செவ்வாய், 29 நவம்பர், 2016

நினைவுகளின் தடத்தில்

ஒரு பாதம் பணிந்து
நீர்த் திவலைகள் பனித்து
இதயமே ஒரு மெளன ரீங்காரத்தை
ஓசையின்றி இழைத்தது.

மழையும்,அதன் சாரலும்
மெல்ல எம் தேசம் தழுவிய ஒரு
மாலைப் பொழுதில்
ஆலய மணியின் கணீரென்ற
ஒலியிழையில்
தேசத்து மலர்கள் யாவும் சிலிர்த்துப் போயின.
அது ஒரு காலமாக!

 


 இன்று!
மூலைக்கு மூலை பல மூடர்களின் கண்காணிப்பும்
ஈரமாக்கவா இல்லையா எனும் உந்துதலில்
இயற்கையின் இசைவின்மையும்
மனதை நெருட--
நின்றொரு ஒலி கொட்டும் எண்ணம் மனதை உந்த
மனைகள் பலவற்றில் தீபாரதனையுடன் ஒரு மெளனாஞ்சலி
 

எது நடந்தாலும்-
ஏக்கம் சுமக்கும் நெஞ்சகம்
இயங்கத்தான் சாலவே தடமிடும்.

தேசத்தின் புதல்வர்களை
 

எம் நேயத்தோடும்,பாசத்தோடும்
என்றும் நினைவாக்கம் கொள்வோம் எனும்
நனவாக்கத்தின் நல்லிருப்பாய். உதிர்ந்து
தொலைந்து கோணாது இந்த
உயிர்ப்புக்களின் ஊடு தளம் எனும்
பயிர்ப்பாய்.
 மூண்டது..
மீண்டும் வன்னித் தளத்தில் மட்டமல்ல
தமிழீழப் பரப்பெங்கும் மா வீர பெரும் சுடர்
மனங்கன்றிப் போகாது எம் மாவீரச் செம்மல்களை
நினைவிருத்தி நெகிழ்ந்துருகி
அவர் பம் பாதம் பணியும் பண்பலைகள்
என்றும் ஓயாதென ஒளி வீசும்.

இதுவே யதார்த்தமென
காத்திரர்களின் காலடி ஒற்றி
கண்ணீர் பூக்களால் எங்கும் காணிக்கை பார்.
இது மா தவம் செ(ந)ய்த மண்ணடா.

ஞாயிறு, 27 நவம்பர், 2016


 மனக் கணக்கில்
ஏதோ மதி மயக்கம்?
கனக்கும் நினைவுகளால் வந்த தயக்கமா?
உவக்கும்
இது
உனக்கும் எனக்குமென எண்ணுவது பேதமை.
அது
தனிக் கணக்கு.

மனிதக் கணக்கு எப்போதுமே தவறுமா?
இல்லை
மாந்தர்களின் மையல்களில்
சாந்தமற்ற சந்தங்களில்
வசந்தமற்றுப் போனதாய்
வகுக்கும் சில நிலைகளில்
எந்தன் சிலை தவறி வீழ்ந்திடுமா?
இல்லை
எமது
சிலைகளும் சில்லான சிலிர்ப்பான
எண்ணங்களும் அதன் வண்ணங்களும்-

மனம் விட்டு
மதி திறந்து உரையாட
இரையாகிப் போனதாய்
தம்
உணர்வென சில மானிடங்கள்
தம் மதியை ஒரு
குச்சொழுக்கில் விரவி விட்டு
விதண்டாவாதம் பண்ணுவது விதியா?

இல்லை
புரிந்துணர்ணை புதை குழி தோண்டி
பரிந்துரை செய்யும் வையகங்களில்
மனக் கணக்கும்
மானக் கணக்கும்
சிலரின்
இரைப் பைகளில்
எம்
துரவுகளை துளாவி
அலசி
அவித்தெறிந்து போன தடயம் ஆறாமல்
அடுத்த அசைவில்
என்ன இசைவு வரும்?

நேற்றைய உரையாடலில்
தெளிவான சேதி ஒன்று
வீச்சற்றுப் போய்
திசைக் கொருவராய் தசை பிடுங்கி
தாளம் போடும்
யாலங்களினால் உன் மனக்கணக்கை
மரக்கையிலிட்டு மசித்து விடு
சேதி இதுவாக
என் செவிப் பறை நாண
தணலில் இட்டு என் சந்தங்களை -----??

