வியாழன், 11 ஜூன், 2009

வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?


நிலைத்தெடுக்க நிரையிருந்த நித்தியம், இன்று
கலைந்தாய்ந்த காவியமாய் கச்சிதம் கலைந்து போயினவோ?
வலைந்தெடுத்து வகையறுத்து வரைபு மீறி வற்றியதாய்,
புலமடைத்து புயமகன்று புவனமே புறம் காட்ட,
வகையடைத்து நிற்பதுவே வையகத்தில் நிலையாமோ?

பரபரத்து போன நெஞ்சம் பசுமை இனி வேணுமோ?
கரகரத்துபோன குரல் காஞ்சீரம் இசைக்குமோ?
வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
கயலிழந்த கடலெல்லாம் கானமினி இசைக்குமோ?
செயலிழந்த செவ்வீரம் இழைந்து சேய் வளம் சேருமோ?

மரமரத்து போனதய்யா மானம் அது மாய்ந்த்ததய்யா,
வெலவெலத்து போக உள்ளம் வெம்பியே உளம் காய்ந்த்ததய்யா,
பொலபொலத்து போனதுவாய் போகமெல்லாம் பொசிந்த்ததய்யா,
போக்கிடமற்ற இனம் பொறியினுள்ளே பொதிந்த்ததய்யா,
வக்கற்ற வகையினமாய் வதையகத்தில் வதைந்த்ததய்யா.

சீலம் நிறை ஞாலமிங்கு நாம்,
சிறப்பறுத்து சீந்துவதை,
சீரிய நிலை களைந்து சிரம்
மரத்து சிதறுவதை,
ஆற்றும் திறனங்கு ஆய்விழந்து அகலுவதை,
தேற்றும் நிலையிழந்தோம் தேடும் நிலை நாம் இழந்தோம்.
வாட்டுகின்ற வதைகளெல்லாம் வார்த்தெடுத்து வாஞ்சையுடன்,
ஊட்டுகின்ற உளம் வேண்டி உலகவலம் ஊடுகின்றோம்.

மாற்று விதியுரைப் போரே,
தோற்று விதை விதைப்பீரோ?
காற்றும் எமை காலனாக கருத்துக்கள் காட்டுவதை,
போற்றும் புவி போதகரே புலன் கொளமாட்டீரோ?
பொதுவிதி இதுதானென்றே புலம் மறைத்து போவீரோ?

நல் நம்பிக்கை ஊட்டுவதாய் நாவில் ஒன்றுரைப்பீரே,
வல் வளைப்பு வதை முகாமை முகம் கொளமாட்டீரோ?
சொல்லில் வீரம் காட்டா சோதியரை காண்பீரா?
சொதம்பி வாழும் வாழ்வினையை செருக்கியடக்க சொல்வீரா?
சோகம் பொய்த்து போகவல்ல சேதிகொண்டு வருவீரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்