ஞாயிறு, 6 மார்ச், 2011

இன்று கனடாவில் இருந்து திரு.கார்த்திகேசு தர்மலிங்கம் அவர்களிடமிருந்து எனை பேட்டி காணும் முகமாக சில கேள்விகளை அனுப்பியிருந்தார்.எனவே அந்த வினாக்களிற்கு விடை அளிப்பது எனதான தார்மீக கடமையென எண்ணுகின்றேன்.
எனவே இனி கேள்விகளிற்குள்.
1.உங்களது இளமைக் காலத்தை பற்றி குறிப்பிடுங்களே?

எனது பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் தும்பளை மேற்கு அமைந்தது.எனது தந்தையார் இளைப்பாறிய திரு.முருகப்பர் சுப்பிரமணியம்.எனக்கு 9சகோதரர்கள்.எனது இளமைக் கால வாழ்வு நான் புலம் பெயர்ந்து வரும்வரை தும்பளை மேற்காகவே அமைந்தது.ஆக எனது புலம் பெயர் வாழ்விற்கு முன் எனதான வாழ்வு எமதூரிலேயே கழிந்தது.
நான் இளமை காலத்திலேயே எனதான சுய புத்தியின் வளர்ச்சிக்கு முன்பிருந்தே ஆலயத் தொண்டில் எனது தந்தையாருடன் இணைந்து செயலாற்றியிருந்தேன்.குறிப்பாக கூறின் எமதூரில் உள்ள பெரியதம்பிரான் ஆலயத்தின் சிரமதான பணியினை அன்றே அக்கால குருக்களுடன் சேர்ந்து செய்திருக்கின்றேன்.
கோயிலின் கருவறைமுதல் நீங்கள் தீர்த்தம் ஏந்தி அருந்தும் அந்த கற்கள் வரை சிரமதான பணியினை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்திருந்தேன்.மேலும் சாரத ஆச்சிரமத்தில் சேர்ந்திருந்ததினால் என்னால் அவ்வளவு ஆழமாக இந்த பணியினை செய்யக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பிள்ளையார் கோயிலை சுற்றியுள்ள உப சிறு கோயில்களையும்,கோயிலின் மூலையில் இன்று அனாதரவாக இருக்கும் கோயிலிற்கான கேணியை சுத்தம் செய்தது முதல்
அன்று கோயிலின் தெற்கு புறம் அமைந்துள்ள கிணற்றை (பாவனைக்குகந்ததல்ல என நிராகரிக்கப்பட்ட)சுத்தம் செய்து மக்களின் பாவனைக்கு உகந்ததாக மாற்றியதில் நண்பர்களுடன் சேர்ந்து எனது பணி இருந்ததை மிகவும் காத்திரமான செயல் பாடாக இந்த இடத்தில் குறிப்பிடலாமென நினைக்கின்றேன்.
ஆக எனது இளைமைக் காலமானது ஊருடனும்,எங்களின் சமூகத்தேவையுடனும் இயங்கியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

மிகவும் முக்கியமாக ஆண்டு1976என நினைக்கின்றேன்.எமது ஊரில் எமது மக்களிற்கான "மெய் வல்லுனர் போட்டி" ஒன்றை ஏற்பாடு செய்தது முதல் அதை காத்திரமாக நிறைவேற்றியது வரை எனது ஊரக வளர்ச்சியில் எனதான ஈடுபாடு இலங்கியது.

இணைப்பாக எமதூரவர்களிற்கு மட்டுமல்ல வேறு ஊரவர்களிற்கும் இலவசமாக முறையே கேத்திரகணிதபொறிமுறை வரைதல்,பிரயோக கணிதம்,கணிதம் என்பன இலவசமாவே கற்பிக்கப்பட்டது.இதில் 100ற்கு மேற்பட்வர்கள் பயன் அடைந்தார்கள்.ஆண்டு(1976-1979வரை)பின்னர் களுவாஞ்சிக்குடியில் இருந்து சம்மாந்துறையில் கல்வி கற்ற ஆண்டான 1980--1981 வரை இச் சேவை அங்கும் காத்திரமாக முன்னெடுக்கப்பட்டது.

