செவ்வாய், 12 மே, 2009

திசையெல்லாம் தீயாய் எழு.


எனதான இந்த பாதுகாப்பான நிலையிருப்பு
என்முன்னே விரிந்திருக்கும் வலைவிரிப்பு,
எனக்கானதான இந்த நுகை தரிப்பு,
அதனால் நான் கொள்ளும் விகாரிப்பு,
ஆகையினால் என் அகம் கொலுவேற்றும் வசீகரிப்பு,
இத்தனையும் என் தேசத்துறவு எனக் களித்த பரிசளிப்பு,

வீடு,வாசல், பஞ்சணை மெத்தை,அது தரும்
பரித்துவமான தஞ்சணைகள்,வந்தனைகள்,
வாசல் நீ கீழிறங்க கால் ஏந்தும் சொகுசு மகிழூந்து,
மனையாள்,மக்கள் அவர் வசம் வரமாக மேலோங்கும் மனக்களிப்பு
இத்துணை மஞ்சங்களும், மங்களங்களும்,
உன் தேசத்துறவு உனக்களித்த மங்கலம்

உன் இன மாந்தர்களின்,
உனதான உறவுகளின், உயிர்ப்பிலும்
அவரான உணர்வுகளிலும்,ஊசலாடியதாக நீ உரைத்து,
கரைத்த பொய்யிலே புலர்ந்ததே
உனதான இந்த முகிழ் விரிப்பு,

உனதான
கடந்த காலங்களின் ஞாலங்களை
இன்றாவது உன் மனக்கண்ணில் குடியிருத்து,
கொஞ்சமேனும் நிதானமாக உன் மனசாட்சியுடன்
அகவுரை,

இது உனக்குள் நீயே நடத்தும் விசாரணை
இங்கு நீயே வழக்கறிஞன்,நீயே குற்றக்கூண்டின் குடியானவன்
நீயே சாட்சி,நீயே பிரதிவாதி,
ஏன்?
நீ தான் நீதிபதி.
எந்தவிதமான சஞ்சலங்களையும் சகமேற்றாமல்
சாகாவசமாய் உனதான விசாரணை உனக்குள் உருவாகட்டும்,
இப்போது கூறு,
நீ யார்?
உன் அடிவேர் எங்கு மையங்கொண்டது?
இன்றைய உந்தன் இடப்பெயர்வின் ஆழ வேர் எது?
உனதான தற்போதைய வாழ்வின் குவி மையம் யாது?
எங்கிருந்து இந்த சுகபோகம்?,
யாரை உன் சுட்டுவிரல் சுட்டி கட்டியங் கூட்டி
கனிமங் கொண்டது,இந்த சுக வாழ்வு?

உன் கையகம் கருக்கொண்ட களிப்பான,உவப்பான
உன் வரையில் சுவர்க்க வாழ்வின் சூத்திரம்,
இதனூடான பரிமாணம்.இன்றகற்றும் உனதான
ஒய்யாரவாழ்வு.

இத்தனையையும் உன், என் இனத்தின் குருதியில்
அவர்தம் தியாகத்தில்,வேள்வியில்,
வார்த்தைகளிற்குள் கட்டுப்படுத்த,ஒதுக்கமுடியாத
அடிப்படையின் அகத்தை நிதானமாக தரிசிக்க,
உனக்குள் குற்ற உணர்வு குமுறவில்லையா?
உனதான வேர்கள் அங்கு விழுதுகளுடன்,
எரிவது புரியவில்லையா?

இத்தனை சுகத்தை உன் வசம் வாசம் கொள,
இத்தனையையும் நீ அகமெரித்தாய்,
இன்று உன் இனம்
என் சனம்,உற்றார்,சுற்றம்,உறவு,சொந்தம்,பந்தம்
பாட்டன்,பூட்டி,
அன்பான தாத்தா,கொள்ளுப் பேரன்,பேத்தி
மாமா,மச்சாள்,மச்சான் அத்தான்,
இத்தனையையும் தகமாக தாங்கும் சமூகம்.

