வியாழன், 21 மே, 2009

விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்


வாழ்வழித்தான் வகையற்ற
வதை கொடுத்தான்,
பாழெடுத்தே எல்லாப் பரப்பிலும்
வரப்பு விரித்த வஞ்சகமே,
தரிசாக்கி,அதையே தம் பரிசாக்கி,
விரிவாக்கிய எம் தேச
எரிப்பின் தேகம் விரித்தவனே.
உருவாக்கிய, உள்வாங்கிய,
உருவகம் தானென்ன?

ஆதாரம் சாற்றி நிற்கும் தமிழின
அழிப்பன்றி வேறென்ன?
ஏனென்று கேட்பாரற்று,நாதியற்ற ஈழத்தமிழினம்,
பாதி வழி காவி வைத்த காவியமெலாம்,
ஊதி,
உதிர்ந்து,
மீதியற்று,
மிகையழிந்து போயினவோ?
சாதி,
சங்கம் எல்லாம் சிங்களமென சிகம் ஒதுக்கி,
சாவாற்றி சகலதையும் சங்கமிழக்க
சாறி நின்றோம்.
எனினும் தேறி நிற்போம்.

ஏனென்று கேளாத முகம் தொடுத்தான்,
எல்லாமே குரலழித்து குதம் நுகைத்தான்,
வல்லாள வாகையொன்று வகையற்று போனதாய்,
தள்ளாத தன் தரம் சுரந்தான்,இதை தாங்கியே,
எங்கள் இனமழித்த சுரம் மறைத்தான்,சர்வம்
ஏந்தியே இதை மார்தட்டி மகிழ,
சிங்களன் தினமுரைத்தான்.

நாமோ!
வழியற்று,போகும் பாதையற்று,
சமாந்திர கோடு விரித்து,
திசையும் திசையற்று,
பாழெடுத்து பயம் விழைந்து,
சாகும் நிலை தவிர்க்க சாதிக்க போவதென்ன?
விடையறுக்கும் வினா தெடுத்து,
விதமுரைக்க விதிர்க்கின்றோம்.

வீரியம் ஆங்கு விதை தளர்ந்து நின்றதாக,அதன்
வேரறுத்து,பரவிய விழுதறுத்து,
அதன் நிலமெலாம் வீசினான்.
உரமெல்லாம் உறுத்தழித்தாக உறுமியே தளிர்க்க,
விசம் தரித்து வில்லாள விசமிகள் களம் அறுத்து நின்றான்.
காரிய கருப்பு விதைந்து,
வியாபிக்க எங்கள் வளமெல்லாம்????

எண்ணவே மனம் வேகும்,
திண்ணமாய் தினம் இறுக்கும்,
உண்ணவே மனம் மறுக்கும்,உளமறுந்து,
சாய கனவாக களம் விரிக்கும்.
கன்னமிட்ட கயவர்களின் கயமையே சன்னமிடும்,
வேளை,காலம்,நேரமற்று,
அனு தினம் இதுவே சுரக்கும்.

நெஞ்சறுத்து,இதயம் கறுத்து,செல்லும்,
வழிதேடும் என் தேசத்துறவிற்காய்,
என்ன பணியை என்னால்? ஆற்றலாம் என்ற
அடையற்ற அகம் வினாவி வினவ நான்,
நான்மட்டுமல்ல நாம்??

குதிர்க்கும்,மனசரைக்கும்,மதி விழிக்க,
மார்க்கம் தேடும்.
பாதை இதுதான் என்ற பாத்திரத்தை,
பகலவன் கூட நாமும் பாத்தியதை விரித்தோம்.
ஏந்தி நின்ற அந்த தேசத்திலே ஏகாந்தமற்று,
நீந்தி நின்ற என் தேசத்துறவுகளின்.நேச நெஞ்சமே
எம் நெஞ்செல்லாம் நெறியூட்டும்.

மீதி வழிசமைக்க மீட்பாளர்களின் பாதை இன்னமும்,
காதைவழியென்ற காலம் கனிந்த அந்த நாட்கள்???
எம் கன்னமறையும்,
இவ்வளவு காத்திரத்தையும் களமிறக்கிய எங்கள்
கல்லறை தேவர்களின் கரம் எங்கள் திசைஏகி,
உணர்வாலே எங்கள் உளம் சீண்டும்,

விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்,ஆயின்
அஞ்சி நிற்கும் எங்கள் வினை ஏற்ற,
துஞ்சி நிற்காத துறம் கேட்கும்,மிஞ்சி என்ன
உள்ளது எம் ஊர் மீட்க?
துஞ்சாமல் நாம் துர்க்கிப்பை துற மறைத்து,
அஞ்சாமை அரண் ஆற்ற நாம்,
கிஞ்சித்தும் கிறங்காமல் கீர்த்தெடுத்து,
வெஞ்சமரை வேணவேண்டும்.

வஞ்சித்த வாகை எம் வசமாக்க,
செஞ்சித்த சேரனின் தீரமேற்ற,
சஞ்சீவிதங்களை எம் மையம் தேற்றுவோம்,அன்றி
கஞ்சித்துப்போகும் களமே காண்போம்.
எஞ்சியதை ஏர்த்தெடுத்து
சீராக்கி எங்கள் யாகம் மொய்வோம்.

தர்க்கிக்கும் நேரமில்லை தயங்குவதற்கும் சாரமில்லை.
வேர்க்கங்கு வேகமேக்கி நேர்த்த படை வாகையிறக்கி
ஊர் திரும்ப உரமேற்போம்,உளவுரணால்,எங்கள் மண்
தரமேற்போம் தக்க,

உற்றபணி உய்த்தங்கே உயர,தேசப்புலர்விற்காய்
தேர்ந்த அணியை தேசப் பிரசவத்திற்காய்,
ஆழக் கருக்கொள்வோம்.
ஆர்த்த பகை அருக்கொள்ள.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்