2.உங்கள் கிராமத்தில் நிர்மாணிக்கப்படும் சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் மிகவும் அக்கறையுடன் செயல்படும் காரணம் யாது?

அது எனது குருதியில் ஊறிய உணர்வாக குறிப்பிடலாமே.மேலே நான் குறியிட்ட எனதான ஊரவருடான வளர்ப்பும் ஒரு காரணம் இல்லையா?மேலும் எமதான முந்தைய தலைமுறை எமதான ஊரிற்க்கு இப்படியான ஒரு பொது நூலகத்தை கட்டாததுவும்,எமக்கான நூலகம் ஒரு சுய கட்டிடம் இல்லாமல் ஆண்டு தோறும் நகர் நிலையில் இருப்பதுவும்,எவருமே அந் நூலகத்திற்கான ஒரு பிடி நிலம் கூட கொடுக்க முன் வராத நிலையில் உங்களின் பெற்றோரின் இந்த காத்திரமான செயல்பாடு எனை இந்த விடயத்தில் இணைய வைத்தது என கூறலாம்.மேலும் கடந்த காலத்தில் இப்படிஒரு எண்ணமோ அன்றி செயல்பாடோ முன்னெடுக்கப் படாத புறச் சூழலும் ஒரு காரணம்.இத்துடன் நூலகம் ஏதோ ஒரு வகையில் இன்னமும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றது.

நான் புலம் பெயர்ந்து ஆண்டு 2009வரை என்னால் இப்படியான ஒரு தொடர்பை எமதூரவர்களுடன் ஏற்படுத்தக் கூடிய சாத்தியமோ,சந்தர்ப்பமோ எட்டவில்லை.அத்துடன் எனதான நிலைப்பாடு இங்கு குறிப்பிட முடியாவிடினும் நாடு சம்பந்தமாக காத்திரமாக இயங்கி கொண்டிருந்தேன்.அது பற்றி இதில் குறிப்பிடத் தேவையில்லையென கருதுகின்றேன்-ஆக எனதான செயல்பாடு நாடு,ஊர் என ஏதோ வகையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.மேலும் தகவல் தொடர்புச் சாதனங்கள் இப்போது போல் அன்றில்லை.

சுருங்கக் கூறின் எமதான நூலக கட்டுமானத்திற்கான காலக் கனிவு உங்களின் பெற்றோரின் நிலக் கொடுப்பனவும்,அதன் பிற்பாடு நூலகத்தின் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பான செயல்பாடும் என்னை இந்த பணியில் இணையவைத்தது.

3.அண்மைக் காலமாக உங்களின் எழுத்துக்கள் கிராம வளர்ச்சி பற்றி இருப்பதேன்?

