திங்கள், 11 ஜனவரி, 2010

பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.


பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.

தமிழர்களாகிய நாம் இந்த விழாவை ஏன் விமர்சையாக கொண்டாடுகின்றோம்?தமிழர்க்கும் இந்த பொங்கல் விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இதன் சிறப்பு யாது?

இந்த உலகில் உயிரினம் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை சூரியனிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்றன.ஆம் இந்த அகிலத்தின் அசைவை நிர்ணயிக்கும் மூலகாரணியே சூரியன் என்றால் அது மிகையாகாது.
சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்தே இந்த பஞ்சபூதங்களின் அசைவு இயங்குகின்றது.
ஆம்! இந்த பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என்பன சூரியனின் சூட்சுமங்களில் இருந்தே இயங்க ஆரம்பித்தன என்பது ஆதாரபூர்வமாக பல அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.இதுவே யதார்த்தமும் ஆகும்.
ஆக சூரிய ஒளியின் கதிர்களால் இந்த பூமி இன்றும் இயங்கிகொள்கின்றது.

அதன் அசைவின் இலங்கல்களில் மழையும்,காற்றும் எம் வாழ்வின் இன்றியமையாத கூறாக உள்ளது.மனித மற்றும் எந்த சீவராசிகளிற்கும் உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாகும் .மண்ணில் தாவர,மற்றும் எந்த உயிர்களின் வளர்ச்சிக்கு உணவு வேண்டும்.

பூமியில் உணவாக மிருகங்கள் மிருகத்தையும்,சில விலங்குகள் தாவரத்தையும்,வேறு சில உயிரினங்கள் இவ் இரண்டையும் உணவாக உட்கொள்கின்றன.அந்த வகையில் மனித இனமான நாங்களும் இந்த இரண்டு வகையான உணவையும் உண்கின்றோம்.

மண்ணில் உள்ள பலவிதமான கழிவுப் பொருட்களும் தாவரத்திற்கும்,மரத்திற்கும் பசளையாக அதாவது உணவாக அமைகின்றது.
இந்த உணவு மண்ணில் உற்பத்தியாக,தாவர மற்றும் யாவற்றிற்கும் சூரிய ஒளி வேண்டும்.
ஆக உலக வாழ் சகல உயிரினத்திற்கும் உணவு உற்பத்திக்கு சூரியனின் மிகப் பெரிய தேவையாக உள்ளது.
எனவே உணவு உற்பத்திக்கு சூரயனின் அளப்பரிய பங்களிப்பை மனதில் கொண்டு சூரியனிற்கு நன்றி செலுத்து முகமாக தமிழன் இந்த நாளை தேர்ந்தெடுத்து ஆதவனிற்கு தன் ஆகக்கூடிய மனித நேயத்தை காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளே தைத் திருநாளாகும்.

இன்னமும் விளக்கிக் கூறின் மழையையும்,சூரியனையும் நம்பி தனதான வயல்களில் நெற் பயிரை விதைத்து அதன் பலாபலனை அதாவது அறுவடை செய்த முதல் நெற்கூற்றை ஒரு பானையில் பொங்கி அதை அமுதாக ஆதவனிற்கு படைத்து தன் சுற்றம் சூழ மகிழ்வாக இருத்தலை தனது பண்பாக, தனதான இனத்துடன் சேர்ந்து ஆதி முதல் இன்றுவரை கொண்டாடி வரும் இத் திருநாளே தைத்திரு நாளாக இன்று நாம் கொண்டாடும் நாளாகும்.இது தமிழரின் கலாச்சாரத்துடன் தொக்கி எமது அடையாளமாக இன்றும் பலருக்கும் ஒரு முன்னுதரரணமாக விளங்குகின்றது.

„உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வரென“ ஒளவைப் பிராட்டியார் சும்மாவா சொல்லி வைத்தார்.
இங்கு புலம் பெயர் நாட்டிலும் சரி எமது தாயகத்திலும் நாம் ஓடியோடி உழைப்பது எல்லாமே இந்த வயிற்றுக்குத்தான்.
„ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாள் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாள்“,என்று வயிற்றுப் பசியை மேலும் ஓளவையார் நொந்து கொள்ளும் இந்த நிலைமை யதார்த்தமே.அதாவது ஒரு நாளுக்கு உணவை நிறுத்து என்றால் வயிறு கேளாது.ஒரேதாக இரண்டு நாளுக்கு ஏற்றவாறு உண்வென்றாலும் வயிறு ஏற்காது,அப்படியான இந்த வயிறால் நாமெப்படி வாழ முடியும்.அதாவது நேரம் தவறாமல் நாளும் மூன்று வேளைக்கும் உண்ணவேண்டும்.ஆக உணவு உயிர் வாழ்வில் முக்கியமான அம்சமாக எல்லோர்க்கும் உண்டு.
இந்த வயிற்றுப் பசிக்காக நாம் பயிரிடும் உணவு பதார்த்தத்தின் வளர்ச்சியை ஒழுங்காக பயன் படுத்த சூரியன் மிக முக்கிய பாத்திரமாகின்றான்.

