புதன், 13 ஜனவரி, 2010

ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-

ஆதவனின் ஆதங்கக் கதிர்கள்,
ஆரமது வெளித்து ஆனந்தமாய் அரங்கேற,
புள்ளினங்கள் புவி மீது பூபாளம் இசைக்க,
வண்டினங்கள் ரீங்காரித்து செண்டினடி சேர்ந்து,
பண்ணிசைக்கும் வேளையிது 'பா' இசைக்க வாராயோ?

விடியலின் வேதினியில் படிமங்கள் பல உண்டு.
மடியல் அதை விலக்கி மாண்பு பல இயைந்திங்கு,
படையலதை பக்குவமாய் பரந்திங்கு பரப்ப வேண்டி,
உடையன,அறுவடையில் அரிந்தன,செடி,கொடியில் சேர்ந்தன,
செங்கதிரோன் செவ்வடியில் சேமமாய் செதுக்கி வைத்து,
நன்றிக் கடன் நயக்க வேண்டும் நாம் அதை செபிக்க வேண்டும்.

உழவர் திருநாளில் உவகையாய் இவைகளெல்லாம்-சூரிய
உதயத்தின் முன்னே உளமாக இயக்க வேண்டும்.
இதயத்தை நெக்குருக்கும் நேயங்கள் நேர்த்தபடி,
அவயங்கள் ஆதவனை அர்ப்பணிப்புடனே அணைக்க ஏவும்,
தூயமலர் துலங்க அவன் தாளடி அடிபணிந்து,
வேணவேண்டும் அவன் வேதனம் எமக்களித்ததை.

ஆண்டாண்டு இக் காரியத்தை ஆதங்கத்துடன் அர்ப்பணித்தோம்-
ஆனால் ஆண்டு 2009ல் யாண்டு கொன்று,கொண்ட
யாத்திரத்தை நினைவேந்தும் நேத்திரங்கள் எமை வதைக்கும்
சூத்திரத்தின் வேதனையில் சூரிய வணக்கமது வனக்கவில்லை.

பிணக்கது தீராமல் எந்த பிண்டத்தில் பிதிர்க் கடனாற்றுவோம்?
இணக்கமது இன்றுவரை வரைபின்றி எங்கள் சுற்றமெல்லாம்,
சுணை ஏதும் இல்லாமல் சுற்றிவர முட் கம்பி வலைக்குள்ளே
பிணை எடுக்கக் கூட பிறப்பின்றி வெறிச்சோடி வேகின்றார்.

உற்றமே,உறவே!
உனக்கிது புரியுங்கால் சுற்றத்தின் சுவாசத்திற்கு
என்ன கடனாற்றுவதாய் இன்று உறுதி கொள்கின்றாய்?
ஆக்கி படைப்பதுவும்,ஆனபின் மூச்சு முட்ட உட் கொள்வதுவும்,
ஆசுவாசமாக பின் அரட்டை அடித்து,அயலவரை நக்கலடித்து,

இப்படியே உன் பிறப்பின் பயனெய்து!
எப்படியும் சுரக்காத உன் சுவாசத்தால்-எந்த
செப்படி வித்தை செய்வதற்காய் சேந்தனடி தொழுகின்றாய்?
அப்படியே உன் ஆத்மார்த்த ஆண்டவனடி சென்று இவர்கள்
ஆன "பயனென்கொல் வாலறியான் நற்றாள் தொழார்" எனின் என்று
உச்ச குரலில் உனை மறந்து குரல் கொடு -அத்தனையும் சேமம்

அடுத்த ஆண்டும் தை பிறக்கும்-ஆனால்
எங்கள் முற்றத்து மல்லிகையின் முகைகள் பிறக்குமா?
ஆரியனின் ஆழ சிறைதனில் அந்தரிக்கும் அவர்கள் ஆத்மா தரிக்குமா?
ஐயனே!
ஆற்ற உன்னால் ஏதும் ஆகாதெனில்-அவர்கள் முக(கா)ம் தரிசி
ஆக்கி படைக்க,புதுப் பட்டாடைக்கு நீ நுகர வைத்திருக்கும்
பணமோ? இல்லை உன் மனதோ எதுவாகிலும் அவர்கள் உளம் தரிசி.

உன் அரவணைப்பு!
ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
ஆயிரம் ஆசிகள் உன் அகம் கொள்ளும்.
புலத்தில் வாழும் என் அகத்தோரே!
உங்கள் புலவில்
தை திருநாளில் செலவாக்கும் லயத்தில்
புழங்கும் பணத்தில் பாதியையாவது -அங்கு
எந்த உலவுமற்று உலங்கும் உன் உறவிற்கு,
உதவ மதம் கொள்.
மனம் கொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்