ஞாயிறு, 12 ஜூலை, 2009

தூய களம் காக்கா காலத்துரோகிகள் நாம்.


இல்லத்தில் இருள் பொங்க
உள்ளத்தில் மருள் தங்க
கல்லறைகள் கனவேந்தும்-
ஈகங்கள் இழைந்தேறுமா?

அனுதினமும் அங்கு அரங்கேறும்
அவலங்கள் அவர் அகம் அரைக்க-எந்தன்
ஆற்றலற்ற ஆளுமைகள் அழுகாற்றும்-சொல்ல
முடியாத சோகங்கள் சோகையாற்றும்

விடிவேதும் விதையாதா என்ற
முடிவேந்த முகைகொள்ளும் முற்றங்களே
முனைப்பாய் முகம் அறையும்-எந்த
கனைப்புக்களும் கனவகற்றும்.

வதைகள் அங்கே வரமேறும்-எங்கள் இனம்
பதை,பதைத்து பரமேறும்-இழக்க
ஏதுமற்ற ஏனங்களாய் யாவும் ஆங்கே
யதி யகற்றும்,நிலை மாறா நீட்சிதான் நிலைத்திருக்கும்.

முடிசூடி ஆண்ட எங்கள் மூதாதைகள் முகம் அரிப்பார்,
வடிகட்டி பாவி அவன் பக்கம் அகற்றும் பாதையினை பார்த்திருப்பார்,
முடிவேது,உன் முகமேதென என்னை முகர்ந்திருக்கும் மூச்சுக்காற்று-ஆரிய
கடிவேதனையை களமகற்ற காத்திரமான என் களம் கேட்கும்.

நடக்க,இருக்க,படுக்க,
உண்ண,உறவுகளின், உருவமற்ற
திண்மங்களே திராவகமாக என் எண்ணம் திரிக்கும்,
எண்ண ஓட்டங்களை எந்த முகாந்திரத்தில் காந்திருப்பேன்.
இணையத்தில் இலகுவாக இழைந்திருக்கும் செய்திகள்.

இவையெல்லாம் ஒரு கொடும் கனவாக
இருக்காதா என்ற எண்ணங்களை என்ன செய்ய?
முகம் அறையும் யதார்த்தங்கள் என்னை ஏளனம் செய்ய,
ஏதும் துணையாற்ற தூமங்கள் என் மனத்தை மத்தாக்கும்.
துரோகி என்று என்னை நானே எள்ளுவதைத் தவிர
ஏது கூறி என் உள்ளம் ஆற்றுவேன்?

மதிமயங்கா மாவீரம் எந்தன் மனம் எரித்து
துதிபாடா தூபங்கள் என்னை சுட்டெரிக்கும்,
விதிமாற்ற அவர் விதைந்த வீரியங்கள் எல்லாம்
சதியாற்றும் என் சந்தங்களை சபிக்கும்.ஆம்
புல வாழ்வு சுகிக்கும் நாமெல்லாம்
உறவாடிக்கெடுத்த உத்தம துரோகிகளே என்று எங்கள்
பெயர் கூட பேதமை சாற்றும்.

ஆம்,
யாரென்ன யாற்றினாலும் இங்கு
புவி வாழ்வில் புல வாழ்வில் நாம்
பொறித்த இந்த போற்றல்களின் பொதுவான நாமம்.
கையாலாக காலத் துரோகிகள் நாம்-நீவிர்
ஏற்றாலென்ன,எறிந்தாலென்ன தூய களம் காக்கா
காலத்துரோகிகள் நாம்.என்ன
கைமாறு காற்றப்போகின்றோம்,
காலக் கதிரவன் நாளை ஞாயம் ஞாற்ற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்