நாம் இன்று சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாக கொண்டாடும் அதேவேளை எமது தாயகமாம் தமிழீழத்தில் எமது உறவுகளும்,உற்றார்களும்,சொந்த பந்தங்களும் இந்த நாளை மட்டுமல்ல எந்த கேளிக்கைகளையும்,திருவிழாக்களையும் என்றுமே கொண்டாட கூடியதாக ஈழத்தின் புற நிலை பாடுகள் சாதகமாக இல்லை.

இங்கு நாம் என்னதான் உற்சாகமாகவும்,உணர்வுடனும் இந்த நாளை கொண்டாடினாலும் என்று எமது தாயகத்தில் ஒரு விடிவு பிறந்து
எமது சுற்றம், உற்றம் எல்லாம் முற்றம் கூடி இந்த நாளை சுதந்திரமாக பொங்கி இந்த சூரியபகவானிற்கு படையலுடன் விருந்து படைக்கின்றோமோ! அன்றே ஈழத்தமிழரின் உண்மையான தைப்பொங்கல் திரு நாளாக விளங்கும்.உண்மையில் நாம் இங்கே இன்று மனதில் பெரும் பாரத்துடனே இந்த விழாவை சிறப்பிக்க விழைகின்றாம்.

எனதான உறவுகளே!
உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள் மன நிறைவுடனா இந்த விழாவை புலம் பெயர் நாட்டில் இன்று கொண்டாடுகின்றீர்கள்?
ஆயிரம் இருந்தாலும் எமது இளைய சந்ததிக்கு எமது கலையுடன் கூடிய கலாச்சாரத்தையும் ஊட்டுவிக்க வேண்டிய பண்பாட்டு நாகரீகத்தை மனதில் கெளவ்வியபடி நாங்கள் எமது ஆழாத் துயரத்தையும் ஒரு பக்கம் ஒதுக்கி இந்த விழாவை சிறப்பிக்க கூடுகின்றோம் என்றால் அதிலிருந்தே புரிகின்றது இந்த தைப் பொங்கல் விழாவின் சிறப்பு.

இந்த விழாவினூடாக நாம் எமது இளையதலைமுறைக்கு ஊட்டும் பாடம்
1.நன்றி மறத்தல் நன்றன்று
2எத்தகைய துன்ப துயரங்களிலும் எமது கலை கலாச்சாரங்களை சீராக பேணவேண்டும்.
3.நாளைய விடியல் நல்ல பொழுதாக விடிய ஓயாமல் உழைக்க வேண்டும்.
4.எமது இவ் பண்பாட்டை புலம் பெயர் நாட்டில் வாழும் இளைய சந்ததிகள் ஒழுங்காக பேணுதல் மூலம்
தாயக உறவுகளை நாமும் தொடர்ந்து பேணி எமதான உறவுகளிற்கு நாம் உற்ற துணையாக என்றும் இருப்போம் என அவர்களிற்கு நன் நம்பிக்கை ஊட்டி எமதான தாயக தொடர்புகளை இன்னமும் வீச்சாக்க எம் கரங்களை தாயகம் நோக்கி நீட்டவேண்டும்.
5.அதாவது இளைய தலைமுறைகளிடம் எமதான வேரின் உறவுகளை சீராக பேண இதன் மூலம் வழி வகுத்து அவர்களையும் ஈழம் நோக்கிய பார்வையை விரிவுபடுத்த வேண்டும்..இதுதான் உண்மையும்கூட.

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனமும் தனதான பாரம்மரிய கலாச்சார வடிவமாக சில கலைகள் அல்லது கலாச்சாரங்களை,தனதான பண்பாட்டு விழுமியங்களாக இன்னமும் உள்வாங்கியபடி அதை தனதான அடுத்த சந்ததிக்கு விரிவுபடுத்தியபடியே உலக சக்கரத்தில் அதை சீரும் சிறப்புமாக பேணி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழர்களாகிய நாமும் எமக்கான தனித்துவமான பல கலை,கலாச்சாரம் தழுவிய பண்பாட்டு வினைகளை இன்னமும் பேணி வருகின்றோம்.இதில் சிறப்பு என்னவென்றால் எமது தாயகத்தில் சிங்களவரின் அட்டகாசத்தால் இனவழிப்புக்கு அதன் கோர முகத்திற்கு அஞ்சி அல்லது உயிர் வாழ்வதற்காக புலம் பெயர்ந்த எமது இனம் தனதான புலம் பெயர் வாழ்விலும்,எந்த இக்கட்டான சூழலிலும் எமக்கே உரித்தான சகல பண்பாட்டு விழுமியங்களையும் தொடர்ந்து பேணி அதை இளைய சமுதாயத்தின் மூலம் இன்னமும் வலுவாக ஊட்டி,
அதை அடுத்த தலைமுறைகளிடம் நேர்த்தியாக ஒப்படைத்து மகனே எங்குதான் நீவிர் வாழந்தாலும் உனது வேர், உனது மண்,உனதான சகல சமூகங்களும் ஈழப் பரப்பில்தான் என்பதை இப்படியான விழாக்கள் மூலம் எமதான மூலத்தை வேணி காக்க இந்த விழாக்களும் பல வகையில் உதவுகின்றன.