அத்தனையும் இன்று காமுக, அரக்க,இனவெறிக் கூட்டம்,கணை எறிந்து,
பாதுகாப்பென்ற பாதைவிரித்து அதற்குள் முகம் கொள்,
உனதான பாதுகாப்பு எமதானதென வழமைபோலவே பொய்யுரைத்து,
எந்த வக்கற்ற நிலைமையில் வேற்று வழியற்று இந்த
ஆரியத்தின் வலையத்தில் வாழ்வழிந்து போயினரே,
எங்களகத்து சொந்தங்கள்,தமிழினத்து சாகரங்கள்.

என் உணர்வுகள் ஊறி,என் மண்ணின் மகத்துவம்
சாற்றி,போற்றி என் முந்தையர்,தந்தையர் வாழ்ந்த
என்,உன் மண்
இன்று ஆக்கிரமிப்பு பயங்கரவாதியால்,
மகிந்தாவின் மனிதாபிமானம் அறவே அற்ற மெத்தனத்தால்,
கோர இனவெறியால்,கொலை நெஞ்சக கூத்தால்,

இத்தனை உறவுகளையும் அள்ளி துடைத்து,
சாவு விரித்து,எங்கள் சந்ததி அழித்து,இன்னமும்
சாந்தி கொள்ளாத இனவெறியன்,
மதி மயங்கிய மகிந்த சிந்தனையின் சாகித்தியம்.

பாசக்கயிறு எறிந்து என் பாச உறவுகளை,
பாவி எமனவன் கொல்லவில்லை,மாறாக
ஆவி கலங்க எறிகணை ஏகத்துக்கும் வீசி,
கொத்தாணிக்குண்டெறிந்து,இரசாயனக் குண்டு போட்டு,
ஆட்டிலெறி எனும் அரக்க குண்டடித்து,
நேரகாலமின்றி,வயது வித்தியாசமான்றி,
உணவை,மருந்தை பொறியாக்கி,
தாகமகற்றும் தண்ணீரை விசமாக்கி,
குற்றுயிராக,கொலையுதிராக,கொன்றான்,
இன்றும் கொன்றும் குவிக்கின்றான்,

என் இனமோ இன்றோ,நாளையோ,முற்றாக முளையழித்து
குவித்துவிடுவான் கொலைக்களத்தில்,
வன்னியின் இன்றைய வசந்தமே இந்த அவலத்தால்
முகங்கொள்கின்ற உண்மை நீ அறியாயோ?,

இத்தனையும் நீ அறிந்தே இருப்பாய்,
பாயென்ன?
இருக்கின்றாய்,
ஆயின் நீ என்ன அறம் ஆற்றுகின்றாய்?
உன் பரம்பரையின் பாரம்பரியத்தை
புறந்தள்ளி,புறம் கூறி
ஒளிந்திங்கே வேற்று முகம் காட்டி, ஒரம்கட்டுகின்றாய்,
ஒதுங்கியே நின்று வேடிக்கை வேறு பார்க்கின்றாய்,
சமயத்தில் முதலைக்கண்ணீரும்,மதில் மேல் பூனையாக,
சந்தர்ப்பவாதியாகி சதிர்முகம் கொள்கின்றாய்.
சில சந்தர்ப்பத்தில் சர்ப்பமாகி,மூசி விதி
வழியென விகல்பம் வீச்சுகின்றாய்,

போதும் உந்த போலிமுகம்,அரிதாரவேடம்,
முகத்திற்கஞ்சி வேசையாடலை அறவே தவிர்,
அறமாய் விரி.
ஆக்சையான வசீகரம் உன்னை வளம் கவளட்டும்.
ஆனதான அவலத்தின் வலமுன்னை வலையட்டும்.

