ஞாயிறு, 17 ஜனவரி, 2010

விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.


நினைவெரியும் நீங்கா நியம் எரியும்-
தணலெடுத்து இந்த தளத்தில் தகிக்கும்,
உணர்வுகளை உலையிறக்க நெகிழும் எம்-
மூச்சுத் திணறல்களை எந்த மூலிகையில்
புனருத்தாரணம் புனைக்க?

கனவிருக்கும்,காத்திரமான களமிருக்கும்.
நினைவிருக்கட்டும் நீலியர்களே!உந்தன்
கானல்கள் உங்கள் கழுத்திறுக்கும்.
காலம் கலம் சுருக்கும் கனதிகள் உன்-
கண்களில்,
தேர்தல் தேற்றத்தில் உந்தன் ஊர்தலுடன்
உணர்வுகள் உற்ற உரமேந்தி--

ஒற்றர் குல ஒத்தடம் இன்னும் எத்தனை நாள்?
கற்றல் என்றும் உன்னில் கருக்கொள்ளாது.
விற்பனங்கள் அற்ற விதையற்ற வீணர்களே!
சொப்பனங்களை இனி என்ன செய்வதாக உத்தேசம்?
நெருங்கும் நாளது உற்ற உன் நெற்றியை உறுதியாய்-
விறுமங் கொள் விபரமாக --

புத்தனின் அகத்தில் எந்த முகைப்பிருந்ததோ?
அது-
எந்த சித்தனின் சிரசிலும் சிறப்பெய்யவில்லை.
அது
நுகைகூட நோக்க தேற்றம் கொள்ளாது.
எத்தனின் ஏகாந்தம் ஆக நீ
எந்த மூலையை முகர்ந்தாலும் முகத்தில் ஒளி உமியாது.
பக்தனாக நீ எந்த பகடையான பட்டுடையுடுத்தாலும்,
வித்துக்களை எங்கள் வியூகம் யூகிக்கும்.

சற்றே பொறு போக்கற்ற இரண்டகர்களே!
முற்றிலும் மாற்றான முகை நீ இளைக்க,
வெந்தணலில் வெந்ததான உன் வெளிகளை
வெற்றிச் சங்கூதி எம்மவர் மேதினியில்
வேலியோடு வதைப்பர்.

முடிவல்ல!
இது முகிழ்வென எம் முற்றம் முகம் பூரிக்கும்.
அழகல்ல!
அளவளாவும் அத்தியாயமுமல்ல!
சரிவல்ல!
சங்கம் வளர்த்த தமிழ் சாதிக்க இன்னமும் இழையோடும்.
வரிவெல்ல!
கரிகாலன் காலம் உரைத்த களம் மெல்ல,
மேதினியில் மேவ.
உளம் பூண்டு உறுதியுடன் புலம் பூத்த
புவனம்.

எடுத்த காரியம் எதுவும் உடன் அறுவடையாகாது.
எந்த வித்தும் நட்டவுடன் பலனளியாது.
அடுத்த அசைவுகள் ஒவ்வொரு ஓர்மத்திலும்
ஓசையற்று நகரும்.
நர்த்தனங்கள் நடனத்தில் மட்டுமல்ல -ஈழ
கட்டுமானங்களும் அதே கனதியில்.
விபரங்கள் எதுவும் விளம்பரம் விதைக்காது.

புதன், 13 ஜனவரி, 2010

ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-

ஆதவனின் ஆதங்கக் கதிர்கள்,
ஆரமது வெளித்து ஆனந்தமாய் அரங்கேற,
புள்ளினங்கள் புவி மீது பூபாளம் இசைக்க,
வண்டினங்கள் ரீங்காரித்து செண்டினடி சேர்ந்து,
பண்ணிசைக்கும் வேளையிது 'பா' இசைக்க வாராயோ?

விடியலின் வேதினியில் படிமங்கள் பல உண்டு.
மடியல் அதை விலக்கி மாண்பு பல இயைந்திங்கு,
படையலதை பக்குவமாய் பரந்திங்கு பரப்ப வேண்டி,
உடையன,அறுவடையில் அரிந்தன,செடி,கொடியில் சேர்ந்தன,
செங்கதிரோன் செவ்வடியில் சேமமாய் செதுக்கி வைத்து,
நன்றிக் கடன் நயக்க வேண்டும் நாம் அதை செபிக்க வேண்டும்.

உழவர் திருநாளில் உவகையாய் இவைகளெல்லாம்-சூரிய
உதயத்தின் முன்னே உளமாக இயக்க வேண்டும்.
இதயத்தை நெக்குருக்கும் நேயங்கள் நேர்த்தபடி,
அவயங்கள் ஆதவனை அர்ப்பணிப்புடனே அணைக்க ஏவும்,
தூயமலர் துலங்க அவன் தாளடி அடிபணிந்து,
வேணவேண்டும் அவன் வேதனம் எமக்களித்ததை.

ஆண்டாண்டு இக் காரியத்தை ஆதங்கத்துடன் அர்ப்பணித்தோம்-
ஆனால் ஆண்டு 2009ல் யாண்டு கொன்று,கொண்ட
யாத்திரத்தை நினைவேந்தும் நேத்திரங்கள் எமை வதைக்கும்
சூத்திரத்தின் வேதனையில் சூரிய வணக்கமது வனக்கவில்லை.

பிணக்கது தீராமல் எந்த பிண்டத்தில் பிதிர்க் கடனாற்றுவோம்?
இணக்கமது இன்றுவரை வரைபின்றி எங்கள் சுற்றமெல்லாம்,
சுணை ஏதும் இல்லாமல் சுற்றிவர முட் கம்பி வலைக்குள்ளே
பிணை எடுக்கக் கூட பிறப்பின்றி வெறிச்சோடி வேகின்றார்.

உற்றமே,உறவே!
உனக்கிது புரியுங்கால் சுற்றத்தின் சுவாசத்திற்கு
என்ன கடனாற்றுவதாய் இன்று உறுதி கொள்கின்றாய்?
ஆக்கி படைப்பதுவும்,ஆனபின் மூச்சு முட்ட உட் கொள்வதுவும்,
ஆசுவாசமாக பின் அரட்டை அடித்து,அயலவரை நக்கலடித்து,

இப்படியே உன் பிறப்பின் பயனெய்து!
எப்படியும் சுரக்காத உன் சுவாசத்தால்-எந்த
செப்படி வித்தை செய்வதற்காய் சேந்தனடி தொழுகின்றாய்?
அப்படியே உன் ஆத்மார்த்த ஆண்டவனடி சென்று இவர்கள்
ஆன "பயனென்கொல் வாலறியான் நற்றாள் தொழார்" எனின் என்று
உச்ச குரலில் உனை மறந்து குரல் கொடு -அத்தனையும் சேமம்

அடுத்த ஆண்டும் தை பிறக்கும்-ஆனால்
எங்கள் முற்றத்து மல்லிகையின் முகைகள் பிறக்குமா?
ஆரியனின் ஆழ சிறைதனில் அந்தரிக்கும் அவர்கள் ஆத்மா தரிக்குமா?
ஐயனே!
ஆற்ற உன்னால் ஏதும் ஆகாதெனில்-அவர்கள் முக(கா)ம் தரிசி
ஆக்கி படைக்க,புதுப் பட்டாடைக்கு நீ நுகர வைத்திருக்கும்
பணமோ? இல்லை உன் மனதோ எதுவாகிலும் அவர்கள் உளம் தரிசி.