„திரைகடலோடியும் திரவியம் தேடு“ என்பதையும் தமிழரினம் இன்னமும் கடைப்பிடித்தபடியே வாழ்கின்றனர்.இந்த நிலை கேடுகெட்ட சிங்கள ஆரியனால் எமது சமூகத்திற்கு அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ எமது இனத்திற்கு நிகழ்ந்த அவலம் என்றும் கூறலாம்.எது எப்படியோ? உலக சக்கரத்தில் கச்சதீவைத்தவிர சகல எல்லைகளிலும் தமிழன் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், அவ்வவ் நாடுகளிலெல்லாம் தமது பாரம்பாரியத்தை தர்மமாக கடைப் பிடித்து அதன் படியே ஒழுகி தனதான கலாச்சாரத்தை இன்னமும் வீச்சாக கடைப்பிடித்து தான் தமிழன் எனும் இன வேட்கையை முறையாக ஒழுகுவதால் இன்னமும் அந் நாடுகளில் சிறப்பு பெறுகின்றான்.

எவனொருவன் தன் இனத்தையும்,அதன் மொழியையும் சிறப்பாக கைப்பற்றமறுக்கின்றானோ! அவன் தானாவே தனதான இனத்தில் இருந்து விலகும், அதேவளை உலக மக்களிடம் இருந்தும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டு அனாதையாக அவல வாழ்வையே அவனும்,அவனுடனான அடுத்த சந்ததியும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் கிட்டும்.இது நியதி, இந்த நிலை தமிழனிற்கு மட்டுமல்ல ,எந்த இனத்தையோ,எந்த மதத்தையோ,எந்த நாட்டையோ சார்ந்த யாராகினும் அவர்க்கு இது எழுதப்படாத ஆனால் கிடைக்கும் கீழ் நிலை தேர்வு இவ் அவல வாழ்வாகும்.இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

இந்த வகையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களாகிய நாம் இங்கு பிறந்திருந்தாலும், எமது சிறார்களை பெற்றோர்களும், ஆசான்களும் அவர்களை நல் வழிப்படுத்தி எமதான பாதையை ஒழுங்காக நெறிப்படுத்தி இப்படியான எமது பண்பாட்டு விழுமியங்களை அவர்களிற்கு போதித்து வெறும் பார்வையாளனாக இல்லாமல் பங்காளனாக தமிழீழச் சமூகத்துடன் ஒற்றி அவர்கட்கு எமது மொழியின் சிறப்பையும்,அதன் கலையின் தாக்கத்தையும் சீராக புலப்படும் வகையில் எடுத்தியம்பி, நாம் தொடர்ந்தும் எமது கட்டுமானமான பண்பாட்டை சீராக கடைப்பிடிக்க, இந்த பொங்கல் பெரு விழாவும் உதவிகரமாக விளங்கும் என்றால் அது மிகையாகாது.

ஆகவே எனதான உறவுகளே நாங்கள் எங்கு,எப்படி வாழ்ந்தாலும் எங்களின் இந்த அடி நாதமான பண்பாட்டு, கலாச்சாரங்களை மிகவும் நேர்மையுடனும், கண்ணியத்துடனம் கடைப்பிடித்து நாம் நல் வழிகாட்டலுடன் உலக ஒழுங்குடன் ஏகுவோம்.

மேலும் இந்த ஆண்டு முதல் தைத் திருநாளே தமிழர் தம் வருடப் பிறப்பாக தமிழக அரசு நடைமுறைப்படுத்துகின்றது.ஆக இந்த வருடம் முதல் சித்திரையில் கொண்டாடப்படும் புது வருடப் பிறப்பு இனி இல்லை என ஆகின்றது.இந்த புது வருடப் பிறப்பின்பால் தமிழீழத் தமிழர் தம் வாழ்வில் புது பூம் புனலை சுரப்பிக்கும் என நம்பிக்கையுடன் இவ் விழாவை இனிதாக வாழ்த்தி சிறப்பிப்போம்.

நம்பிக்கைதான் வாழ்வின் ஆதார்சம்,ஆயினும் நாம் அந்த நம்பிக்கையை அத்திவாரமாக அகக்கொண்டு எமதான தாயக தேசியக் கடமையையும் இன்னமும் வீச்சாக முன்னெடுப்போம் .இன்று போல்தான் நாளையும் விடியும், அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை.இருந்தாலும் நாம் இவ் வையகத்தில் பிறந்த நாள்போலதை மகள் பிறக்கும் ஆண்டாக பெரு நாளாக,எமதான ஐ தீகத்துடன் முன்னெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்