இப்போ!
உனதான ஊனமாகாத இனமான,உறுதியான உயிர்ப்பான
சிந்தனையின் வீச்சுன்னை சிறப்பித்திருக்கும்,

மேலும்!
மேன்மையான,களநிலைக்குள் கனதியாக நுழைந்ததனை,
விசாலமாக உன்னில் விளைக்கின்றேன்.
வெஞ்சமரில் என் இனம் அழியவில்லை,
ஆயின்!
வீர அஞ்சலியை நானும் வியாபமாய்,
ஆற்றியிருப்பேன்,அவர் வீரியத்தை,
வாஞ்சையாய், சிலாகித்து,
இன்னமும் ஆன நிதியோ,நீதியான, மாற்றமற்ற எனதான
அதியுச்ச பங்களிப்பை என்றும்போல் இன்றும்…….

என் சுதந்திர போராளிகளின்பால் அன்றும் போல் இன்றும்,
அவர்தம் வீரத்தில், ஈகத்தில்,யுக்தியில்,
யுத்தகாண்டத்தின் தாற்பாரியத்தில்,மதியூக
தலைவனின் உபாயத்தில்,தரமான போர் வியூகத்தில்
மறவர்களின் தீ வியூகத்தில் அவர்தம் வீரியத்தில்
ஒப்பீடற்ற தியாகத்தில்,
அவர்களின் ஆற்றலின் அகம்பற்றியே என்றும்,
நிலை பிறழாமல் நிதானம் ஆற்றுகின்றேன்.

ஆனால்!
இப்போது வன்னி முகம் கொள்ளும் தாண்டவ,அகோர தளத்தை,
ஆங்கெரிந்து போகும் என் இனத்தின் அவலத்தை,
இந்த அவனியின் முகத்தில் ஒப்பேற்றி,
சர்வத்தின் முகம் நோக்கி நாம் கேட்கும் நீதியின்பால்,

இந்த அநியாயம்!
அவலம் யுத்தமல்ல,
தமிழர் இன அழிப்பு,முற்று முழுதான தமிழின அழிப்பு.
ஆதலால்!
ஆரியத்தின் அகோர வதைமுகத்தை இனம் காட்டி,
தினமங்கு சாவிரிக்கும் பாயாக என் இனம் சரிவதை,
நிறுத்த நீதி கேட்கும் எம் புலம் பெயர் உறவுகளின்,
தர்மத்தின்பாலான கவனயீர்ப்பு போராட்ட களத்தில்,
உன்னை கணமேனும் காணவில்லையே?

கயமாற்றும் உன் முகம் திருத்தி
கணமேனும் தாமதியாமல் அறம் கேட்டேகும்
என் அன்னை மண்ணின் துயர் துடைக்க உன்
ஆதார்ச கரத்தையும் அவனி வசமாக்கு,

உனதான குடும்பத்துடன்,குழந்தை குட்டிகள் ஈறாக
உன் உற்றம்,உனதான நண்பர் வலயம்,
மேலும் உன்னுடன் ஊடும் மற்றும்
மனிதாபிமனங்களுடன்.

அன்றும் சரி,இன்றும் சரி
எம் தேசமெரிவதை தடுத்து, தம் தேகமெரித்து
போராடும் என் இன சோதரர்களின் கரம்பற்றி நீ நிதியாக
ஒரு சதமேனும் சுரக்காத உன் அகக் கதவை என்னால்
மறக்கமுடியவில்லை.ஏன்?
மன்னிக்கவும் முடியவில்லை.