உன் அரவணைப்பு!
ஆதங்கச் சூடேற்ற ஆதவனிற்கு நீ உரைத்த ஆனந்தத்தை விட-
ஆயிரம் ஆசிகள் உன் அகம் கொள்ளும்.
புலத்தில் வாழும் என் அகத்தோரே!
உங்கள் புலவில்
தை திருநாளில் செலவாக்கும் லயத்தில்
புழங்கும் பணத்தில் பாதியையாவது -அங்கு
எந்த உலவுமற்று உலங்கும் உன் உறவிற்கு,
உதவ மதம் கொள்.
மனம் கொள்.

ஊசும் உன் உயிர்ப்பெழுத உற்றவளே உயர்வாயோ?


நீ வர நினைவெழுதும் என் புலர் முகம்-நீ
வந்த பின் அது வாடும் வயப்பு என்ன?
போன பின்னே உன் போக்கங்கள் புனையும்,
பாவனைகளை எந்த பக்கங்களில் பயனாக்குவேன்?

வாசம் தரும் பூவெல்லாம் வசமிழந்து வாட,
நேசமெல்லாம் உன்னாலே நெக்குருகி போனதடி.
பாசமதின் பவித்திரங்கள் பாழாகிப் போகுமுன்னே-
ஊசும் என் உயிர்ப்பெழுத உற்றவளே உயிர்க்காயோ?

வீசும் தென்றலிலே விரக தாபம் எனையேந்தும்!
கூசும் இந்த கூர்ப்பெழுத குயிலே நீ குரலாலே,
பூசும் உன் புன்னகையில் புதிர் கரைத்து புலவாயா?
நீசர் சிலர் எம் நித்திலங்களை நிர்ணயிக்கும்,
நிலைகளிற்கு நீயேன் நிறைவெழுதிப் போகின்றாய்?
நிந்தனது ஞாயங்களை நீயே பரிவெழுது.

காயம் அது காயும் காலம் அதை ஆற்றும்-ஆர
மாயம் அதை வரையும் மன்றங்களை நீ கலைத்து,
ஆயம் அதை ஆக்கி அனந்தவளே எனை அவைப்பாய்
யாகம் அது மிளிர யாக்கும் என் யாகசகங்களை,
பாகம் அதில் பகிர்ந்து பாவையே நீ பரிவாய்.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.


விரட்டு!
ஓட,ஓட விரட்டு!
எங்கள் ஓர்மங்களை,அதன் வேர்வரை,
பிடுங்கி,எம் உறவுகளை உலைத்தவனை,
விரட்டு ஓட,ஓட விரட்டு.

உந்தன் நாட்டை விட்டு மட்டுமல்ல- முடிந்தால்
உலகை விட்டே!
உரசும் உள்ளங்களில் நாளும் கெழிக்கும்,
நஞ்சின் நர்த்தனங்கள் என்றுமே சயனிக்காது.
விஞ்சும் நாளொன்று விடையெறியும்-அதுவரை
எஞ்சி நிற்கும் எம் உறவுகளே!
விரட்டு இந்த விதை விடைத்தவனை,
ஓட,ஓட விரட்ட உமக்கு கிடைத்த-
ஓலை எழுதும் இந்த ஓர்ப்பினால் விரட்டு.

மற்றவனை நாம் மன்றத்தால்,
மருவும் ஓர் வலைப் பின்னலில்,
உருவி ஒட்டி ஒரு வகை பண்ணுவோம்.இப்போது
உடனடித் தேவை உலையன் மகிந்தாவை,
உரிந்து அவன் உடமைகளை உறுப்பாய் உருவி,
வரிந்து வகையற்ற வக்கணை வகுத்து,
விரட்டு அவனை விரட்டு!

கால,காலமாய் தமிழனை ஏமாற்றும் இந்த-
பேரினவாதியின் பேச்சை மறுத்து,ஊரினை விட்டே,
ஒரேயடியாய் விரட்டு.
ஈழத் தமிழனே!
இப்போது கிடைத்த இந்த சந்தர்ப்பம்-
இனியும் உன் வாழ்வில் இலங்கவே மாட்டாது.எனவே
சிந்தனை ஒன்று உனக்கு உவகையாய் சீண்டும் இந்த-
சீலாக்கியத்தை சிறப்பாய் சிரத்து.

அதற்காக பொன்சேகாவை போற்றென்று-
அர்த்தமற்று அர்த்தம் கொள்ளாதே-காலத்திற்கு ஏற்ப
சாதகமாய் சில சந்தர்ப்பங்களை சரக்கேற்ற வேண்டும்.
பூதாகரமாய் இந்த புலையன் புவி கொள்ள பூண்டிருக்கும்-இந்த
மீதாரத்தை மிகையாய் மிளிர்வகற்று.

அன்றேல்!
சனநாயகம் அந்தோ பரிதாபமாய்-
சன,சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
ஆதலால்!
எம் அன்பான ஆற்றல் மிகு என் இனமே!
ஆவன செய்வாயென ஆதங்கமாய் நாம் இங்கே.

மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றுதான்.
தேற்றம் இதுதான் தேய்வில்லை தேம்பி அழுதல்
மார்க்கமும் இல்லை,மாயவனை தொழுதலும் தோற்றம் இல்லை.
துர்க்கனை இந்த துருப்புச் சீட்டாம் உன் வாக்குச் சீட்டால்-
வகுந்தெடுத்து வாகையை மாற்று.
இப்போதைய,தற்போதைய தேவையான மாற்றம்.
மகிந்தாவை மனைக்கு மட்டுமல்ல விதைத்த
வினைக்கு வினையாற்ற! மறவாதே எம் மானிட தமிழரே.

திங்கள், 11 ஜனவரி, 2010

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!


ஈட்டிய வெற்றியின் ஏகாந்த முகப்பு நீ.
தீட்டிய திட்டத்தில் தீயாத தீம்பு நீ.
காட்டிய காத தூரத்தின் சுனையான கானல் நீ.
அப்படித்தான் நீ காண்பது கானலென கற்பித்தாரே-பின்
நீ சுனையென உன்னை சுற்றமெல்லாம் சுற்றக் கண்டோம்.

வெற்றிக் கொடிகள் பல நீ ஏந்தினாய்-அதனால்
கொற்றவனின் கொற்றத்தில் உன் முற்றங்கள் முனைப்பாக
கூற்றனாகினாய் பகை தொட, அவன் பரமங்கள் பங்கப்பட
புறமுதுகு காட்ட வைத்த கூற்றுவனே!
எத்தனை வெங்களம் கண்டாய் அதுவல்ல உன் திறப்பு
எத்தனை போராளிகளை பகை புலமேற்றி பங்கமில்லா
முகிழ்வனாய் பாதை நீட்சித்தாய்.



நீ கடந்த பாதை முற்றிலும் புதர்கள், புதிர்கள்.
நீ படைத்த பாதைகள் முற்றிலும் புதுமைகள்,புரட்சிகள்.
நீ கடிந்த்தால் போராளிகள் அத்தனையும் முத்துக்கள்,சொத்துக்கள்
ஆக்கி நீ வைத்ததால் ஆகினர் அஞ்சா நெஞ்சினராய்,வித்துக்கள்
உன் பாதையை,பார்வையை எத்தனை கல்லறை மேனியர்
கனதியாக உன்னால் பேணினர்?

