வியாழன், 21 ஜனவரி, 2010

உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.


உடலையும்,உணர்ச்சியையும்
கொன்று குவிக்கும்
கோலோச்சிகளே-எங்கள்
உணர்வுகளையும்,ஆத்மார்த்த
உறுப்பான தாகத்தையும் எந்த
தர்ப்பணத்தில் தகித்தெறிவீர்?

மானிடம் கலைத்த ஊனர்களே!
என்றோ ஓர் நாள்-அந்த
சாளரத்தை நீ சாசுவதமாய் சுகிக்க
அந்த அந்திமத்தில் எந்த கோணத்தில்
உன் சுயம் செரிப்பாய்?எல்லாம்
ஆட்சி தரும் ஆவணம்,
ஆணவம்-
மிட்சியற்று நீ மிதிபட எந்த மீந்தனத்தில்
உனதான மிதப்பு?

உனக்குள் உறங்கும் மனசாட்சியே!
கனக்கும் உன் கனதியாக -நீ
சுவாசம் சரிக்கும் முன்னே முகிழும்
சகவாசம் உனதான பரிவிற்குள் ஏந்த எந்த
பச்சோந்திகளும் உன் பாதம் பார்க்கார்.

உனக்கான பருதி குன்றும்.இது
தனக்கானதாக ஏதும் விட்டம் வரையா
ஆரையை உந்தன் அகம் அருக்கியதால்
அழிவில் உன் அழிவில் எந்த
ஏற்பானும் உனை ஊக்கான்.

புரிதலை பதவி புறந்தள்ளும்-இது
உனதான தனி பாதையல்ல!
உலகில் ஈழ உலகில்
அரசென்னும் சிரசில் இத்துணை அழிவாற்றிய
அத்தனை அரக்கர்களும் ஆதித்த ஆற்றலது.
வரலாற்றில் அவர்கள் வற்றல்களையே தம்
சந்ததிக்கு சிந்தாக சிந்தினார்கள்.

விளைவு குருதி சிந்தும்
குவலயமாய் ஈழ நிலம்.எனினும்
தரிசாகிப் போயினதாய் தம்பட்டம் தட்டும்
சகட்டு மேனியரே!
செவிடன் காதில் சங்காய் உங்கள் சேந்தல்கள்.
நாளை மீண்டும் நுகை மிளிர,
மாண்டதெல்லாம் மெருகேந்தும்.
தோன்றும் தொய்வில்லா சோதிகள்-உந்தன்
மன்றத்தில் மெளனம் கலைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்