நாடு தற்போது இருக்கும் நிலைதான்.புரியவில்லையா?
புலம் பெயர்ந்து வாழும் நாம் ஏன் இந்த கட்டுமானத்தை தார்மீகமாக முன்னெடுக்க முடியாதா?பிற நிறுவனங்களிடமோ,அரச சார்பற்ற நிறுவனங்களிடேமோ நாம் ஏன் கை ஏந்த வேண்டும்.அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் எமது சமூகமென்ன இன்றைய நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழா வாழ்கின்றார்கள்.
வீடு,கார்,ஆடம்பர அணிகலன்களுடன் வாழ்கின்றார்கள்.
ஆனால் ஊரில் எமது உறவுகள் அன்றாட வாழ்வூதியத்திற்காய் அயராது உழைத்து வாழும் என் சுற்றம் தங்களின் வசதியை மீறிய பங்களிப்பை நிதியாக அளித்துள்ளார்கள்.தொடர்ந்தும் அளித்துக் கொண்டே உள்ளார்கள்.
புல வாழ் மக்களும் அதே அளவு நிதியையே கொடுத்துவிட்டு,சிலர் ஏதும் இதுவரை கொடுக்காமல் சும்மா கதையளந்து கொண்டு மற்றவர்களை இழிவாக பேசும் மனநிலை களைந்து தமதான காத்திரமான நிதியை கொடுக்கும் சூழலில்வாழ்கின்றார்கள்.எனவே அவர்களையும் உள் வாங்கி நாமே நமது பணியை ஒப்பேற்ற எனதான இந்த எழுத்துக்கள் உதவும் என ஆழமாக நம்புகின்றேன்.
மேலும் நான் மட்டுமல்ல என்னுடன் இணைந்து செயல்பட இன்னமும் பலர் உள்ளனர்.
அதாவது இந்த கட்டுமானப் பணிக்குள் பாராமுகம காட்டும் எம் ஊரவர்களையும் உள் வாங்க வேண்டும்.எனவே அதை முன்னிறுத்தி என்னால் தெரிந்த வரியில் எனக்கு தெரிந்த மொழியை உபயோகிக்கின்றேன்.

4.உங்களின் எழுத்துக்களால் சிலரது மனம் காயம்படுகின்றதாக பேசுகின்றார்களே அதுபற்றி உங்களது கருத்தென்ன?

எவரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.பண்படுத்தி ஒன்றாக சேர்ந்தியங்க அறை கூவலாக என் எழுத்துக்களை பயன்படுத்துகின்றேன்.
மொழி விளக்கம் அற்றிருத்தல் என் பிழையில்லை.ஆகவே தொடரும் என் எழுத்துக்கள் எம் ஊரவரை காத்திரமாக உள்வாங்கும்வரை.

5.சனசமூகத்தின் வளர்ச்சிக்காக நிதி பங்களிக்காதவர்களை நேரடியாக தாக்கி எழுதுகின்றீர்களே இது நியாயமா?

நிச்சயமாக நியாயம்தான்.நான் கேட்பது அயலூரவரையல்ல.எனதூரவரை.அதற்கான எனக்கு தார்மீக உரிமையுண்டு.அதை நீங்கள் குறிப்பிடும் எவராவது என்னிடம் நேரடியாகவே தொடர்பற்றிருப்பது ஏன்?
அவர்களிற்கு தெரியும் அது அவர்களின் தார்மீக கடமையென்று.ஆக தனதான நிதி பற்றிய பங்களிப்பை மறுதலிப்பதற்காக,அல்லது தாமதிப்பதற்காக,அல்லது வேற்று முகம் காட்டி சுயபரிதாபம் சூடுவதற்காக இந்த குற்றச்சாட்டை முன் வைப்பதாகவே நான் கருதுகின்றேன்.
எனக்கு நூலக நிர்வாகம் மூலம் இடப்பட்ட பணியினை முன்னேற்பாடாகவே செய்து முடிக்க விழைகின்றேன்.இது ஒன்றும் தனி நபர் பணியல்லை.ஆகவே எமது சமூக,ஊரவர்கள் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய காலப் பணி.மேலும் நான் யாரின் பெயரையோ,அல்லது உறவையோ குறிப்பிட்டு இன்னமும் ஏடெடுத்து எழுதவில்லை.ஆனாலும் அப்படியான பணி தொடரலாமென எண்ணுகின்றேன்.இது அவர்களின் இயங்கல்களே தீர்மானிக்கும்.

6.ஊரில் இருந்த போதும் சரி,வெளி நாடு வந்த போதும் சரி எந்த பொதுச் சேவையிலும் ஈடுபாடின்றி இருந்த குமார்.இப்போது பொதுப்பணிபற்றி பேசுகின்றாரென உங்கள் கிராமத்தார் சிலர் விமர்சிக்கின்றார் அது பற்றி உங்கள் கருத்தென்ன?