விடுதலை காற்யையே மூச்சாக சுவாசித்தாய்-உன்
வடுக்கள் தாங்கிய மேனியால் அதையே வாசித்தாய்.
துடுக்கானதாக உன் சுவாசத்தை சுகித்த சுமைதூக்கா
தர்க்கர்கள் கூட உனதான தகமறிந்து தூக்கினர்
விடுதலை சுமையை.

ஆர்த்தெடுக்க அடிபணியா அறமேந்திய ஆற்றலே-உன்
இறுதி மூச்சை இந்தி ராணுவமா இயமன் கைவசப் படுத்த
இயலா இறுக்கம் ஈற்றது.

எழுந்த போதும்,எரிந்த போதும் நீ விரனாகவே எதிர் வினையாற்றினாய்-
பழுத்த விடுதலை பரமனாய் பாரிலே பரந்தாய்.
கொழுத்த உனை முடியாமல் கோழையர் களம் நழுவிட,
விழுத்தி உனை முடிக்க வீணர்கள் விழைய,வீரம் வினைத்த
விழா முடியே முகியே,
பகை மகிழ பாழும் இந்தியனால் இகம் இழந்தனையா?

கிட்டு எனும் கீர்த்திமிக்க கிருட்டின குமாரா!
கிட்டும் வெற்றியினை தொட்டு தாலாட்டிச் சென்றவனே
முட்டும் பகை வாசல் உன்னால் முற்றமிழந்து புறமுதுகு காட்ட!
எட்டுத் திசையிலும் ஏகாந்தனாய் ஏறிய உறுப்பனே.ஏந்தலே!

கொட்டும் மழையிலும்,கொளுத்தும் வெயிலிலும்,
சுடுக்கும் பனியிலும், சுற்றமறியா காடுகளிலும்,
களம்மைத்த கரிகாலனின் காத்திரனே!
உன் காலடிச்-
சுவட்டில் உளமேந்தும் உவகையர் உனதான,
பாதையில் உன்னதமாய் உருவமைப்பர்.

நீ
ஏந்திய தாகம்,ஏற்றிய சுடர்,வீற்றிய வீரம் எதுவும் விலை போகாது
சிந்திய குருதிக்கு மங்காத ஒளி சமைப்பாம்-நீவிர்
சிதை கொண்ட பள்ளியில் எங்கள் பாகம் பகற்போம்-
விதையான உங்கள் விம்பத்தாடு விலை போகா தலைவன்,
பாதையில் உனதான தாகம் தீர்ப்பாம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாகந்தான் என்ற
ஈடாத வேதம் எட்டும்வரை ஏறெடுப்பாம்.
பீடுடைய பிரமங்கள் பின் தங்கா.

தொடரும்

பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.


பொங்கல் விழாவும், ஈழத்தமிழர் வாழ்வும்.

தமிழர்களாகிய நாம் இந்த விழாவை ஏன் விமர்சையாக கொண்டாடுகின்றோம்?தமிழர்க்கும் இந்த பொங்கல் விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இதன் சிறப்பு யாது?

இந்த உலகில் உயிரினம் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை சூரியனிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்றன.ஆம் இந்த அகிலத்தின் அசைவை நிர்ணயிக்கும் மூலகாரணியே சூரியன் என்றால் அது மிகையாகாது.
சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்தே இந்த பஞ்சபூதங்களின் அசைவு இயங்குகின்றது.
ஆம்! இந்த பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என்பன சூரியனின் சூட்சுமங்களில் இருந்தே இயங்க ஆரம்பித்தன என்பது ஆதாரபூர்வமாக பல அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.இதுவே யதார்த்தமும் ஆகும்.
ஆக சூரிய ஒளியின் கதிர்களால் இந்த பூமி இன்றும் இயங்கிகொள்கின்றது.

அதன் அசைவின் இலங்கல்களில் மழையும்,காற்றும் எம் வாழ்வின் இன்றியமையாத கூறாக உள்ளது.மனித மற்றும் எந்த சீவராசிகளிற்கும் உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாகும் .மண்ணில் தாவர,மற்றும் எந்த உயிர்களின் வளர்ச்சிக்கு உணவு வேண்டும்.

பூமியில் உணவாக மிருகங்கள் மிருகத்தையும்,சில விலங்குகள் தாவரத்தையும்,வேறு சில உயிரினங்கள் இவ் இரண்டையும் உணவாக உட்கொள்கின்றன.அந்த வகையில் மனித இனமான நாங்களும் இந்த இரண்டு வகையான உணவையும் உண்கின்றோம்.

மண்ணில் உள்ள பலவிதமான கழிவுப் பொருட்களும் தாவரத்திற்கும்,மரத்திற்கும் பசளையாக அதாவது உணவாக அமைகின்றது.
இந்த உணவு மண்ணில் உற்பத்தியாக,தாவர மற்றும் யாவற்றிற்கும் சூரிய ஒளி வேண்டும்.
ஆக உலக வாழ் சகல உயிரினத்திற்கும் உணவு உற்பத்திக்கு சூரியனின் மிகப் பெரிய தேவையாக உள்ளது.
எனவே உணவு உற்பத்திக்கு சூரயனின் அளப்பரிய பங்களிப்பை மனதில் கொண்டு சூரியனிற்கு நன்றி செலுத்து முகமாக தமிழன் இந்த நாளை தேர்ந்தெடுத்து ஆதவனிற்கு தன் ஆகக்கூடிய மனித நேயத்தை காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளே தைத் திருநாளாகும்.

இன்னமும் விளக்கிக் கூறின் மழையையும்,சூரியனையும் நம்பி தனதான வயல்களில் நெற் பயிரை விதைத்து அதன் பலாபலனை அதாவது அறுவடை செய்த முதல் நெற்கூற்றை ஒரு பானையில் பொங்கி அதை அமுதாக ஆதவனிற்கு படைத்து தன் சுற்றம் சூழ மகிழ்வாக இருத்தலை தனது பண்பாக, தனதான இனத்துடன் சேர்ந்து ஆதி முதல் இன்றுவரை கொண்டாடி வரும் இத் திருநாளே தைத்திரு நாளாக இன்று நாம் கொண்டாடும் நாளாகும்.இது தமிழரின் கலாச்சாரத்துடன் தொக்கி எமது அடையாளமாக இன்றும் பலருக்கும் ஒரு முன்னுதரரணமாக விளங்குகின்றது.

„உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வரென“ ஒளவைப் பிராட்டியார் சும்மாவா சொல்லி வைத்தார்.
இங்கு புலம் பெயர் நாட்டிலும் சரி எமது தாயகத்திலும் நாம் ஓடியோடி உழைப்பது எல்லாமே இந்த வயிற்றுக்குத்தான்.
„ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாள் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாள்“,என்று வயிற்றுப் பசியை மேலும் ஓளவையார் நொந்து கொள்ளும் இந்த நிலைமை யதார்த்தமே.அதாவது ஒரு நாளுக்கு உணவை நிறுத்து என்றால் வயிறு கேளாது.ஒரேதாக இரண்டு நாளுக்கு ஏற்றவாறு உண்வென்றாலும் வயிறு ஏற்காது,அப்படியான இந்த வயிறால் நாமெப்படி வாழ முடியும்.அதாவது நேரம் தவறாமல் நாளும் மூன்று வேளைக்கும் உண்ணவேண்டும்.ஆக உணவு உயிர் வாழ்வில் முக்கியமான அம்சமாக எல்லோர்க்கும் உண்டு.
இந்த வயிற்றுப் பசிக்காக நாம் பயிரிடும் உணவு பதார்த்தத்தின் வளர்ச்சியை ஒழுங்காக பயன் படுத்த சூரியன் மிக முக்கிய பாத்திரமாகின்றான்.

