திங்கள், 29 ஜூன், 2009

இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?



அம்மா என்னும் ஆதங்க குரலெழுப்பும்,
ஆ``இனத்தை காணவில்லை.
அதிகாலையில் ஆரவாரம் ஆற்றும்,
புள்ளினங்களின் புள்ளிகளையும் காணவில்லை.
ஆனந்தக் குரலெழுப்பும் குயிலினத்தையும்,
குலவும் கூட்டங்களையும்,

அதிகாலை சேவலும்,அதனூடு,
அலையவைக்கும் நாயினையும்,அருகருகாக
ஒட்டி,ஒதுங்கி,வழிதவற வாயால்
வகிடெடுக்கும் கோழியையும்,
துள்ளியோடும்,துணையுடன்
மல்லுக்கட்டும் என் மறியாட்டையும்,

சலங்கை ஒலி சத,சதக்க
சாணம் முதல் ஆட்டு பிழுக்கை வரை
எரு ஏற்ற வரும் அந்த ஆதித்தனின்,
அட்டகாசமான அழகான வண்டில்
காளைகளின் கம்பீரங்களையும்,
காட்டு விறகு ஏற்றி வரும் காந்தனின்
கம்பீரத்தையும்,கிடுகு விற்ற கிரந்தமாக
கிழக்கிருந்து வரும் கந்தனையும் காணவில்லை.

காலை உணவினை கட,கடவென விற்க வென
சந்திகளெல்லாம் சாரத்துடன் சகடமுரைக்கும்
என்
சக தோழனையும்,
ஏன்?
பள்ளி தொடங்கமுன்னே பர,பரப்பாக
வீட்டு வேலைகளை அப்பத்தான்
அவசரமாக செய்து முடிக்க சேந்தன்
வரும் சேதியையும் காணவில்லை,

ஓ,
பால் மொண்டு பாலன் பர,பரக்க
உந்துருளியில் உலா போகும் உருவத்தையும் காணவில்லை,
நல்ல தண்ணி அள்ள செல்லும்
நங்கையர் கூட்டங்களையும் நான் காணவில்லை,

ஓ,
நேரமாச்சே
பள்ளிக்கு பாங்காய் பசுமைகளாய்
கைலாகு கலந்த படி கல,கலப்பாய்
நேர் செல்லும் எம் நேசனின் பால் மாறாக்
குழந்தைகளையும்,அழுது அடம் பிடித்து
உள் செல்ல மறுக்கும் உவன் உலகனின்
உற்ற செல்வி செந்தழலையும் காணவில்லை.

காலை நேரம் களை கட்டும் சாலை
இங்கு காய் கறி சுமந்து உந்த சந்தைக்கு செல்லும்
தட்டி வானையும்,மாட்டு வண்டிகளையும்
இன்றும் ஏனோ காணவில்லை?
எங்கே? ஏதாவது?
செல்லடிபட்டு,ஆமியின் அட்டகாசமிறைந்து,
ஆ,
அப்படி ஏதும் இந்த
வன்னியில் வாரக்கணக்கா
இல்லை வருடக் கணக்காக இல்லையே,
ஏன்?
இந்த சடுதியான மாற்றம்?

யாரும் மாவீரர் ஆனார்களா?
இப்போ,
போர் ஓய்வு காலம்தானே,
என்னதான்
இங்கு நடக்கின்றது?
எங்குமே என் இன சனத்தையே காணோம்?
நான் இப்போ எங்கிருக்கின்றேன்?

ஆ,ஆ
நான் யார்?இது எந்த இடம்?
என்ன இது?
என்னை சுற்றி இங்கு என்ன நடக்குது?
இல்லை
ஒன்றுமே புரியவில்லையே.

அன்று ஆமியின் செருப்புக் காலால்
வன்னியை விட்டு தொழில் நிமித்தம் சென்ற சோமனின்
செவியில் வீழ்ந்த செப்பலான அடியின் வீரியம்,
இன்று காந்தலாய் கனதி குறைய
தான் இழந்த எதனையும் தாக்கமாய் தாங்கும்
தகமையிழந்து
வெறிச்சோடி இவன் வேதனைகள் நுரைக்க

கடந்த கால எந்த சம்பவங்களையும்
நினைக்கும் ஆற்றல் இழந்து,
தான் கடைசியாக கண்ட காட்சிகளையே
இன்னமும்,இன்னமும் கண் விரியும் காட்சியாக
அனுதினமும்
இந்த ஏக்கத்தின் தாக்கத்துடன்,
எல்லாவற்றையும் இழந்த இவன்
என்றுமே இழக்காத அந்த நினைவுகளின்
தழும்புகளுடன்,

நினைவே என் அகமெரிக்கும்,
இவனிற்கு ஆர் துணை?
வெந்தால் தின்னவும்,
வெகுண்டால் அரற்றவும்,
துண்டில்லாதா துயர்ப் பரப்பில்,
இவனைப் போல் இருப்போர்க்கு!
எவன் ஏற்றமும் எரியா விளக்கே!

எந்த மாற்றமும் துணையாதிருப்பே,
முந்தியென்றால் முகப்புக்கள்,
வேண்டாம்,
வேதனைகளை தின்னும் தீண்டாமை ஒழிக்க
வாதனைகளை வறட்டும் வகையாற்ற
என்ன செய்யப் போகின்றோம்?

இவன் ஒருத்தனெண்டால் பத்தோடு ஒன்றாக,
பாவி உளம் கொள்ளான்,
இனமே இந்த மூச்செறிந்தால்,
நாம் வீச்சிழத்தல் தகுமோ?
ஆற்றல் உள்ள ஐம் புலத்தோரே,
ஆக்கமுற ஆவன ஆற்றுவீரா?
தேக்கமற்ற தேற்றம் தேற்ற
ஊக்கமெடுத்து உய்ய வழி ஊட்டுவாயா?

இன்னும் எத்தனை தங்கங்களை
தரமிழக்கப் போகின்றோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்