இதற்குரிய விளக்கமான பதில் வினா1 ல் காண்க.கடைசி பதிலிலும் விளக்கியுள்ளேன்.

7.உங்களின் கவிதைபற்றி கூறும்போது பொருளில்லாக் கவிதையென சிலர் கூறுகின்றனர் அதுபற்றி உங்கள் கருத்தென்ன?
என்னால் பேச்சுத் தமிழில் எழுத முடியாது,தமிழை சிலரால் புரிந்து கொள்ள முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.மேலும் நான் கவிஞனோ அன்றி எழுத்தாளனோ இல்லை.அப்படி நான் கருதிக் கொண்டதும் இல்லை.
என் பாணி தனிப்பணி.இதிலஇ தடம் மாறாது தமிழ்.புரியாதவர்கள் தடுமாறுவது தம்மை தாமு இழிவாக்கவதாக நான் கருதுகின்றேன்.கருத்தில்லா ஆக்கமெனில் ஆளுமையான கருத்துப் பதிவாக்கலை இவர்கள் மேற்கொளாதிருப்பதேனோ?
தனிப்பட்ட ரீதியிலோ அன்றி face book மூலமோ இவர்கள் இதை விமர்சிக்காதேன்.ஆக தான் "விளங்காச் சிங்களம் தன் பிடரிக்கு சேதமென்ற" அணுகுமுறை என்னிடம் இல்லை.மேலும் என்னால் இதில் தமிழ் கற்பிக்க முடியாது.இத் தளம் கருத்துக்களை ஆளுமையாக ஏற்கும் தளம்.
ஆகவே புரியதவர்கள் புரிய முயற்சிக்கவும்.அஃதன்றி என்னிடமே நேரடியாக விளக்கம் கேட்கலாம்.எது பிழை?எங்கு எழுத்துச் சறுக்கல்,தமிழ் அது தமிழாக இருக்கும் வரை நாம்தான் தெளிவு பெற முயற்சிக்கணும்.அப்படி என்னில் இந்த குற்றம் சாட்டுபவர்கள் தாமே முன் வைத்து ஒரு சுய விமர்சனத்தையோ அல்லது கிண்டலாகவோ தமது கருத்தை பதிவு செய்யாதது ஏன்?
தனக்கு புரியவில்லையென்பதால் தடமே பிழையென்பது சரியா?
கலகம் பிறந்தால் ஞாயம் பிறக்கும்.இவர்களிற்கு ஞாயமே தெரியவில்லை போலும் அதுதான்.

8.கனடாவில் வசிக்கும் உங்கள் கிராமத்து நண்பன் கிருட்டினனுடன் இதிகாச விடயங்களில் மோதுவது ஏன்?

சிந்திக்கும் சுய திறனும்,ஏற்புடையதற்ற விடயங்களை வெளிக்கொணரவேண்டிய தேவை காரணமாக.திணிப்புக்களை இதிகாசமாவோ,புராணமாகவோ விழுங்கும் காவி மனப் பான்மை என்னில் அறவே அற்றதால்-எமக்குள் இந்த நாகரீகமான மோதல்.அவ்வளவே.
மேலும் கற்களை கடவுளாக ஏற்கும் சுய திறனற்ற,சுய தேடலற்ற மானுடமாக வாழ விருப்பகற்றி--இன்னமும் கூறிக் கொண்டே போகலாம்.தேவையற்றதென நினைப்பதனால் இதை அப்படியே விடுவோமே.

9.அண்மையில் கனடாவில் நடந்த கலந்துரையாடல் பற்றி நான் வெளியிட்ட எனது "பார்வை"
பற்றி நீங்கள் எழுதிய விமர்சனத்தில் "குறவர்காலத்தில் வாழ்கின்றார்களா"?என்று நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தபோது இந்த சாடல் ஒரு ஆரோக்கியமானதாக என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.மேலும் இந்த வார்த்தை பிரயோகம் என்னை மிகவும் புண்பட வைத்தது இதற்கான உங்களின் பதில்?