நாம் இன்று சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாக கொண்டாடும் அதேவேளை எமது தாயகமாம் தமிழீழத்தில் எமது உறவுகளும்,உற்றார்களும்,சொந்த பந்தங்களும் இந்த நாளை மட்டுமல்ல எந்த கேளிக்கைகளையும்,திருவிழாக்களையும் என்றுமே கொண்டாட கூடியதாக ஈழத்தின் புற நிலை பாடுகள் சாதகமாக இல்லை.

இங்கு நாம் என்னதான் உற்சாகமாகவும்,உணர்வுடனும் இந்த நாளை கொண்டாடினாலும் என்று எமது தாயகத்தில் ஒரு விடிவு பிறந்து
எமது சுற்றம், உற்றம் எல்லாம் முற்றம் கூடி இந்த நாளை சுதந்திரமாக பொங்கி இந்த சூரியபகவானிற்கு படையலுடன் விருந்து படைக்கின்றோமோ! அன்றே ஈழத்தமிழரின் உண்மையான தைப்பொங்கல் திரு நாளாக விளங்கும்.உண்மையில் நாம் இங்கே இன்று மனதில் பெரும் பாரத்துடனே இந்த விழாவை சிறப்பிக்க விழைகின்றாம்.

எனதான உறவுகளே!
உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள் மன நிறைவுடனா இந்த விழாவை புலம் பெயர் நாட்டில் இன்று கொண்டாடுகின்றீர்கள்?
ஆயிரம் இருந்தாலும் எமது இளைய சந்ததிக்கு எமது கலையுடன் கூடிய கலாச்சாரத்தையும் ஊட்டுவிக்க வேண்டிய பண்பாட்டு நாகரீகத்தை மனதில் கெளவ்வியபடி நாங்கள் எமது ஆழாத் துயரத்தையும் ஒரு பக்கம் ஒதுக்கி இந்த விழாவை சிறப்பிக்க கூடுகின்றோம் என்றால் அதிலிருந்தே புரிகின்றது இந்த தைப் பொங்கல் விழாவின் சிறப்பு.

இந்த விழாவினூடாக நாம் எமது இளையதலைமுறைக்கு ஊட்டும் பாடம்
1.நன்றி மறத்தல் நன்றன்று
2எத்தகைய துன்ப துயரங்களிலும் எமது கலை கலாச்சாரங்களை சீராக பேணவேண்டும்.
3.நாளைய விடியல் நல்ல பொழுதாக விடிய ஓயாமல் உழைக்க வேண்டும்.
4.எமது இவ் பண்பாட்டை புலம் பெயர் நாட்டில் வாழும் இளைய சந்ததிகள் ஒழுங்காக பேணுதல் மூலம்
தாயக உறவுகளை நாமும் தொடர்ந்து பேணி எமதான உறவுகளிற்கு நாம் உற்ற துணையாக என்றும் இருப்போம் என அவர்களிற்கு நன் நம்பிக்கை ஊட்டி எமதான தாயக தொடர்புகளை இன்னமும் வீச்சாக்க எம் கரங்களை தாயகம் நோக்கி நீட்டவேண்டும்.
5.அதாவது இளைய தலைமுறைகளிடம் எமதான வேரின் உறவுகளை சீராக பேண இதன் மூலம் வழி வகுத்து அவர்களையும் ஈழம் நோக்கிய பார்வையை விரிவுபடுத்த வேண்டும்..இதுதான் உண்மையும்கூட.

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனமும் தனதான பாரம்மரிய கலாச்சார வடிவமாக சில கலைகள் அல்லது கலாச்சாரங்களை,தனதான பண்பாட்டு விழுமியங்களாக இன்னமும் உள்வாங்கியபடி அதை தனதான அடுத்த சந்ததிக்கு விரிவுபடுத்தியபடியே உலக சக்கரத்தில் அதை சீரும் சிறப்புமாக பேணி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழர்களாகிய நாமும் எமக்கான தனித்துவமான பல கலை,கலாச்சாரம் தழுவிய பண்பாட்டு வினைகளை இன்னமும் பேணி வருகின்றோம்.இதில் சிறப்பு என்னவென்றால் எமது தாயகத்தில் சிங்களவரின் அட்டகாசத்தால் இனவழிப்புக்கு அதன் கோர முகத்திற்கு அஞ்சி அல்லது உயிர் வாழ்வதற்காக புலம் பெயர்ந்த எமது இனம் தனதான புலம் பெயர் வாழ்விலும்,எந்த இக்கட்டான சூழலிலும் எமக்கே உரித்தான சகல பண்பாட்டு விழுமியங்களையும் தொடர்ந்து பேணி அதை இளைய சமுதாயத்தின் மூலம் இன்னமும் வலுவாக ஊட்டி,
அதை அடுத்த தலைமுறைகளிடம் நேர்த்தியாக ஒப்படைத்து மகனே எங்குதான் நீவிர் வாழந்தாலும் உனது வேர், உனது மண்,உனதான சகல சமூகங்களும் ஈழப் பரப்பில்தான் என்பதை இப்படியான விழாக்கள் மூலம் எமதான மூலத்தை வேணி காக்க இந்த விழாக்களும் பல வகையில் உதவுகின்றன.

„திரைகடலோடியும் திரவியம் தேடு“ என்பதையும் தமிழரினம் இன்னமும் கடைப்பிடித்தபடியே வாழ்கின்றனர்.இந்த நிலை கேடுகெட்ட சிங்கள ஆரியனால் எமது சமூகத்திற்கு அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ எமது இனத்திற்கு நிகழ்ந்த அவலம் என்றும் கூறலாம்.எது எப்படியோ? உலக சக்கரத்தில் கச்சதீவைத்தவிர சகல எல்லைகளிலும் தமிழன் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், அவ்வவ் நாடுகளிலெல்லாம் தமது பாரம்பாரியத்தை தர்மமாக கடைப் பிடித்து அதன் படியே ஒழுகி தனதான கலாச்சாரத்தை இன்னமும் வீச்சாக கடைப்பிடித்து தான் தமிழன் எனும் இன வேட்கையை முறையாக ஒழுகுவதால் இன்னமும் அந் நாடுகளில் சிறப்பு பெறுகின்றான்.

எவனொருவன் தன் இனத்தையும்,அதன் மொழியையும் சிறப்பாக கைப்பற்றமறுக்கின்றானோ! அவன் தானாவே தனதான இனத்தில் இருந்து விலகும், அதேவளை உலக மக்களிடம் இருந்தும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டு அனாதையாக அவல வாழ்வையே அவனும்,அவனுடனான அடுத்த சந்ததியும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் கிட்டும்.இது நியதி, இந்த நிலை தமிழனிற்கு மட்டுமல்ல ,எந்த இனத்தையோ,எந்த மதத்தையோ,எந்த நாட்டையோ சார்ந்த யாராகினும் அவர்க்கு இது எழுதப்படாத ஆனால் கிடைக்கும் கீழ் நிலை தேர்வு இவ் அவல வாழ்வாகும்.இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

இந்த வகையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களாகிய நாம் இங்கு பிறந்திருந்தாலும், எமது சிறார்களை பெற்றோர்களும், ஆசான்களும் அவர்களை நல் வழிப்படுத்தி எமதான பாதையை ஒழுங்காக நெறிப்படுத்தி இப்படியான எமது பண்பாட்டு விழுமியங்களை அவர்களிற்கு போதித்து வெறும் பார்வையாளனாக இல்லாமல் பங்காளனாக தமிழீழச் சமூகத்துடன் ஒற்றி அவர்கட்கு எமது மொழியின் சிறப்பையும்,அதன் கலையின் தாக்கத்தையும் சீராக புலப்படும் வகையில் எடுத்தியம்பி, நாம் தொடர்ந்தும் எமது கட்டுமானமான பண்பாட்டை சீராக கடைப்பிடிக்க, இந்த பொங்கல் பெரு விழாவும் உதவிகரமாக விளங்கும் என்றால் அது மிகையாகாது.

