செவ்வாய், 2 நவம்பர், 2010

ஞால சுற்றலில் ஞாயிறு வீழாது!


நெஞ்சமெலாம் நெருஞ்சி முள்ளாக,
இதயம் சுமக்கும் ரணம் சுமந்து,
உதயனை,எங்கள் இதயனை,
ஈழ விடுதலையை நெருப்பாக அல்லும்,
பகலும் ஈகத்தில் ஏந்தியவனின்-
நினைவு நாட்கள் நெருட -அவனை
ஆழமாக,நேசமாக,நெருப்பாக
இழைகளோட இதம் ஒற்றி!

தலைவனின் தாற்பாரிய புதல்வன்,
கலைகளை,மக்களை இணைப்பதில்
அலைகளாகி, நாதமாக ரீங்காரித்தவனை,
போராளிகளை போசிப்பதில் இனியனை,
மகளிரை மையப்படுத்தி கள உள்வாங்கல்களை
காத்திரமாகவே யோகித்தவனை,

ஈழ விடுதலையை மட்டுமே வாசித்தவனை,
தலைவனின் கட்டளைகளையே காற்றாக சுவாசித்தவனை,
அலை,அலையாக துயர் மேவினாலும்,
ஆளுமைகளையே தன் ஆவியாக ஆராதித்தவனை,
நேயமென்றால் என்னவென்பதை நேத்திரமாகவே
நோத்திரமாக்கிய எங்கள் தமிழ் செல்வனை!

உடலால் இழந்து,உள்ளத்தால் உயிர்ப்பித்து
ஆண்டு இன்றுடன் மூன்றாக -
கால வெள்ளத்தில் களங்கள் காத்திரமிழந்தாலும்,
கோல ஆட்டத்தில் கொலுக்கள் சரிந்தாலும்,
ஞால சுற்றலில் ஞாயிறு வீழாது .அதுவாகவே
பாலம் ஒன்றாக பாசமுடன் நினைவள்ளும்
ஈர இதயங்களின் இறுக்கமான நினைவுகள்
நாளும் பொழுதும் நித்திய செல்வனை
நித்திலத்தில் நினைவெழுதும்.

தமிழீழ காலக் கவிஞன்
ஐயா புதுவை பூச்சொரிந்தது போல்
நித்திய புன்னகை அழகன் நித்திலத்தில்
நினைவழியாமல் வாழ்வான்.
இவன் ஓங்காரமாக ஒற்றிய தாகம்
எமை இவன் வழித்தடம் மாறாமல்
ஒற்றி நடத்தும்.

பூத்த உன் புன்னகை இப் புவி உள்ளவரை,
பொலிவிழக்காது.
நீத்தது நீதானென எம் உள்ளமதுவும் ஏற்காது.
நீலியர்களின் நீசங்கள் நெடுநாள் தாங்காது.நேசமுள்ள
நேயங்கள் விடை தெறிக்க நாள் கூடும்.
நயந்திருப்போம் நாள் வரும் நெகிழ்ந்திருப்போம்.
நேசனே.
நினைவழியா நாம் நின் பாதையில்.

வலைப்பதிவு காப்பகம்