விமர்சனம் என்பது ஒரு சமூகக் கோபமாக வெளிவரும் போது இப்படியான வார்த்தைகள் தானாகவே வெளிவருவது இயல்பே.அங்கு நடந்த உரையாடலில் சிலரின் கேள்வியே என்னை
இப்படி எழுத வைத்தது.ஆக "குற்றவாளியை விட குற்றம் செய்ய தூண்டியவரே தண்டனைக்குரியவர்".
எனவே இந்த குற்றச் சாட்டு என்னை சாராது.இந்த வார்த்தையின் வெளிப்பாடு.சில புறச் சூழலின் வெளிப்பாடே தவிர அக வெளிப்பாடல்ல.பலவிதமான சிந்தனையின் பின்பே இவ் வார்த்தையை பிரயோகித்தேன்.ஆக இழைக்கப்பபட்ட எழுத்தை திரும்ப பெற முடியாத நிலையல் நான் உள்ளேன்.மேலும் இதனாலான தாக்கமென்ன? உண்மையைத்தானே குறிப்பிட்டேன்.இது கேள்வியாக இருந்ததே தவிர அப்படித்தான், என நான் சொல்லவோ குறிப்பிடவோ இல்லை.எனவே மீண்டும் தெளிவாக வாசிக்கவும்.அர்த்தம் தெரியும்.
ஆக இது புரியவைக்க எழுதப்பட்ட ஆளுமையான வெளிப்பாடு.

10.உங்களது கிராமத்தில் நிறை கல்விமான்கள் இருந்தும் கிராம வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ஒதுங்குவதேன்?

மிகவும் காத்திரமான கேள்வி இதற்கான தேடலில் நானும் உள்ளேன்.பதிலாக பின் வருபவை அமைகின்றதோ என்ற ஐயப்பாட்டில் நான் உள்ளேன்.
1.சுய நலம்
2.எனக்கேன் என்கின்ற வெளிப்பாடு.
3.பொருளாதார நிலமை.
4.ஒற்றுமையற்ற இயங்கல்.
5.தான் பெரியவன் என்கின்ற சுய கெளரவம்.
6.சமூக விளிப்புணர்வற்ற தன்மை.
7.தன்னை சுற்றியே போட்ட வலைப்பின்னல்.
8.கலட்டியான்,வலிகாமத்தான்,பிலாவடியான்,கோந்திரம்பத்தையான்
தோட்டம் பிள்ளையான்,பரியாரி வளவான்.காரைக் கலட்டியான்.என இப்படியான ஏற்றத் தாழ்வோ என எண்ணகின்றேன்:
மேலும்
பரம்பரையில் தமது சகோதரர்களடனான ஒற்றுமையின்மை.

இன்னமும் தெளிவான சமூக விளிப்புணர்வற்ற சமூக காவி மனப்பான்மை.
இப்படியான நிலையென கருதுகின்றேன்.மேலதிகமாக வெளிப்படுத்த விருப்பமில்லை.
எனினும் சிவப்பிரகாச வித்தியாசாலையின் தோன்றலிற்கு காத்திரமான பங்களிப்பை நல்கியிருந்தார்கள் என்பது மறக்க முடியாத,மறைக்கக் கூடாத யதார்த்தம்.
இல்லையென்றால் எமது ஊரில் சிவப்பிரகாச வித்தியாசாலையேது?

மேலும் ஏதோ ஒரு வகையில் இன்னமும் நூல் நிலையம் இயங்குவதென்பதுவும் மறுக்க முடியாத உண்மையில்லையா?


11.பாரதியின் வாய்ச்சொல்லில் வீரரடி என்ற சொல் யாருக்கு பொருந்தும்?

