வெள்ளி, 29 மே, 2009

பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.


தூரிகை,
ஓவியங்களின் ஆளுகையை கையகப்படுத்தும்,
குவிவு மையம்,
கசிவுகளையும்,களையும்,கண்ணிமைக்கும் கணத்தில்,
கனிவொற்றியதையும்,மின்னலடித்து,
மிகையேற்றியதையும்,
தைக்கும்,

காதலின் வாசலில்,கலம் கொள்ளும் மோகத்தையும்,
சீதளக் காற்றவளை சிலாகித்துக் கொண்டதையும்,
குவளையத்தின் வாசலில் குருந்து குடியிருந்ததையும்,
குபேரமாய் குறியிட்ட என்
தூரிகைத் தோழா!

குமரியின் வாசலில் குடிபுகுந்த கூதலையும்,
கூடிநின்று குதூகலித்த கூட்டத்தையும்,அகல மறுத்து
அகமேற்ற ஆதீன, சுவாசங்களையும்,ஆதிமுதல் அந்தம்வரை
முகமேற்ற முகந்தங்களையும்,
முடிவுறதா பந்தங்களையும்,
இன்ன பிற வாழ்வியலின் தர்ம,அதர்மங்களையும்,ஆதர்சங்கள்
அகம் பின்ன நினைவுப் பிறாண்டல்களையும்,
நினைவின் உச்சி மோந்து
வியாபம் விகாசிக்க வித்திட்ட என் நண்பா!

அன்று,
உன் தூரிகையை தீ பட்டு தீந்தெழுதிய,
உன் மென் கரங்களால் மல்லுக்கட்ட மனிதம் சூடிய மகோன்னதனே,
ஆதார்சங்க அகங்களை அடிமுடி தேடி,சமூக அவதானங்களை,
ஐயமின்றி அரங்கேற்றியவனே,
ஏனிந்த ஏகாந்தம்?
மௌனிக்க நீ ஏன்
மகரந்தம் இழந்த மர(ன)மானாய்?
ஓ!
காலக் காற்றரைக்க கசிந்த உன் உள்ளத்தின்
உருமங்களை உள்வாங்கு,உவகையை நீ மட்டும்,
உருத்தியிருக்கவில்லை.
இந்த ஊனம் உனக்கு மட்டும் உரித்தானதில்லை,
மூசும் காற்று
உன் முகத்தில் மட்டும் முகவரியை நூர்க்கவில்லை.
எரிந்த எங்கள் வேரின் நுகை உன்னை மட்டுமே,
நரித்தெடுத்ததில்லை,
உன் ஓவிய பரிபாசையில் முடிந்தவரை முகங்கொண்டு,
சோகத்தின் வாசலிலும் சாகசம் வீற்றிருப்பதாய்,பின்புல
வர்ணம் தீட்டி வலியை விரட்டி வலிமையின் ஒலியை,
ஓங்காரம் கொண்டு ஔடதம் தடவியவனே,
உன்
அகத்தை அங்கே மீண்டும் அகப்படுத்து,உன்
வீட்டு மூலையில்
முகமிழந்து உன் ஆளுமையின் வலு தேடும் உன்,
தூரிகையை முத்தமிடு,
என்,உன் வீட்டு வாசலில்
வந்தழித்த பகையின் வடுவை வைரியம் உரைத்து உராசு,

ஈழத்தமிழர் இன்று ஊனம் தரித்து நின்று,
தாயும்,சேயும்,தன் சொந்தம் அற்று,ஆடும் அவலத்தை
தேசம் நோக்கி ஓவி,
எந்தையரின் விந்தை நிலம் கந்தகத்தால் கார்ந்தெடுக்கப்பட்டபோது,
விந்தேற்றி எம் வீரியங்களை பகை விந்தகமாக்கியபோது,
கந்தறித்து எங்கள் குடி அந்தம் முதல் சொந்தம் வரை,

பந்தம் அறுந்து, பாழும் பகை சிதைத்தபோது,அவர் விரிந்து எரித்ததை,
ஏகத்தின் முகத்திலறைந்து முகவரியிடு.
எறிகணையின் ஏவலால்,தறிகெட்டு போன தமிழ் மணம் தீட்டு,
கதிகலங்கி காயமேற்கு முன்னே காலன் வசமான எங்கள்,
பந்தங்களின் பாதையை விரிவாக்கி வித்தகம் ஏற்று,உயிர் தமிழிற்கு
உடல் மண்ணிற்கென வீரம் விதைத்த எங்கள் மானம் காத்த,
அந்த மாவீரங்களை மகத்துவம் சூழ,மருளாமல் மகிமையிடு.
பொறி கலங்கி,உடல் கருக உறுதி பூண்டு உரிமைப்போரிட்டு
உவகையாய் உயிர் நீத்த புனிதர்களை பூங்காவியம் வரை,

