வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

இன்னா செய்தாரை ஒறுத்தல்-அவர்
நா நயம் செய்துவிடல்.

இரண்டகமும்,எதிரி பாகம்
இணைந்திருந்து தன் இனத்தையே
அழித்தவனிற்குமா?
இதை வள்ளுவன் வரைந்தான்?

இப்படியும் இயம்பும் ஈனர்களை
எந்த லயத்தில் இருத்தி
இலங்கல்களை இழைப்பது?
தம்படி நிலம் கூட எங்கள் தரத்தில்
தரணியிலற்று போனதால் தகமெல்லாம்
ஈரமற்று போய் விடுமா?

விலங்கிலும் இழிய வாழ்வேற்று
துலங்குமா எங்கள் துயரமும்,வேதனையும்?
மலங்க விழிக்கும மானிடரானோம்!
குலங்கெளெல்லாம் குடியற்று,குவிவற்று
கொடியவரால் குதறப்பட்டு
மடியும் இந்த மானிலத்தில்-எந்த
விடியலாற்ற வீணர் எம் களம் கலைத்தார்?

இருப்பதை விட்டு பறப்பதை பற்ற எண்ணும்
பேதமை என்று விலகும்?
நெருப்பாற்றில் நீந்திய எம் நேத்திரர்கள்
விருப்பாற்றி வீதி கீறிய விதிகள்
இதை விட்டால் வேறு வழியில்லை என்பதை
மீண்டும் மதி கீறும்
பேரினத்தின் விறுமம் கரைக்க
ஓரினமாய் எங்களினம் மீண்டும் இணையுமா?
ஈர்க்குமா?

இல்லை வேறு வழியில்லையென
சரணடையும் சாரம்தான் சங்கதியாகுமா?
போனதில் போக்கற்று வீர வரி கீற
விறுமம் இனி வரையுமா?
எங்கள் வீதி வெறிச்சோடி,எங்கள் வானம்
வெளிறி,எங்கள் கடல் குருதியில்?

நாளும்,பொழுதும்
காணாமல் போவோர் எத்தனை பேர்?
கிராமத்து கிணறுகள் விழுங்கும்
இளைஞர் எத்தனை பேர்?
இருட்டிற்குள் இன்னல்களே வாழ்வாய்
உருக்குலையும் எங்கள் குமர்கள் எத்தனை பேர்?

பலமாய் தமிழர் பாலம் அமைத்த அந்த
இளவேனில் ஈழத்தில் இந்த அவலம் இறைந்ததா?
இரவில் இளைஞிகள் இன்கலற்று திரிந்த
அந்த
ஈரமான நிலத்தில் என்றாவது இந்த இழவுகள்
இழைந்ததா?

ஆனால் இன்று
ஈழத்தில்,யாழில் நடக்கும்
சிங்களரின் சின்னகத்தனங்கள்
பலமற்று போனோம் ஆகவே
வலமற்றும் போனோம்.
எண்ணத்தை,எதிர்ப்பை,
எந்த வகையிலும் வார்க்க முடியாத
வகையற்று போனோம்.

இன்னும் எத்தனை நாள் இந்த அவலமும்,
அரியண்டமும்,ஆக்கினையும்.
மீண்டும்-
மகிந்தா என்ற மனிதமற்ற பேயாட்சி
மந்திகள் எல்லாம் எங்கள் மயிலாசனத்தில்?
சிந்திப்பானா தமிழன்?சினமாற்ற
சீற்றம் தொகுப்பானா?
தொகுத்தால் தொகுதி மீண்டும்-இதை
பகுத்தால் எங்கள் பருதி நிச்சயம்
ஆரை ஆர்க்கும்.

இப்போது
இன்னா செய்தாரை ஒறுப்போமா இல்லை
ஒன்றிணைந்து ஓர்மம் ஒற்றுவோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்