என்னை வில்லங்கத்தில் மாட்டுவதாக எண்ணமோ?மன்னிக்கவும் பதில் காலம் பொறுத்து வெளிவரும்.அதற்காகவே ஒரு ஆக்கமும் வெளியிட உள்ளேன்.அப்போது அதற்கான பதிலை பெறுவீர்கள்.

12.கனடாவில் வாழும் எமதூரவர்கள் பற்றி விமர்சனம் செய்வது முறைகேடான விடயமென உங்கள் நண்பரொருவர் குறிப்பிட்டார் அது பற்றி உங்களின் நிலைப்பாடு?

ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகின்றேன்.இந்த உலகில் எந்த மூலையில் வாழும் எனதூரவனை விமர்சிப்பதற்கு எனக்கு உரிமையுள்ளது.அதாவது தானாகவே என்னிடம் நேரில் முறையிடும் வரை வரையறையுடன் எனது இந்த கருத்து தொடரும்.மேலும் என்னுடன் யாரும் தொடர்பை ஏற்படுத்தவில்லை.இது பொதுவான,எமது ஊர் சார் விடயம்.சிலரிற்கு விடயங்கள் தெரியாமல் இருக்கலாம்.தெரிந்தவர்கள் பாராமுகம காட்டலாம்.காட்டுபவர்களையும் காட்டமாக இலங்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டுள்ளது.ஏனெனில் இது எமது காலக் கடமை.எமது முன்னோர்கள் செய்த பிழையை அல்லது தவறை என்னுடைய தலைமுறை தவிர்க்க அல்லது வேற்று முகம் காட்டி புறம் செல்வதை அனுமதிக்க முடியாது.ஆகவே தற்போதைய நிலையை விளக்கி நாம் எல்லோரும் சேர்ந்து இயங்கி இந்த கட்டுமானத்தை நிறைவேற்றும் வரை இது தொடரும்.தவிர்க்கவோ,ஒத்தி வைக்கவோ முடியாத காலக் கடன்.
இதை தற்போது வாழும் இளைய தலைமுறையிடமோ,எதிர் காலத்தில் வரும் சந்ததியிடமோ ஒப்படைத்து நாம் தப்பிக்க முனைவது மனிதாபமான செயலும் இல்லை.

எம்மால் இப் பணியை செய்து முடிக்கக் கூடிய வல்லமையும்,பொருளாதரா கட்டுமானமும் தாராளமாவே உள்ளது.இது யதார்த்தம்.
என்ன சிலரிற்கு தனம் தரும் மனம் இல்லை.அதற்காக அவர்களை புறம் தள்ள முடியாது.முடியுமானவரை எல்லோரையும் உள் வாங்கி செயல்பட வேண்டியுள்ளதால் இந்த செயற்பாடு.நான் கனடாவில் உள்ளவர்களை மட்டும் எதிர்பார்க்கவில்லை.இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் வசிப்பவர்களுடன் தொடர்பில் உள்ளேன்.
ஆயினும் உங்குள்ளவர்களே கூடுதலாக எமதூரவர்களாக உள்ளபடியினாலும்,எனது நண்பர்கள் என்பதானாலும் எனது செயல்பாடு உவ்விடம் குடிகொண்டுள்ளது.மற்ற நாட்டில் வாழுபவர்களின் நிதியும் நூலகத்தை சேர்ந்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே முறைகேடென்று ஏதும் இல்லை.ஆயின் சம்பந்தப்பட்டவர் என்னுடன் தொடர்பு கொள முனையாதது ஏன்?எனது தொடர்பூடகம் எப்போதும் திறந்த நிலைியிலேயே உள்ளது.ஆனால் யாரும் எந்நேரமும் என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


13.உங்களின் ஆரோக்கியமாக கருத்துக்களிற்கு யாரும் தடை சொல்லவில்லை.சில சந்தர்ப்பங்களில் சமூகத்தின் மேலுள்ள வெறுப்பால் கடுமையான சொற்களை பிரயோகிப்பது தவறில்லையா?

