பனாக மாற்று வேடம் ஏற்க
கிழக்கில் என்னதான் நடக்குது என்று இயக்கத்திலே
தடுமாற்றம்.
பிரதேசவாதம் பேசினான் ஊருக்குள் பிரச்சனையை
எந்த பிம்பமும் இன்றி மக்களிடம்
வடக்கத்தான்,கிழக்கத்தான் என ஏதேதோ
பிள்ளையான் என்ற பிரகிருதியுடன்
தமிழர் பிணம் மீதேறி!

என்னதான் தலைவன் ஆக்கமான முடிவெடுத்தாலும்,
பிளவும்,முறிவும் எங்கள் தளத்தில்
பெரிதாக உடைப்பெடுத்தது
என்னவோ உண்மைதான்,
என்றாலும்
அதுவும் ஒரு பாரிய இழப்பே.

யாரென்ன கூறினாலும்!
இந்த இரண்டகனால் எங்கள் களத்திலும்,புலத்திலும்,
ஈடற்ற பின்னடைவே எவர் எதை சாற்றினாலும்.

ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
மாட்சி மிகுந்த எங்கள் மக்கள் படை,
சுதாகரிப்பை ஏற்கனவே எதிர்பார்த்ததினாலும்,
ஏற்கனவே ஒப்பந்தத்தின் பிரகாரம்-
தற்காப்பு சமரை மையப்படுத்தி களங்களில்-
இயன்றவரை மட்டுப்படுத்திய தாக்குதலை மேற்கொள்ள---

கிழக்கில் பெரும் ஆரவாரமாக, அட்டகாசமாக
மிகப் பெரும் படை நகர்வை மிலேச்சத்தனமாக
மனித நாகரீகமகற்றி
மகிந்தா தொடர ------(தொடரும்)

சனி, 2 ஜனவரி, 2010

கடவுள் செய்த பாவம்.

அப்பனே! முருகா!-அனந்தனே!
சித்தனே! கச்சி ஏகாம்பனே! முத்தனே!
எத்திக்கும் எழுந்த எம் பெருமானே!
சித்திக்கும் வரம் தந்து, சிரஞ்சீவி
வாழ்வு தந்து, நாளும்,பொழதும்
எமை நயமாக காப்பாற்று என்று நா
நயந்து தொழுத வேளை விலக --

ஆலய நடைதனை, ஆழத் தாளிட்டு,
அக்கம் பக்கம் அனைத்தையும் நோட்டமிட்டு
நிம்மதியாய் போகின்றார்
ஆண்டவனை காப்பாற்றி.
ஆயாசப் பெருமூச்சில்
அத்தனை ஆதங்கம் அவனிற்கு அணிந்த
அத்தனை பொன்னகையையும்
எப்படி போற்றுவதென்று?

மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!


உனக்குள் இருக்கும் ஒருவனை தேடு -உன்
மனைசை திறந்து உண்மையை நாடு -பொய்
உரைப்பதை மறந்து நியாயத்தை பாடு -திரை
கதவினை அகற்றி திறனை எடைபோடு.

எத்தனை நாள் இன்னும் பொய்யிற்குள் வாழ்வாய்-நீதி
மறைத்தினி எவ் மன்றத்தை ஆள்வாய்?உன்
உதட்டினில் உதிரும் உறக்கத்தை மாற்றி மெய்
மெருகேற்றி உயிர் மொய்ப்பட வாழ்வாய்.

சித்தனைத்தும் நீ சிரமப்பட வேண்டாம்-
உய்த்தனைத்தே உளம் சிறப்புற வாழ,
மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ-
மேதினியில் சிறப்புடன் வாழ உற்ற உறவதை,
ஏந்தி உலகை கற்றிட நீ கைத்தலம் பற்று.

அப்பனே,சண்முக என்று தினம் வேடங்கள் பூண்டு- சிலர்
அருகமர்ந்து எனை காத்திடு என்று சித்தம் பதற மேனியை-
உருக்கி பின்,
என்னை நன்றாய் காத்திடு என்று கல்லதை,
கலக்கலாய் கனகச்சித வேடம் பூத்து,
நெஞ்சது என்றும் சுயநலம் வகுக்க சூத்திரமாக,
தேவாரத்தை வார்ந்து, நயந்து
பக்தி எனும் பாதையை பகுத்து அதில் சித்தமெல்லாம்-என்
சிவனே என்று எத்தனை காலம் நீ ஏனத்தை ஏய்ப்பாய்.

பசிக்கு உணவு,நோய்க்கு மருந்துபோல்
கவலைக்கு காரணம் கண்டிட வேண்டும்.
கலக்கமது உன் கைகளில் கலந்தால் கல்லான சிலைகள்
கலக்கத்தை கலைக்காது.இது மெய்யென-
அறிந்து, மேனியை வருத்தி, ஊனது உருக்கி,
உண்மையை உணரு.

நாடு அதை நாடு,
நாட வேண்டியதை என்றும் நாடு.
தேடலது உன் தேவையை நிவிர்த்திக்க,
தேகமது இவ் தேசத்தில் ஊரும் வரை-உன்
தேடல்கள் உலகில் தேயாமல் தேடவேண்டும்.

சும்மா இருக்க சோறு வராது- நீ
அம்மா என்றாலும் அமுதம் வராது.
இம் மாநிலத்தில் போராட்டமே வாழ்வு அது
எம் மாநிலமாயிருந்தாலும் இதுவே வாழ்வு.

குடியிருக்க, குந்த குறு மண் வேண்டும்-அது
மடியிருந்தால் அதன் மகிமையே யாண்டும்.
படிதாண்டி நீ பாரதில் இருக்கும் பாரத்தை
குறைக்க உன்தாய் மடியான தாயகம் தேடு.

வித்தாக வீழ்ந்த சொத்தான எங்கள்
சோதியரின் சொப்பனம் மறவாதே-எங்கு நீ
வாழ்ந்தாலும்,வீழ்ந்தாலும் அந்த
கல்லறை மேனியரின் காத்திரம் மறையாதே.

சில்லறைத் தனமாய் சிதைந்து போகாமல்,
மெல்லென அவர் யாகங்கள் போற்றி,
வில்லாளனாய் நீ விரிய வேண்டும்-எங்கள்
எல்லாளனின் எண்ண கதவினை யாக்க.

வலைப்பதிவு காப்பகம்