எங்கள் கருவி காத்த காவியர்களை காத்திரமாய் கனமேற்று,
வீர நிலம் சொரிய விகுதியாகி தமிழ் மானம் பேணிய
மானர்களை விதித்தொரு வீரியம் வரை.
உந்தன் மனிதர்களை மகுடம் சூட்டி ஓரு மகத்துவம் காவும் காவியம் தீட்டு,
உதிர்ந்தது,
தீர்ந்தது,
மரித்தது,மானம் காத்தது,எல்லாமாக எரிந்தது,
எச்சம் கரைத்த வன்னி மண்ணின் வைராக்கியம் சிலாக்கியம் சிந்த ஒரு
பெருங்காவியம் வரை.,

அது மட்டும் போதுமா?
இல்லை ஈனர்களின் ஊனவலையில்,
உற்றதெல்லாம் அற்று,
இன்று வதைகளம் காணும் எங்களின் குஞ்சுகள்,
குழந்தைகள்,குமரிகள்,குமரர்கள்,ஈறாக வயோதிபம் வகைந்தவர்கள்,
முதிர்ந்த மூதாட்டிகள்,இத்தறை அவலம் சூழ இன்று முள் கம்பி
வேலிக்குள் காரிக்கும் இவர்களின் வதையை வனைந்தொரு வாரியம் இழை,
இன்னமும் உன் தூரிகை தீட்ட வேண்டிய வேணியம் உண்டு,

இத்தனை அவலம்,வரைய துடைதட்டி தோள் கொடுத்த,
கொலைஞர்களின் கொடுங்கரங்களை,கொடுமதியர்கள்,
உசாவி,துழாவி,உயர் மனம் நீட்டித்தாக உன் உறவுகளுடன்,
வாஞ்சையாய்,வகிடெடுத்து,வலைவிரித்து,எம் முகம் எரித்த,
துரோகத்தின் ரோகங்களை,அது விழைத்த ரணங்களை,
ரோகம்,கோபம்,அதனூடான வெப்பியாரம் தரிக்கும் வெம்மைகளை

உன் ஊடகமான தூரிகையால்,
உன் மத்தமாய் ஓங்கார ரகம் வெப்ப உக்ரோசமாய் உரைய வரை.
பேரின அரக்கர்களின் அன்னியர்கள்,அவர் தம் வேசத்தனத்தை,
சிரித்து,சிரித்தே,வரிந்து,வரித்து
வன்னியின் வாகையை,
நெஞ்செரித்ததை,நெடுங்கனல் நெடுவ,
ஆரிய நெஞ்சகர்களின் வக்கரிப்பை,
விதிபரப்பிய விகாரத்தை,

சுடும் நெஞ்சின் சூட்சுமத்தை நேரியலாக்கி,
நெடுவீதிகளின் முகவரியில்,பிரபஞ்சத்தின்,
பிரதிநிதிகளின் பிரக்ஞை கறந்து நீற,
பீடுடன் பிரவாகித்து பிரம்மமாய் பிரவாகி,

காங்கிரசின் வன்முக நெஞ்சகம்,
இன்றும்,இனியும்,எனியும்
வரலாறாய் வரைத்திருக்கும்,கறை நெஞ்சத்தை,
மொண்டைச்சியின்,
முகாந்திரத்தை,
இனி வரும் எங்கள் சந்ததிகளின் சபைக்கு,
உந்தனின்,உலக தமிழரின் ஊனமுகத்தை,சகல தாற்பாரியமும்,
சாற்றும் சாகசம் துலங்க துல்லியமாய்,
உன் தூரிகை தூபங்கள் துணைத்து துலாம்பாரம்
துதித்து தூரி,
என் ஓவிய,தூரிகை துணையே.

ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு,புரியுமா?
என் புனிதனே,
தமிழின வாழ்வில்,ஈழ விடுதலை வெங்களத்தை,
நாம் சாம்பலாக சகவாசித்தாலும்,
மறையாத இந்த வன்மம்,
நெஞ்சில் பூத்த நெடு நெருப்பாய்,
வையகத்தில் என்றும் வடுவாய்,
இந்த உயிரகள் உறையும் வரை,
வகிடெடுத்து பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்