நிச்சயமாக இல்லை.நான் எவரையும் நேரடியாக சாடவில்லை.நீங்களே அதை குறிப்பிட்டும் உள்ளீர்கள்.சமூக கோபம் தவிர்க்க முடியாதது என்ற உண்மையை நீங்களே ஏற்றுக் கொள்ளும்போது சில சமயம் சில ஆரோக்கியமான வார்த்தைகள் கடுமையான சொற்களாக பார்க்கப்படுகின்றது.இதுதான் உண்மை.கசப்பதால் அது நஞ்சாகாது.

14.ஊர் எப்படி இருந்தாலென்ன என் வங்கி கணக்கு சரியாக இருந்தால் போதும் என நினைப்பவர்கள் பற்றி?

தான் பிறந்து,தவழ்ந்து,நடைபயின்று,கல்வி கற்ற முற்றத்தையும்,எமதான சுற்றத்தையும் எண்ணி செயல்படுவதே சாலச் சிறந்ததாகும்.
சுய நலமாக வாழுவது பற்றி கருத்துக் கூற நான் வரவில்லை.அதில் கொஞ்சமேனும் பொது நலத்தையும் சேர்த்து வாழுங்கள்.வெறும் பணம் உன் ஆத்மார்த்தமாகாது.ஆடம்பரமாகவோ,பெரு வசதியாகவோ வாழ்வது உங்களின் தெரிவு.அதுபற்றி நான் மிகவும் சந்தோசமாக ஏற்கின்றேன்.அதே சமயம் எமது ஊரை உள்ளத்தால் ஆத்மார்த்தமாக நினைத்து ஒரு சமூக கடமையாக செய்யுங்கள்.சும்மா எதிர்கால கனவு காணாமல் நிகழ்காலக் கடனாக இந்த நூல் நிலைய கட்டுமானப் பணியை ஏற்று செயல்பட இந்த வங்கி கணக்கில் மட்டுமே கவனம் செலத்தும் எம்மவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் இன்று உனதான இந்த வாழ்விற்கு மூல காரணமே நீ பிறந்த எமது ஊர்தான் என்கின்ற நன்றியுணர்வாவது வேண்டும்.இதற்கு மேல் நான் எதை கூற.
உணர்வு தானாகவே வரவேண்டும்.அல்லது மற்றவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அதுவுமன்றி தனதான பெருமைக்காகவேனும்,பொது விடயத்தில் ஆளுமையாக கவனத்தை செலுத்த வேண்டும்.
இஃதும் அற்றோர் செத்தோரே.

15.உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்?

ஆம்.நான் முதலி்ல் குறிப்பிட்ட எமதூரில் நானும்,அருந்தவராசா(வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டார்)மொறிசன் சேர்ந்து எமது வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள வயல் வெளியில் ஒரு மாபெரும் "மெய்வல்லனர் போட்டி" நடத்தி காட்டியது.மிகவும் பிரமாண்டமாக அதை நடாத்தி முடித்தோம்.அன்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு.காராளசிங்கம் இந்த வயல் மைதானத்தை பொதுவான விளையாட்டு களமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.

மறு நாள் காலை விரிந்திருந்த வயல் வெளி தனிப் பயனாளரின் எல்லைகளை உள் வாங்க தொடங்கியது.அன்று முதல் நாம் துடுப்பாட்டமாடிய நிலம்,கிளித்தட்டு விளையாடிய எல்லை.பட்டமேற்றி விண் கூவிய விரி நிலம்.தன் எல்லை சுருக்க தொடங்க எமது விளையாட்டு மைதானமும்??????
ஆதாரம் தேவையெனில் தற்போதும் வேலாயுத ஆசிரியரின் மகளான செந்திருவின் நெற்றியில் இருக்கும் வடு.இந்த உண்மைகளை பறை சாற்றும்.அல்லது தற்போது அமெரிக்காவில் வசிக்கும் திரு.நாகலிங்கம் யோகநாதனிடம் தொடர்பேற்றினால் இதன் நம்பகத் தன்மை மெய்ப்படும்.

