சனி, 30 மே, 2009

உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.

சிலாகிக்க சிதையும் சிந்தையின்,
சிரைவில் எதையும் வியாபிக்க,
கரையும் கனவாய் காலம் விதைத்த,
சுரப்பை யாம் எவ்விதம் நிரவுவோம்?

நிலாப் பொழிந்த முற்றமும்,
உலாவந்த உதயசூரியமும்,
புலமொழுகி நின்ற புயமும்,
வலம் வந்த வயல் பரப்பும்,
இன்று!
எந்தன் வானம் வெறிக்க வைரசாய்,
வனைந்து உளம் நொருக்கி,மன வலிமை-
உடைக்கின்ற இந்த உதிரத்தை,நாளும்-
நாளத்துடன் நலிந்தெடுக்கும் வினையை,

எங்ஙனம் யான் இறுகப்பற்றி இறுமாப்பெய்வேன்?
ஐயகோ!
என்றழுது இந்த வையப்பரப்பில் எதை யாம்-
வினைவோம்?
சிதிலாமாகமல் எம் சிந்தையை சீராக்குவோம்?
உதிலமான எம் உறவின் கைலாகு கையேந்தி-
பதிலொன்று பலமாய் எம் பரப்பெங்கும் பாவ,இந்த
நித்திலப் பரப்பில் எம் நீதி வேண்டி-
நிரையாக போர்தொடுப்போம்.

இன்று கானல் நீராய் போனதாக காலம்-
ஏந்தும் கதிரை,
எம் கரமாக்க ஆழமாக காலப் பணியை,
வீரியத்தை அகலமாய் அணிந்தெடுத்து,
பாரிய பொறுப்பேந்தி பரவலாய் பரிந்தெடுப்போம்.
ஊறிய வன்னிக் குருதி வெட்கையின்,
வைப்பகத்தை வெப்பகமாய் வலி மூசி.

இழத்தலும்,விழைத்தலும்,
வையப்பரப்பில் வாசம் சூடும் சூத்திரம்.
விழலாய் இறைந்ததாய் நீருக்கொன்றும் வரலாறு இல்லை.
வீசுவது தென்றலானாலும்,புயலானாலும்,
பூமி அதிர்வென்றாலும்,
மூசிய சுனாமியானாலும்,அழிவு இயல்பானதே அன்றி,
அகிலம் ஆரையிழந்து போவதில்லை,இழந்ததை
மீட்கும் சக்தி,
எந்த வல்லனுக்கும் வாழ்வில் இல்லை,
இவையெல்லாம் வராமல் தடுக்கும் தாக்கம் எவர்க்கும் இல்லை,

ஆனால்,
உற்ற தற்காப்பை மட்டும் தரம் கவள தரிசிக்கலாம்.
இந்த தரமாற்ற தமிழனுக்கோ தக்க தரையில்லை,
அழிவுண்டோம்,
ஆயினும் அனுபவத்தின் முகவரியில்,
உற்ற வகை மிகக் கொள்வோம்,தவிர்த்தால்,
தளிர்க்காது தரணியில் தமிழனின் தகம்.

ஆன அழிவில் மீண்டதான வரலாறே,
இந்த இகத்தில் இயக்கம் இசையும்.
இயல்பு.
வசப்படும் வெற்றியை வளங்கொள்ள,
அற்றதை எல்லாம் மனமிருத்தி,
உற்றதை உள் வாங்கி,பெற்றதை மீண்டும்,
பிறப்பாக்க உதிக்கும் பிரபாகரங்களை,

விறைப்பாக ஒர் வல்லமையை வியல்பங்காண,
விதையும் மலர்வாக கருக்கொள்வோம்.
கற்றதை எல்லாம் கரம் கொண்டு.
உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்