ஞாயிறு, 3 மே, 2009

வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.


குருதியின் சுவடுகளற்ற
குரு சேத்திரம் ஏதும் உண்டா?
பருதியில் இந்த சுருதியின் மையமே
இரத்தக் குறிதான்,

இதில் இருந்து நா(நீ)ண்ட விட்டம்,
அதனூடான ஆரை,
ஆக்கிரமிப்பின் ஆதாரம்,எல்லாமே
சுருதியாக சுவண்டிழுத்த குருதியின்
சாரத்தின் சதைப்பிண்டம்தான் இன்றாகிய உலகப் பந்தின்
உறு மையம்.

சிந்தனை சீந்தும் வரலாற்றுப் பதிவுகளும்,
கட்டியம் கூறி தரிப்பது இந்த உண்மையைத்தான்,
எந்த தேச நிர்மாணிப்புக்களும்,
உதயமான புதிய தேசங்களும்,
உறிஞ்சிக் கொண்டதெல்லாம் மானிடத்தின்
உடல்களையும்,அதன் உறுப்பினர்களையும்,

எல்லா சொந்த,பந்தங்களையும்,
ஏகமாக,தன் வாழ்வின்,அதன் வளத்தின்,
தனதான சந்ததிகளின் தனத்திற்குமாக,
இந்த இகம் இழந்தது என்னவோ?
வகை,தொகையற்ற மனித வளங்களைத்தான்,
மனித உயிர்களைத்தான்,

இவ்வளவு களைவுகளிலும்,
களை கட்டி நிற்பதுவும்,களை
சார்ந்த களஞ்சியமாய்,இன்றிந்த
உலகின் விஞ்ஞான சாம்ராட்சியம்.

ஒவ்வொரு வல்லாட்சியும்,
தன் வல்லமைக்காக வளைத்துப் போட,
வதை கொண்டதெல்லாம்,
வலிமையில்லா வகை இனங்கள்,அதன்
தரை,கடல் மார்க்க
மார்க்கங்கள் ஊடான
வல் வளைப்பால் வனைந்து,தார்மீகமற்ற
தண்டனைகளால்,தரணியில் ஆக்கி வைத்த

வகைகளின் சாராம்தான்,
இன்றுதித்த சனநாயகம்,அதனூடான
மனித உரிமைமைகள்,மனு தர்மம்,
இன்று உலகில் தன்னை வல்லரசாக்கி
வலம் வரும்
அமெரிக்கா செய்யாத
அட்டூழியமா?

குடியேறி
வந்தமர்ந்த குடி,
அன்றைய அமெரிக்காவின்,
வளமான குடியாம்
பழங்குடி செழுமையான,செவ்விந்திய இனமதை,
இல்லாதொழித்து அன்று
இகத்தில்,
அவர் பரம்பரை தவிர்த்த கோர இனவழிப்பு,

அகிலத்தில் இன்று தன்னை வல்லரசென்று,
வரம் ஏற்றும் யாகம் எலாம்,
மனித குலத்தின் மண்டையோட்டில் வலம்
வந்த பின்னான உதிப்புக்கள்,
இதில் உதிரியானது போக,
உறுதியானது நிலைகொண்டது
பலம் பெற்ற அவர்கள் வலம் கொண்டார்கள்.

இதை உளம் கொள்ள,
உறுதி வலம் கொய்ய,
ஊனமற்ற பா(தா)கை வகுத்து,
ஈனமற்ற ஈழம் காண்போம்.

எல்லாள வளம் குவிப்போம்,
சொல்லாளா தகம் தகைத்து,
வல்லாள கரம் நிறைத்து,
வரலாற்று நாயகர்களின்,
தரமேற்ற நாம் தகைவோம்.

வல்லமையாய்
ஈழ,
வாகை நாம் நூற்போம்.
கல்லறை மேனியரின் கனவுலகை,
மில்லரின் மிதமான ஆகுதி மேலொரு,
நித்திய வாழ்வரின்,நிசமான முகம் தரித்து
சத்தியமாய் ஈழம்,இந்த


சந்ததியில் நாம் சமைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்