வியாழன், 7 ஜனவரி, 2010

உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.



திருவாளர் வீரசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களினுடைய நினைவுசுமந்து.

ஆற்றல் மிகு பெருந் தலைவனை-இந்த
அவனிக்கு அளித்தவரே-உமைப் போற்றி
உறுப்பெழுதும் மறத் தமிழினத்தின்
மாற்றுதலை காணாமல் மறைவெழுதிப்
போனீரோ?
தேற்ற இங்கு யாரும் இல்லை-உம்
துணையை தோற்ற அருகில் யாருமில்லை.
வேற்று கிரக மனிதர்களாய் நாம்-
வேலி இழந்து பரிதவிக்கின்றோம்.

இங்கிதங்கள் சிறிதுமற்ற இராணுவத்தின்
இரும்பு கரங்களில் உம் இறுதி யாத்திரையா?
ஐயகோ!
என அரற்றும் எங்கள் ஆயிலியத்தை
எங்கெறிந்து ஆசுவாசிப்போம்?எம்மவரே
உங்கிருந்த உந்தனது உணர்வுதனை யார் மதித்தார்?
பங்கமது நாளும்,பொழுதுமாய் உன் அங்கமதை
அயோக்கிய கிங்கிதரர்கள் எங்ஙனம் ஆராதித்தார்?
எவர் அறிவார்?

சாதுவான உங்களது சகவாசம் எவர் சுரப்பார்?
ஏதுவான சமர்க் களம் ஏதிலியாய் போனதனால்,
யாது மற்று யாம் யதார்த்தம் யாவும் இழந்தோம்-இன்று
பேத மாற்றும் பேய்க் குழிக்குள்,
பெருமிழவாய் தவிக்கின்றோம்.

ஊத பகை சாயும் இந்த ஊற்று இனி சுரக்கும்.
வேதம் எழுதிய எங்கள் வேதினியர் எழுவர்-இந்த
பாதம் வரை பாதகரை படு குழிக்குள் பரவ
பாதை அவர் வகுப்பர்.பகலவன் பாதை விரியும்-அந்த
பகுப்புக்கள் பாரில் தெரியும்-பார்த்தனின்
மெளன மொழி விழிக்க!

யாவும் இங்கு யதார்த்தயாய் பதிவெழுதும்-இது
சாவும் பொழுதாக உதிர்ந்தன உயர்வெழுதும்.
பூவும் புதுமலராய் பூம்புனல் பூக்கும்-புவி
நீவ காவியம் களிப்பெழுதும்-இவை
யாவும் இயங்கும் இனிதான மலர்வாய் இகம்
இதை வரையும்.

ஐயனே!
உந்தனது அந்தி பொழுதில் என்ன பாடல் இசைத்தீரோ?
"மா" வீரனை பெற்றதால் மகிமையாய் அதை இழைத்தீரோ?
இல்லை ஊழ்வினையென உந்தன் உதிரம் உயிர்க்க,
தொல்லை அகன்று தோகை விரித்தீரோ?வல்லை
மண்ணில் வகுத்த வாரியன் வகை வகுப்பானென!
புண்ணியமெழுதிப் போனவரே-உந்தன்
புன்னைகையின் பொற் பாதம் உந்தன் வீர
புதல்வனால் உயர்வு சொரிய உதயமாகும்.

நிறைவாக நிவிர் துயில- பிறையாக
நுதல்கள் நிமிர -
உறவான உறவுகள் உயிர்க்கும்-உங்கள்
உளக் கனவு உயர்வு சொரியும்.
துறவான தூயவர் துலங்க உறங்கும்-
உங்கள் உயர்வான கரங்களால்
உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்