ஆகவே எனதான உறவுகளே நாங்கள் எங்கு,எப்படி வாழ்ந்தாலும் எங்களின் இந்த அடி நாதமான பண்பாட்டு, கலாச்சாரங்களை மிகவும் நேர்மையுடனும், கண்ணியத்துடனம் கடைப்பிடித்து நாம் நல் வழிகாட்டலுடன் உலக ஒழுங்குடன் ஏகுவோம்.

மேலும் இந்த ஆண்டு முதல் தைத் திருநாளே தமிழர் தம் வருடப் பிறப்பாக தமிழக அரசு நடைமுறைப்படுத்துகின்றது.ஆக இந்த வருடம் முதல் சித்திரையில் கொண்டாடப்படும் புது வருடப் பிறப்பு இனி இல்லை என ஆகின்றது.இந்த புது வருடப் பிறப்பின்பால் தமிழீழத் தமிழர் தம் வாழ்வில் புது பூம் புனலை சுரப்பிக்கும் என நம்பிக்கையுடன் இவ் விழாவை இனிதாக வாழ்த்தி சிறப்பிப்போம்.

நம்பிக்கைதான் வாழ்வின் ஆதார்சம்,ஆயினும் நாம் அந்த நம்பிக்கையை அத்திவாரமாக அகக்கொண்டு எமதான தாயக தேசியக் கடமையையும் இன்னமும் வீச்சாக முன்னெடுப்போம் .இன்று போல்தான் நாளையும் விடியும், அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை.இருந்தாலும் நாம் இவ் வையகத்தில் பிறந்த நாள்போலதை மகள் பிறக்கும் ஆண்டாக பெரு நாளாக,எமதான ஐ தீகத்துடன் முன்னெடுப்போம்.

வியாழன், 7 ஜனவரி, 2010

உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.



திருவாளர் வீரசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களினுடைய நினைவுசுமந்து.

ஆற்றல் மிகு பெருந் தலைவனை-இந்த
அவனிக்கு அளித்தவரே-உமைப் போற்றி
உறுப்பெழுதும் மறத் தமிழினத்தின்
மாற்றுதலை காணாமல் மறைவெழுதிப்
போனீரோ?
தேற்ற இங்கு யாரும் இல்லை-உம்
துணையை தோற்ற அருகில் யாருமில்லை.
வேற்று கிரக மனிதர்களாய் நாம்-
வேலி இழந்து பரிதவிக்கின்றோம்.

இங்கிதங்கள் சிறிதுமற்ற இராணுவத்தின்
இரும்பு கரங்களில் உம் இறுதி யாத்திரையா?
ஐயகோ!
என அரற்றும் எங்கள் ஆயிலியத்தை
எங்கெறிந்து ஆசுவாசிப்போம்?எம்மவரே
உங்கிருந்த உந்தனது உணர்வுதனை யார் மதித்தார்?
பங்கமது நாளும்,பொழுதுமாய் உன் அங்கமதை
அயோக்கிய கிங்கிதரர்கள் எங்ஙனம் ஆராதித்தார்?
எவர் அறிவார்?

சாதுவான உங்களது சகவாசம் எவர் சுரப்பார்?
ஏதுவான சமர்க் களம் ஏதிலியாய் போனதனால்,
யாது மற்று யாம் யதார்த்தம் யாவும் இழந்தோம்-இன்று
பேத மாற்றும் பேய்க் குழிக்குள்,
பெருமிழவாய் தவிக்கின்றோம்.

ஊத பகை சாயும் இந்த ஊற்று இனி சுரக்கும்.
வேதம் எழுதிய எங்கள் வேதினியர் எழுவர்-இந்த
பாதம் வரை பாதகரை படு குழிக்குள் பரவ
பாதை அவர் வகுப்பர்.பகலவன் பாதை விரியும்-அந்த
பகுப்புக்கள் பாரில் தெரியும்-பார்த்தனின்
மெளன மொழி விழிக்க!

யாவும் இங்கு யதார்த்தயாய் பதிவெழுதும்-இது
சாவும் பொழுதாக உதிர்ந்தன உயர்வெழுதும்.
பூவும் புதுமலராய் பூம்புனல் பூக்கும்-புவி
நீவ காவியம் களிப்பெழுதும்-இவை
யாவும் இயங்கும் இனிதான மலர்வாய் இகம்
இதை வரையும்.

ஐயனே!
உந்தனது அந்தி பொழுதில் என்ன பாடல் இசைத்தீரோ?
"மா" வீரனை பெற்றதால் மகிமையாய் அதை இழைத்தீரோ?
இல்லை ஊழ்வினையென உந்தன் உதிரம் உயிர்க்க,
தொல்லை அகன்று தோகை விரித்தீரோ?வல்லை
மண்ணில் வகுத்த வாரியன் வகை வகுப்பானென!
புண்ணியமெழுதிப் போனவரே-உந்தன்
புன்னைகையின் பொற் பாதம் உந்தன் வீர
புதல்வனால் உயர்வு சொரிய உதயமாகும்.

நிறைவாக நிவிர் துயில- பிறையாக
நுதல்கள் நிமிர -
உறவான உறவுகள் உயிர்க்கும்-உங்கள்
உளக் கனவு உயர்வு சொரியும்.
துறவான தூயவர் துலங்க உறங்கும்-
உங்கள் உயர்வான கரங்களால்
உளமாய் ஆசித்து உயிர்ப்பாய் உறங்கும்.

புதன், 6 ஜனவரி, 2010

பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.


உள்ளத்தில் ஒன்று வைத்து புறமொன்று பேசும்
கள்ள மனதின் கருமாந்தர்களே!
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
கழிவுகளாக உந்தன் காலமது கழிந்து விடும்.
பள்ளத்திலே உந்தன் பாதடிச் சுவடுகள்.

உள்ளும்,புறமும் உரசாமல்
துள்ளும் நெஞ்சமது வேண்டும்,அஞ்சாமல்
மனமது விரித்து ஆளுகின்ற ஆற்றலதுவும் வேண்டும்.
தோற்றமதில்,மாற்றம் மகிமை சுரக்க வேண்டும்.
ஊற்றெடுக்கும் உறவதனில் ஊசாத உறுப்பு உறையவும்,
தேற்றமது தெள்ளறிவாய் தேறவும்,சாரவும்
சரம் சேரவேண்டும்.

மெள்ளவும் முடியாமல்,கொள்ளவும் முடியாமல்
கோர்த்து நிற்கும் கோரம் குலைய வேண்டும்.
மெளனமாக வஞ்சிக்கும் வரைபுகளும்,
உதவும் தருணத்தில் விலகும் வியாக்கியானங்கள்
விலகவும் வேண்டும்.உலவும் உள்ளங்களில்
களிப்பெழுதும் கலை வேண்டும்.ஆக
கற்றதனால் ஆன பலனென்கொல் என்பதை
ஆசுவாசமாக பற்றவும் வேண்டும்.