ஆயினும்!
உன்னை நீயே சிலாகித்து உனதான உரமான பங்களிப்பை
காத்திரமாய் கனதியாய் ஆற்று,
உன் மனையாளுடனும்,
உன் சந்ததி சுரக்க சிறப்பித்த உனதான
சந்தங்களுடன் உடனே நீ வீதி வந்து
வலிதான உன் வலம் சுரத்து,
மீண்டும் உனை உரிமையுடன்,கனதியுடன்,
கரம் கோர்த்து,

வாஞ்சையாக உன் உணர்விற்கு!
மேலதிகமான ஓர் ஆழ அறிவுரை,
நீ விழுதாக புல வாழ்வில் புணர்ந்திருக்கின்றாய்,
நன்றாக புரிந்து கொள்,
உன் இடை,அடையாளம் தான் புலவாழ்வின் குடியுரிமை,
உன் தாற்காலிக எந்த அடையாளத்தாலும்,
உன் இன சந்தங்களையோ,சொந்தங்களையோ,
சொற்பமேனும் மாற்றமுடியாது,மதிகொள்

இந்த நாட்டவனைப் பொறுத்தவரை மட்டுமல்ல,
உன்னைப் பொறுக்கியவரையும் நீ குடியிருக்கும் இந்த வாடகை வீடு
உன் சொந்தவீடாகாது,
இந்த இனம் என்றுமே உன் அக இனமாகாது.
இங்கு இவர்களின் மனதில் நாம் என்றுமே அகதிகள்தான்,
விரைவில் அகற்றப்படவேண்டிய கழிவுகள்தான்,

இந்த சுடும் உண்மையை நீ தினசரி உன் வாழ்வாக
உள் வாங்கி இருப்பாய்,
இல்லை என்றால் உன் அகம் இழைந்து கூறு.
எப்படி?
உன்னால் உனக்கு நீயே பொய்யுரைக்க முடியும்?
ஏனெனில் இதுதான் யதார்த்தம், நான் தினசரி,
ஏன்? என்போன்ற எத்தனையோபேர்
முகம் கொளும் மறுக்கமுடியாத,
உளம் சுடும் உண்மை இது,

ஆகவே,
உனதான உன் சொந்த தாயகத்தின் விடுதலைக்கு,
தயக்கமில்லாத ஒப்புவமையற்ற,
ஓளவியம் ஓம்பு,
உன் சந்ததிகளிற்கு சந்தேகமற்ற உண்மை உரற்று,
நாம் யார்?
எம் செளகரிய வாழ்வின் சகம் இயற்று.

சாவகமாக!
சாதூரியமாக,
எம் இன விடுதலையின்,மகத்துவத்தின் காத்திரத்தை,
தமிழீழம் மலரவேண்டிய கால நித்தியத்தை,
எமதான தாய் மொழியின் தாற்பாரியத்தை,
சாந்தமாக,நெஞ்சில் ஊற,
அந்த விடுதலையின் விவேகத்தை,
காலம் எமக்களித்த காத்திர தகமையை,

கரும் புலிகளின் உன்னத தியாகத்தை,
உவமைகளிற்கப்பாற்பட்ட காவியத்தை
வான் புலிகளின் வைராக்கியத்தின் வாகையை,
வலிமையாக நீ உரத்து உரை,
விடுதலையின் வாசம் வாசல் பரப்பு,

அதை இந்த வீதி வந்து விதந்துரை,
வன்னி வாசல் வந்த சோகம் சொல்லு,
வாகை கொள வீரர் வகுக்கும் பாதை கூறு.
இன்றும் நீ இந்த வைய நிலையை உன் வசமேற்ற
மறுத்தால்,விழுதாக நீ இங்கல்ல
எங்குமே இந்த வையகத்தில்,
உன் விழுதுகள் வீர விழுதெறியா,
விசமிகளாக உன்
வாசல் வரும்.
அன்பான,ஆதங்கமான,ஆதாரமான
எச்சரிக்கை,
திரும்பிப் பார் அதையும் விரும்பிப்பார்,
உண்மையிலே நீ உன் அம்மாவின்
அன்பான ஆளுமையில்
ஓர் பருக்கை பழஞ்சோறு பருகியிருந்தால்,
அந்த பாசம் நெகிழும்,
எம் ஈழவாசல் விரியும்.