2.தற்போது கட்டுமானத்தின் குறிப்பிட்ட எல்லைவரை நிமிர்ந்திருக்கும் எமது நூல் நிலையத்தின் கட்டுமானத்தை நிறைவேற்ற எம் ஊரவர்களுடன் மல்லுக் கட்டி நிற்கும் தற்போதைய செயல்பாடு.

இன்னமும் உண்டு தேவையற்றதென கருதி அவைகளை விட்டு விடுகின்றேன்.

நன்றி தங்களின் தொடர்பாடலிற்கு.

சனி, 5 மார்ச், 2011




மனம் விட்டு கதைத்தால்
தனம் விட்டு போயிடுமாய் சிலர்
கனமகன்று களம் விலகும்
குணமகல வேண்டும்.அப்போதே
சினமகன்று, சீலம் தகைத்து,
...வனம் சூடும் தளம் விரியும்.

அஃதகன்று
சம்பிரதாய வணக்கம்!
தம்பிராயனிற்கு மட்டுமே,
உன் பிராயமோ,என் பிரியமோ!
ஊரக வரம்பு வளம் பெற,
உளம் திறந்து உரையாடி,
வளமான வகை தகைத்து,
கனமான நிதி அளித்து-- எம்
கலட்டி நூலகம் கனகதியில் இலங்க,இயங்க
விழி திறந்து,வழி சமைக்கும்.

யாரும்,யாரிடமும் கோபம் கொளல் வேண்டாம்.
வாரும்!
உன் மதி நிதியளிக்க வேண்டும்.
தாரும் நிதியென யாரும் உனை இறைஞ்சாமல் நீ
ஊரும் உறவாட உவகை உனையளக்க
பேரும் பேறும் பெருமையாய்-
உம் பெருந்தன்மையை நல்குவாய்.
நூலக எதிர்பார்ப்பாய் பெருந் தனம் நீ பொறுப்பாய்
உணர்வுடன் நல்கி ஊரவரை உன் வழி ஏற்க
முன்னுதாரணமாய் முகிழ்வாய்.


மு.குறிப்பு!
இரை மீட்டு தரை தடவாமல்
கறை பூசும் கதையகலக வேண்டும்.
திறமான நிதி வேண்டும்.திண்ணமாய்
உயர்ந்திருக்கும் தளம் காண்.
தடைக் கல்லாய் இருப்பகற்றி
பலன் தரு கற்பகமாய் உடன் வருவாய் உறவே.
உன் உயிர்ப்பில் உவப்பில் ஊரக நூலகம்.

யாதும் புரிவீர்.
காதும் கதையுமாய்
ஏதும் தெரியாமல் எமை ஏய்ப்பதாய்
உமை கழிவிற்குள் தள்ளாதே.
களிவிரக்கம் கொள்ளாதே.இது
ஒவ்வொருதரினதும் காலக் கடமை.
மறுத்துரைக்கவோ ஒத்திப்போடவோ முடியாத
சீராக கடமை புரிவாய் பரிவாய்.
ஆகவே
காலக் கடனறிந்து காத்திரமாய் இயங்கு.

தொடருவேன்.
ஒவ்வொரு வாரமும் இது தொடராய் தொடரும்.
எவரும் என்னுடன் தொடர்பு கொள விரும்பின்.
எப்போதும் எனதான வாசல் திறந்திருக்கும்.
படருங்கள்.
அடுத்த பதிவு எமதூரின் கல்விமான்களிற்கு!

வலைப்பதிவு காப்பகம்