திங்கள், 4 மே, 2009

எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்



கண்முன்னே களமாற்றும் இவ் ஒளிப்படம்
கனவாக இருக்கக் கூடாதா?
எண்ணங்கள்,நினைவுகள்,
என்னை எரித்து,அகமெரித்து,
நினைவுச் சுழல் எனை
நிலை தடுமாற வைக்க,விரிந்து நிஜமாற்றும்,இந்த
நினைவழியாக் காட்சி,

வன்னியில் வரிந்து,நின்று,நிதம் கோரமுகம் காட்டும்,
அன்னியனின் அரக்கத்தனத்தின் அழியாத,
ஆக்கிர,உக்கிர, வெறிப்பாட்டில்,
வெந்த என் சொந்தங்களின் சொரூப முகம்,

ஆம்,
கிஞ்சித்தேனும், ஈரமில்லா, இந்தியனின்
இரசாயன கந்தகத்தின்,
ஒத்திகைக்கு வித்தகம் காட்ட ஈழத்
தமிழனின் இன் முகம்.
இத்திசையில் இம்சையாய்,ஊனம் வடிய,

என் உறவின் இந்த
வேதனையை ரசிக்கவா?
இந்த காந்தியக் கூட்டம்,எங்கள்
வேதனைக் கூட்டில்,
தன் விஷ வாய்வை எம் விடியல் தவி(க)ர்க்க
வீசிக் கூத்தாடியதா?

உதட்டில் என்ன உத்சாயனம் உதித்தாலும், இந்த
உடலெல்லாம் உரித்த ரணத்திற்கு நீ எந்த
ரட்சத்தை எங்கள் ஆகுதி ஆக்குவாய்?
உன் மெத்தனமான,
அரக்கத்தனமெல்லாம் நீ
ஊட்டிய ராமாயணத்திலும்,மகாபாரதத்திலும்,
வெறும் ரசனையாய்,ரசித்ததை,வெறும்
உவமானமாய் உற்றாரை நகைத்ததை,அத்தனையையும்

இன்று எம் உறவில் ஊனமாய்க் கொடுத்ததை,
அதனூடாய் எம் இனத்தை இம்சையாய், நீ
வதைப்பதை,
இன்னமும் எத்தனை காலமென நீ நீட்சிப்பாய்?
காப்பான் கடவுள் என காலத்தை
ஒத்தி வையோம்,
ரட்சிப்பான்,அதனூடாய் உனை தண்டிப்பான் என,
கோயில் குளம் ஊடமாட்டோம்,நேர்த்திக்கடன்
நெருடமாட்டோம்.

எந்த தண்டனையை நீ ஈந்தாயோ?அதன் பிரதி பலன்தான்
எங்களெம் பிரபாகரம்கள் உன்னை,
உனதானூடான சிப்பாய்,
கலங்களை,நாளும்,பொழுதும் நயந்தெடுத்து,
களத்தில் கனதியாய்,
களையெடுத்து,சினை நறுக்கி,சீந்த
யாருமற்ற களப்பிரதேசத்தில்,
காணவும் கிடையாமல்,பெறுமதியற்று
தின்னும் உன் நாதி களைந்து,

நாதியற்றுப் போனதை நாழிகைகள்,நாட்களாக
நகர்த்த உன் நரகர பேளைகள்
தாட்ட உன் சடலத்தின் எண்ணிக்கைகள்,

காணாமல் போனோர் பட்டியலில் உங்கள்
அடையாளங்களும்,
கருக் கொள்ளும் கட்டியல் எப்போதோ தயார்,

ஏனெனில் உங்கள்,
கள யதார்த்தம் அதுதான்,
காலப் பிரளயம் விரைவில் இந்த சங்கதி சாற்றும்,
கானல் வார்த்தை இல்லை கால யதார்த்தம்,

கரிகாலன் ஆற்றும் கால உலாவிது,
ஏந்த இந்திய அரக்கர்,நரகர் கைகூட
உன் கரம்பற்றி கூப்பாது.

காரணம்,
காலவெள்ளத்தில் கரையும் கந்தகப் பொடியின்
கரைசலில் உன் உடல்
ஊனம் நீர்த்து,
சாணம் தெளித்து,சாக்காடாற்றாது, சங்கமிக்க
சகாக்களற்று சாக்கடையாகும்.

தர்ம யுத்தத்தின் சாகர சங்கல்பம்,
சாவெழுதி,ஆகுதியாகி,எம் அறம் காக்கும்,
காவியப் பர்வதங்களின்,
பாமாலை சங்கமம்,
ஒப்பாரி ஏகாத ஓர்மங்கள்,
தப்பாத முகாரி ஒலிக்கும் சந்ததிகளின்,

சப்த நாரி ஒழித்து,
பூபாளம் ரீங்காரிக்க தங்களை,
அனல் பாதமாக்கும்,
ஆங்கார சொரூபங்கள்,

பூம்புனல் மேவும் இனி எங்கள்
வயல் பரப்பெங்கும்
பூங் கோதி அமைக்க பூத்த இவ் யாகங்கள்
புவியில் ஈழம் சூடும்,
மகோன்னத மகோற்சவம்,
மாண்பாய் விரிய பூம்பாவாய்,

புவியில் தமிழீழம் காத்திரமாய் புன்னகைக்கும்.
எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
ஆணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்