உன் முற்றத்தில் நீ ஓய்வெடுத்த,
அந்த ரகம் சொரியும்.அந்த ராகம் சொரிக்கும்.
ஆங்கு உன் முகம் தரித்த,
முற்றம் புரியும்,அந்த வாசம் நைந்த நேயம்
நெருக்குருக்கும் உன்னை நிதம் செருக்கும்.

அந்த மண்ணை,
அதன் சுவாசத்தை சுவாசிக்க இன்று நீ,
வீதி வந்து போராடாவிட்டால்,
நீ போதிக்க அந்த விதிதான் வீதி வரும்.

பாசமுள்ள உன் தேசத்து பிரிய உறவே!
இனியும் நீ புறமோந்தால்,
உன்னையும் இத் தேசம் புறமோதும்,
எங்கள் மண்ணின் ஈரம் கலந்த அந்த,
சுவாசம் எனக்குமட்டுமல்ல,
எனக்காக,உனக்காக,எம்தாய்மண்ணிற்காக
எதை,எதையெலாம் இழக்கக்கூடாதோ,
அதையெலாம் இழந்து,
எதை எம் தேசியக் கனவாக விரித்து,
எங்களக வித்தகர்கள்,எம் தேசப் புதல்வர்களின்
யாசகங்கள்,வேள்விகள்,

அத்தனையையும்,
அருகற்று அகன்றெங்கும் போகாது
இளமைக்கால கனவுகளை எம் தேசத்திற்காகவே புறந்தள்ளி,
தாயக மலர்விற்காக,
வேதவாக்காக,எங்களிற்காக,
எம் இன விடியலிற்காக,
தமிழீழ மலர்விற்காக,தம்மையே,
ஆகுதியாக்கிய வீர மண்ணின் மைந்தர்களின்,
ஈகக் கனவை நனவாக்க எந்த இழப்புக்களையும்,
அகமேந்தி, இந்த யுகத்தில் எம் திடமான
தேசியத் தலைமையின் அணிவலைந்து,
ஆக்ரோசமாக போராடும் எம்
தலைவன் குழாமை பலப்படுத்துவோம்.

உன் வலிமையான,திடமான,உரமான,
ஊக்கமான,சிறப்பான பங்களிப்பை
உவப்பாக உளம்மொண்டு வீதி
இறங்கி போரடும் எங்களுடன் உன்
கரங்களை எங்களுடன் பிணைத்துக கொள்.

இன்னல் தீர்க்க இதுதான்,
எங்களது உறுதியான,இறுதியான,
இகமேகி,உரமாக்கி,
உலகவலங்கள் உள்வாங்க,உரிமையாக,
ஊர் திரண்டு,வீதி முடக்கி,
தேர் இழுப்போம்,

இந்த வையகத்தை எங்கள் வசமாக்க,
எங்களக வலி உணர்த்தி,
நீதி கேட்போம்,எங்கள் வாசல் வதைக்கும்,
பகையின்,
அநீதி சாற்றி,எங்கள் தேசவிடுதலையின்,
அத்தியாவசியம் அவனி வசப்படுத்தி,
நித்தியமாய் நிலைக்க தீர்வான தீர்வாய்,
திசைகொட்ட திசைவான தீந்தமிழீழத்தின்
அவசியத்தையும்,அதனூடான அத்தியாவசியத்தையும்,
அவனி வலங்கொள்ள வலிமை சூழ்த்தும்,

எம் இளையவர்களின் ஈகைக் கரங்களை,
ஊக்கத்துடன் உற்சாகப்படுத்தி,ஊசலாடாகாத,
உந்து சக்தி அவர் வசம் வலப்படுத்தி,
உரிமைப் போரை உரிமையாய் தலங்கொள,
தார்மீக தரமாற்றுவோம்,வந்து உன்
வலிமை உணர்த்து என் வையக உறவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்