பயன் பிறர் அடைய பற்றுதலும்,
மயன் கொள்ளா மாற்றுதலும்,
துயரெறிய தூக்கிவிடும் துடிப்பும்,மற்ற
மானிட மார்க்கமும் மனப்புற மடிப்பும் வேண்டும்.
ஊனிடும் உறவும்,கூனிட நிமிர்வும்,தானிட
தர்மமும் தரணியில் தரமாய் வேண்டும்.
இடு என்று இல்லா இறையிடம் இறைஞ்சல்
இதய பூர்வமாய் தவிர்க்கும் தர்மமும் வேண்டும்.

உனதான இதயக் கதவுகளை இது சாரும்-
தனதான இருப்புக்களும் இனம் சார் உறவுகளிற்காய்,
விரிக்கும் விசாலமது வியாபிக்க,
தரிக்கும் சாந்தம் சார சகமான உற்றத்திற்காய்,
உதவும் உயர்வும்,
உனதானதாக உளம் சிறக்க வேண்டும்.

மற்றெல்லாம் இந்த மகிமை மையிக்க,
தான் தோன்றும் சாலச் சிறக்க,என் வீட்டு-
முற்றத்தில் தினம் சுரக்கும் போதெல்லாம் இவை
மற்ற வீட்டு மனைகள் திறக்க மனம் கெளவ்வும்.
மானிடம் உயிர்க்கும்,மாதவம் மனந்திறக்கும்.

தூவ,மனிதம் தூவ ஏது இங்கே பாவ,புண்ணியம்?
பாவ, இவை பாவ பரவும் இங்கே செளபாக்கியம்,
இருப்பதை இல்லார்க்கு இணங்கி இலக்க,
செருக்கது அகலும்,செல்வாக்கு செழிக்கும்-
உருக்கது இழகும் இயக்கம் இங்கே இமயமாகும்.
ஒற்றுமை ஒற்ற வேற்றுமை விலக,
பற்றுமை இங்கே பரவ உற்றதெல்லாம் உரிமை ஊடும்.
பற்றுவோமா?

இல்லை
பரிதவிக்க எங்கள் உறவெல்லாம்
பரிதவிக்க விற்போமா?
விலை போவோமா?
எங்கள் பவ்வியங்களை எல்லாம் பரமன் பா(மா)ண்பென??-

ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்,
உத்தமர்களே உலக வலத்தில் வாசகமாக,
கள்ளமொன்றும் அறியாதாராய் கதைகள் பல,
அளந்திடும் பக்தர்களாய் பல அரிதாரம்.

யாரும் இங்கு உத்தமர்களல்ல!
முகத்திற்கஞ்சி வேசையாடும்,
முகத்திரை மூடும் முகையர்களே!
அகத்திரையை என்றேனும் ஆழத்
திறந்திருந்து அமைதியாய் சிந்தித்ததுண்டா?

ஒவ்வொரு அசைவிலும் ஓர வஞ்சனை,
கவ்வும் உங்கள் கனதியை எண்ண!
சுய பரிசோதனையை என்றாவது சுகித்ததுண்டா?
அப்போதாவது ஆத்மாவை திறந்ததுண்டா?

இப்போதாவது இதயத்தை திறவுங்கள்-அங்கு
சித்தம் கலைக்கும் பித்தம் பிதிர்க்கும்,
சொப்பனங்கள் விலக விழியுங்கள்.அஃதின்றி
ஒவ்வொன்றிற்கும் ஓராயிரம் காரணம்
கற்பித்தலை, அந்த கயமையை சித்தம் விலத்தி
வீசி விசுறுங்கள்.

ஒவ்வொரு தாக்கத்திலும் மறு தாக்கம் உண்டு.இதை
மானசீகமாய் மையித்தே இருஙகள்.
உள்ளத்தை திறந்து உண்மையை கூறு
அவ்வியம் அகன்ற அவலத்தை நினைத்து.
ஊடுருவும் ஒவ்வொரு இழப்பை இழைத்து.

தன்னைப் போல மற்றவனை மதிக்க,
உன்னால் ஆகும் உளமதை திறக்க.
சொன்னால் புரியும் சொந்தங்களை எண்ண
சினங்களை உறக்க,சுயநலன்கள் விலக்க
மனங்களை என்றும் மதியூகமாய் மனைக்க.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,

வல்ல பகை சாய்த்தான்-வாகை
பல வகுத்தான்-வெல்ல இனி
வகையற்ற பகை-
ஆயுத மெளனித்தலை,
தேசத்தின் சேதம் அகற்ற பேசித் தீர்க்க,
பேராண்மையுடன் பேரமகற்றி பெரும்-
போர் நிறுத்தம் யாசித்தது.

ஆயுத மெளனித்தலை ஆழமாக ஆக்க,
அனுசரணை வேண்டினான் ஆதவன்.
ஆதங்கமது மையிக்க ஆரோக்கியம் ஆரோகணிக்க!
அவனியில் சில நாடுகள் நாடின.
ஆயின்!

சில அசைவுகள் அயல் நாடுகளில்,
அவை அமைத்த ஆசுவாசமான ஆயத்தத்துடன்-

ஆயினுமென்ன?
அனுசரித்த எந்த அவயங்களையும் ஆக்கவில்லை.
நேர்மைத் திறனகற்றி நேத்திரங்கள்.
எந்த அசைவை ஆக்கும்?
நேரங்களை,காலங்களை-
கருக்கி ஆரியர் ஆயுதகொள்வனவிலும் ஆட்பலத்தையும்
பயிற்சியையும்,
நவீன படைக் கலங்களின் கட்டுமானத்திலுமே
ஆசிய நாட்டில் மட்டமன்றி,
ஐராப்பிய அங்கத்திலும்,அமெரிக்க மட்டத்திலும்,
அகமாக அதீதமாக ஆரோகணித்தன.

சுமூகமான,
நேர்மையான வழியில்-
சிறீலங்கா பயணிக்க மறுப்பதை தலைவன்-
தரணிக்கு சாற்றியதை எந்த சாதகனும்,
சிரக் கொள்ளவே இல்லை.

இங்குதான் எங்கள் இயக்கத்தில் கிழக்கின்,
பெருந்தளபதியாக கருணா என்ற கயவன்
எட்டப்பனாக மாற்று வேடம் ஏற்க
கிழக்கில் என்னதான் நடக்குது என்று இயக்கத்திலே
தடுமாற்றம்.
பிரதேசவாதம் பேசினான் ஊருக்குள் பிரச்சனையை
எந்த பிம்பமும் இன்றி மக்களிடம்
வடக்கத்தான்,கிழக்கத்தான் என ஏதேதோ
பிள்ளையான் என்ற பிரகிருதியுடன்
தமிழர் பிணம் மீதேறி!

என்னதான் தலைவன் ஆக்கமான முடிவெடுத்தாலும்,
பிளவும்,முறிவும் எங்கள் தளத்தில்
பெரிதாக உடைப்பெடுத்தது
என்னவோ உண்மைதான்,
என்றாலும்
அதுவும் ஒரு பாரிய இழப்பே.

யாரென்ன கூறினாலும்!
இந்த இரண்டகனால் எங்கள் களத்திலும்,புலத்திலும்,
ஈடற்ற பின்னடைவே எவர் எதை சாற்றினாலும்.