மாவீர பொற் பாதம் தாளாது காண்

இதயப் பரப்பில்
எழுச்சியாய் என்றும் வீற்றிருக்கும்
நாயகர்களே
உதயம் காண தன் இன்னுயிர்களை
ஈந்தளித்த தேசத்தின் சுடர்களே

சூரியத் தலைவனின் ஞாலங்களே
தமிழீழ நியாயர்களே
நித்திலர்களே உங்களின் உத்தம
வேள்வி நியாயங்கள் நியமானவை
அப்பழுக்கற்றவை









தேச அணுக்களின்
ஒவ்வொரு பரப்பிலும்
உங்களின் உதிரச் சுவாசமே
என்றும் ஆலிங்கனம் வகுத்திருக்கும்
இது சத்திய வேள்வியின்
சரித்திரச் சுவடு.
ஆதலினால்தான் என்றும்
ஈழ தேச சுதந்திரச் சுவர்களில்
சூத்திரமாக என்றும் தகைத்திருக்கின்றீர்கள்
இது ஆன்மாவின் அவிபாகம்.
 யாராலும் எதனாலும் அழிக்கமுடியாத
பெருயாகம் பெற்றீர்
நிலைத்திருப்பீர் எங்ஙனமும்
சுதந்திரக் காற்றிடுக்கில்
சுந்தரமாய் எக்கணமும்.
இதயத்தில் கனல் விடும் மூச்சுக் காற்றை
தொட்டணைத்தே உங்களின்
ஞாபகக் கல்லறையில் இட்டுணர்ந்து
தலை வணங்கி நிமிருகின்றோம்
உங்கள் தங்ககத்தில் இதயப் பூச்சொரிந்து.

வெள்ளி, 25 நவம்பர், 2016

அகவை 59

அகவை நாளை 59 ஆகும்
ஆதலால் ஒர் ஒளிப் படத்தை ஒற்றுகிறேன்
காலம் எவ்வளவு கனதியாக
சடுதியாக கழிந்ததை நினைப்பெழுதி
வியக்க கடந்தகால
நிழற்படம் ஓர் அத்தாட்சியாக
இடைப்பட்ட காலங்களில்
கனிந்தவைகளையும்
கழிந்தவைகளையும்
இடர் பட்டு இடிந்தவைகளும்
என்
நினைவுத் தடங்களில்
ஓர் கனிவுப் பந்தலை சுவைக்கின்றது.

எத் தடை வந்த போதும்
எத்தனை எத்தனங்கள் இடறியபோதும்
அத்தனையையும் சாலக்
கடந்து
சத்தனைத்தும் சொத்தாக
கொத்தாய் கொய்து
கோப்படக்கிய கோலமதில்
சுரங்களின் சுரங்கம்
இந்த நிழற்படம் எனக்குரைக்கும்
தினமாய் திடமாகி செழிப்பாய்.

மலர்ந்தனவும்
மலரடக்கம் கழிந்தவையும்
மலட்டாக்கம் கொண்டனவும்
அலர்ந்து அவை அடங்கி
புலர்ந்தவைகளும் புணர்ந்தவைகளுமாய்
புளகாங்கிதமும் புழுகாங்கிதமாய்
அழுதாங்கி கொண்டவைகளும்
இந்த படத்தில் படலம் கொய்யும்.

இது
தினவெடுத் தோள்கள் கொண்டவெற்றித்
திருமுகத்தின் அட்சயப் புன்னகையாய்
என்றும் துலங்கும்
ஆதலினால் சிலிர்ப்பெழுதும்
சிலாகிக்கும் சின்னத் தனமகற்றி
இந்த அகவடக்கம் யாவும்
புல வாழ்வு என்
புயத்தில் தீற்றிய அடையாளச் சின்னமாய்....

புதன், 16 நவம்பர், 2016

இருள் சூழ நின்றது எந்தன் வாழ்க்கை.

இருள் சூழ நின்றது எந்தன் வாழ்க்கை -அதில்
மருள் சூழ்ந்து கொண்டது என்ன சேர்க்கை?
அருளாக வந்தாளே எனது வாழ்வில் -அது
அகமேவி கொண்டதே நல்ல சேர்க்கை.

நிழலாகி நீவுவதே ஆருயிர் சந்தம்.
அந்த நியத்தில் முதிர்ந்தெழுந்ததே எந்தன் சாந்தம்
வியாபமாய் விழித்தவளே எந்தன் துணைவி -என்றும்
வீழாமல் விழித்ததுவே எங்கள் பாதை.

வருவதும் போவதும் சுற்றமாகலாம்.
என்றும் வருந்தாமல் சூழ்பவள் துணைவியாகலாம்.
தருவதும் இழப்பதும் சுற்றத்தின் சூழல்-எதையும்
தாங்கி துணை ()தருபவளே சுகந்தமான துணைவி

வாய்த்தெழுந்து கொண்டதால் வறுமை போனது.
அதன் வயல் காட்டில் என்றுமே பசுமை படர்ந்தது.
தீதெழுதிக் கொண்டதால் சில சகாயம் கழன்றது.
அந்த தீயில் நாம் வீழாததால் விபரம் வென்றது.

இருள் சூழ நிற்பீரா உமது தாழ்வில்.இதை
இதயம் கொண்டு வாழ்வீரே உமது வாழ்வில்
மருளடைந்து நிற்பது என்றும் மாயையாகும்.
இதில் மனதிருத்தி வெல்வதே யோகமாகும்.

சிரசெழுதிக் கொண்டாலே சிந்தை சிறக்கும். 
இதை சிறப்பெழுதிக் கண்டாலே வாழ்வு திறக்கும்
வரியெழுதிக் கொள்ளுங்கள் வலிகள் பறக்கும்.அந்த
வரப்பினிலே நிந்தனது வலிமை உரக்கும்.

வலைப்பதிவு காப்பகம்