ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.


அழுகைக்கு நிறமில்லையா?
அது உந்தன் ஆளுமைபோல் அல்லாது போயினும்,
உணர்வுகளின் உறைவிடமாக,
உணர்ச்சிகளின் கனதியாக ஓர்
உறுத்தல்,
இல்லை
இயலாமையின் இறைஞ்சல்.
அல்லது
துணையற்ற ஓர் தூரத்தில்
ஏதும் ஆற்றமுடியாமல்,அற்ற சூன்யத்தில்
இதுதான் என்பதான எந்த வழியும்,விழியும்
ஈற்ற முடியாத ஓர் கையாலாகாத் தனத்தின்
காவுகை,

அழுகை!
இடம்,பொருள்,ஏவல் சார்ந்ததாக
இப்படித்தான் என ஏதும் வெளிப்படுத்த முடியாத
அல்லது வெளிக் காட்டக் கூடாத ஒரு குவியம்.
ஆயினும் நிறமற்றதாக அழுகையை
ஆளுமை ஆற்றல் அது என்றோ ஓர் நாள்
பெரும் ரூபம் தரிக்கும்.

அழுகை
சந்தர்ப்பம் சார பழி வாங்கும்.
ஏன்?
அது அதமங்களை ஓர்மத்துடன்
வசதியாக அணிவகுத்து வன்மம் இறைக்கும்.
ஏற்ற அந்த இலங்கல் இழைய கொலையாக கூட
கூர்ப்பேற்றும்.

அழுகைக்கு நிறம் உண்டு.
இதை இலக்குவோர் இணைந்திருப்பர்,
தனதான தேவைகளையும்,சேவைகளையும்
கூவையாக குவித்திருந்து
கூர்மையான புலம் பருவ
தீர்மையான திடம் தீற்றும்.
அஃதின்றேல் அது அழுகையல்ல.

அழுகை மன்னித்தலை மனம் கொள்ளாது.நான்
இங்கு கோடிட்ட அழுகை
மாந்தர் எம் மைந்தர்கள் மையித்த
மறக்கவே,மறைக்கவோ,
ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத
ஓர்மத்தின் வேரை.

அழுகைக்கு நிறமுண்டு -அது
தொழகையகற்றி,தொய்வகற்றி
திடகாத்திரம் செதுக்கி திண்மையாய்
தீர்வாக தீட்ட தண்மையாய் தனை தகம் கொள்ளும்.
அந்த கொள்ளிடம் கொலுவேறும் வரை
கொய்யம் ஏதும் கொற்றம் காட்டாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்