ஆட்சி மாற்றம் ஆதங்கம் அகற்ற,
மாட்சி மிகுந்த எங்கள் மக்கள் படை,
சுதாகரிப்பை ஏற்கனவே எதிர்பார்த்ததினாலும்,
ஏற்கனவே ஒப்பந்தத்தின் பிரகாரம்-
தற்காப்பு சமரை மையப்படுத்தி களங்களில்-
இயன்றவரை மட்டுப்படுத்திய தாக்குதலை மேற்கொள்ள---

கிழக்கில் பெரும் ஆரவாரமாக, அட்டகாசமாக
மிகப் பெரும் படை நகர்வை மிலேச்சத்தனமாக
மனித நாகரீகமகற்றி
மகிந்தா தொடர ------(தொடரும்)

சனி, 2 ஜனவரி, 2010

கடவுள் செய்த பாவம்.

அப்பனே! முருகா!-அனந்தனே!
சித்தனே! கச்சி ஏகாம்பனே! முத்தனே!
எத்திக்கும் எழுந்த எம் பெருமானே!
சித்திக்கும் வரம் தந்து, சிரஞ்சீவி
வாழ்வு தந்து, நாளும்,பொழதும்
எமை நயமாக காப்பாற்று என்று நா
நயந்து தொழுத வேளை விலக --

ஆலய நடைதனை, ஆழத் தாளிட்டு,
அக்கம் பக்கம் அனைத்தையும் நோட்டமிட்டு
நிம்மதியாய் போகின்றார்
ஆண்டவனை காப்பாற்றி.
ஆயாசப் பெருமூச்சில்
அத்தனை ஆதங்கம் அவனிற்கு அணிந்த
அத்தனை பொன்னகையையும்
எப்படி போற்றுவதென்று?

மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ!


உனக்குள் இருக்கும் ஒருவனை தேடு -உன்
மனைசை திறந்து உண்மையை நாடு -பொய்
உரைப்பதை மறந்து நியாயத்தை பாடு -திரை
கதவினை அகற்றி திறனை எடைபோடு.

எத்தனை நாள் இன்னும் பொய்யிற்குள் வாழ்வாய்-நீதி
மறைத்தினி எவ் மன்றத்தை ஆள்வாய்?உன்
உதட்டினில் உதிரும் உறக்கத்தை மாற்றி மெய்
மெருகேற்றி உயிர் மொய்ப்பட வாழ்வாய்.

சித்தனைத்தும் நீ சிரமப்பட வேண்டாம்-
உய்த்தனைத்தே உளம் சிறப்புற வாழ,
மெத்தனம் ஏய்க்கும் மேனியை கொன்று நீ-
மேதினியில் சிறப்புடன் வாழ உற்ற உறவதை,
ஏந்தி உலகை கற்றிட நீ கைத்தலம் பற்று.

அப்பனே,சண்முக என்று தினம் வேடங்கள் பூண்டு- சிலர்
அருகமர்ந்து எனை காத்திடு என்று சித்தம் பதற மேனியை-
உருக்கி பின்,
என்னை நன்றாய் காத்திடு என்று கல்லதை,
கலக்கலாய் கனகச்சித வேடம் பூத்து,
நெஞ்சது என்றும் சுயநலம் வகுக்க சூத்திரமாக,
தேவாரத்தை வார்ந்து, நயந்து
பக்தி எனும் பாதையை பகுத்து அதில் சித்தமெல்லாம்-என்
சிவனே என்று எத்தனை காலம் நீ ஏனத்தை ஏய்ப்பாய்.

பசிக்கு உணவு,நோய்க்கு மருந்துபோல்
கவலைக்கு காரணம் கண்டிட வேண்டும்.
கலக்கமது உன் கைகளில் கலந்தால் கல்லான சிலைகள்
கலக்கத்தை கலைக்காது.இது மெய்யென-
அறிந்து, மேனியை வருத்தி, ஊனது உருக்கி,
உண்மையை உணரு.

நாடு அதை நாடு,
நாட வேண்டியதை என்றும் நாடு.
தேடலது உன் தேவையை நிவிர்த்திக்க,
தேகமது இவ் தேசத்தில் ஊரும் வரை-உன்
தேடல்கள் உலகில் தேயாமல் தேடவேண்டும்.

சும்மா இருக்க சோறு வராது- நீ
அம்மா என்றாலும் அமுதம் வராது.
இம் மாநிலத்தில் போராட்டமே வாழ்வு அது
எம் மாநிலமாயிருந்தாலும் இதுவே வாழ்வு.

குடியிருக்க, குந்த குறு மண் வேண்டும்-அது
மடியிருந்தால் அதன் மகிமையே யாண்டும்.
படிதாண்டி நீ பாரதில் இருக்கும் பாரத்தை
குறைக்க உன்தாய் மடியான தாயகம் தேடு.

வித்தாக வீழ்ந்த சொத்தான எங்கள்
சோதியரின் சொப்பனம் மறவாதே-எங்கு நீ
வாழ்ந்தாலும்,வீழ்ந்தாலும் அந்த
கல்லறை மேனியரின் காத்திரம் மறையாதே.

சில்லறைத் தனமாய் சிதைந்து போகாமல்,
மெல்லென அவர் யாகங்கள் போற்றி,
வில்லாளனாய் நீ விரிய வேண்டும்-எங்கள்
எல்லாளனின் எண்ண கதவினை யாக்க.

வியாழன், 31 டிசம்பர், 2009

ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.


உலக ஒழுங்கை உற்றுக் கவனி.நீ
உலவ இதை உவப்பாய் அவதானி.
நிலவும் நீட்சியை நிர்மலாய் நிதானி.இல்லையேல்
பலவும் உன்னை பாழாய் படுத்தும்.சிலதென்று
எதையும் சினந்து புறம் தள்ளாதே.

எதனதன் ஆரம்பமும் என் வீட்டு-
முற்றத்தில்தான் முகிழ்க்கும்-எனதான
சிரத்தைகளை நாமொதுக்க.
அதனால்தான் ஆயிலியத்தை அகமாக பேண-
ஆவன நாமாற்ற அகமேந்த அரணமைப்போம்.
இல்லையெனில்!
தாமதமான தரமாக தானே சரணாகதி.
எல்லாமே எப்போதும்.எங்கேயும் என்றும்.

சாட்டுக்கள் சாட்டி சரமமைப்பதை,
சகமாக கூட சாலை வகுக்காதே.
இகமான வாழ்வில் இதமான அணுகு முறை,
ஒன்றது வேண்டும் இல்லாதெனில்,
ஒவ்வொரு விநாடியும் ஓயாத மன உ(ழை)ளைச்சல்
மதியூகம் கொண்டு மானசீகமாய் யோசி.
மற்றதெல்லாம் மாண்பாக மார்க்கம் அமைக்கும்.

ஒட்டுக் குழவாய் வாழாதிருக்க,
ஒற்றுமையை ஓர்மமாய் வளர்.
விட்டுக் கொடுப்பதை விவேகமாய் விதை.
தட்டிக் கேட்கும் தைரியம் பேண்,எதையும்
தார்மீகம் பேணி தரணியில் உழை.

வாசிக்கும் பழக்கத்தை வாழும் வரை பேண்.
வரலாற்றை அறிவதில் வாஞ்சையாய் வகைபாகம்.
தரமான தாக்கத்தை தண்மையாய் தெரிந்தெடு.
நேசிக்கும் நேர்மையை நேயமாய் நேசி.
சிந்தித்து செயலாற்றும் சீலத்தை கடைக்கொள்.
நிந்தித்து,வஞ்சினமாற்ற கிஞசித்தும் நினையாதே.

ஆம்!
இதெல்லாம் ஓர் காலத்தில் ஒளி கூட்டிய கோலங்கள்.
ஆயின்!
இன்று!
சுயநலமே தோழமையாற்றும்
கயவர்களால் எந்த
ஆயுதத்தை கலயமேந்தி கருவேற்ற?

சனி, 26 டிசம்பர், 2009

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.


அகிலத்தை அசைத்த அசைவது அதன்
ஆள(ழ)ப் பெயரே சுனாமி-உலகில் எத்தனை,
அக்கிரமங்களை ஆட்சியாளர்கள் ஆக்க,
அற்ப நிமிடத்தில் அதை மீறிய அனர்த்தனம்!
ஆக்கிய ஆழியின் ஆர்ப்பு நர்த்தனமே!உன்
அசைவின் புனர் பெயர்தான் பூமியில் சுனாமியாக
சுகந்தங்களை சுருட்டியதோ?

வறட்சியின் வையகத்தை மடக்கும் மாண்பூ _நீ
திரட்சியாய் திடகாத்திரமாய் திறன் ஊட்டி-இத்
தீவினை மட்டுமல்ல திறந்து,விரிந்து பரந்திருக்கும்
அவனியை ஆட்சி செய்யும் ஆர்ப்பு நீ-
அன்று!(26.12.2004)
பவனி வந்த பாரை பாறையாக்கிய போர்ப் பரணியை!
இன்று வரை யாரும் இறுமாந்து அழிவாற்றவில்லை.
ஊழிப் பெரும் ஊற்றே ஆழிப் பேரலைக்கு ஏன் இந்த
கோரப் பசி?

எத்தனை மக்களை எவ்வளவு இலாவகமாக--
இவ் வையகததில் வளமாக வாழ வைத்த வனப்பு நீ!
உன்னால்-
அன்றும்,இன்றும் ஆரோக்கிய வாழ்வதனை,
செளபாக்கியமாக்கிய செளதாமினியே!
செளந்தரியே!
ஆழ,அகல நீ ஆர்ப்பரித்து அலைகளாக அசைவெடுத்து,
மீள,மீள மிதமாக மீட்டிய உன் ஆதங்க கரம் தழுவ,
சோளகக் காற்றின் தோகை வரிப்பில் எங்கள் தேசம்
தழுவிய கடலம்மையே-ஏன்?
அன்று இந்த கோர ஊழி தாண்டவமாடினாய்?

உன்னால் உவப்பெய்த அத்தனை ஆத்மர்களையும்,
உனையே நாளும்,பொழுதும் உரசி,ஊடி நின்ற உவப்பான
உனதருமை உத்தம மைந்தர்களையும்,
ஏனிந்த தாளாச்சினமேந்தி
எக் காளமாய் கொன்றேகினாய்?
வயது,பால்,மறைத்து
புலர்ந்தது,
மலர்ந்தது,
வளர்ந்தது,
வாழ மடி தேடும் வஞ்சியர்,
நேற்றுத்தான் நேச மடி குடி புகுந்த-
கோவையர்கள்,கோமகர்கள்,
வாழுதலின் வசப்பெழுதி வையத்தில் தன்-
வாரிசுகளை வனப்பெழுத வசந்தமாய் வார்த்தெடுக்க,
வளம் தேடும் வாசலில்!நீ
வகித்த வதை பாகம்!

தனதான சந்ததியின் மழலை குரலேந்த,
இன்றைய விடியலில் இரத்தல் தவிர்த்து
இதமான வாழ்வெழுத,
நாளைய பொழுததினில் மங்கல நாணேந்த,
நாணம் நயித்த நங்கையரின்
ஞாயத்தை,
இராப்பொழுது இதமாக விடிந்ததால்!
இரவெல்லாம் இமை விழித்து இணையாளனை!
எதிர்பார்த்த மனைவியின் ஏக்கங்களை,
அவர் தம்-
மழலைகளின்,மையல்களை-எந்த
கூர்ப்பெழுதி குலைத்தழித்தாய்?

அடித்து நீ ரணப்படுத்தியிருந்தால்!
இதன் இலங்கலை இதப்படுத்தியிருப்போம்-ஆனால்
அத்தனையையும் அலங்கோலமாய்,குதறி,கிழித்து
வதைத்து,உன்னோடு கொண்டு,கொன்று
ஏக்கப் பரப்பில் நீ ஏகாந்தமாய் பறித்த
இந்த பரப்பளவை எந்த பரப்பில் நாம் நிமிர்ப்பெழுப்ப முடியும்?

ஆக்கிரமிப்பாளனின் பாளத்தில் நாம் அனுதினமும்,
ஆர்தெடுக்க ஆயிலியம் சுரப்போமா?
இந்த
வேதனையின் வேகமையில்,அதன் சுமைகளின் சுமையை
நின்று நிதானித்து, ஆசுவாசப்படுத்த, ஆர்த்த இந்த
இமைப்பொழுதிலா-நீ
இந்த இணையற்ற வேகம் தரித்தாய்,
எம் ஏற்றமெல்லாம் இழுத்தழித்து இழவெழுதினாய்?

ஏய்,
ஆழிப் பேரலையே!
ஆயுள் முழுவதும் நாம் ஒப்பாரி எழுதி-எங்கள்
ஒய்யாரம் அழிக்கவா?உன் ஓங்கார சங்கூதல்?
ஆரியனின் அதமத்தில்,அந்த ஆக்கிரமிப்பில்,
வெங்களத்தில் எங்கள் வேதம் தரித்தோம்.ஆனால்?

உந்தன் உற்சவத்தில் நாம் சவமாகவே சகம் தரித்தோம்.
நிந்தன் பொற்பாதத்தில் எங்கள் வாழ்வேந்த
தந்தனை உந்தன் ஈகபாகத்தை,
ஈய்ந்தனை இறைந்தனை,
சந்தன மேனியரின் சாகச களமே,விந்தனைத்தும்
சிதைத்தோம்-ஆயினும்
விடியலையும் இழந்தோம் அல்லோம்.

ஒவ்வொரு இழப்பிலும்,
இன்னொரு உயிர்ப்பிருக்கும்,
உணவுச் சங்கிலிபோல் உணர்விருக்கும்.
உயிர்த்தெழும் உரமிருக்கும்,உறங்காத
உணர்ச்சியிலே உற்சவமெழுதும்,
உயிர் இருக்கும்.
உந்துதலிலே உறுப்பெழுத உரமாக இன்னமும்
இந்த ஏகாந்த வெளியில்!

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.

வியாழன், 24 டிசம்பர், 2009

மானப் பரப்பில் மக்கள் திலகம் மையித்த மங்கலம்.


சிரஞ்சிவியான எம் சஞ்சீவியே
ரம்யமான ரகசியனே!-எமதான இதயக் கனியே!
ஈழ விடுதலைக்காய் இதயம் சுரந்தவனே;
எழுக விடுதலையென ஏற்றமாய் இழைத்தவனே'
தோழமையாய் எம் தலைவன் தோளேந்திய முதல்வனே-உன்
தோளேந்தும் ஈழத் தமிழினம் தரணியில் என்றும்--

ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல்-
உதவும் கரம் படைத்த உதயனே-நீங்கள்
உண்மையான உழவனை உளமார உணர்ந்து
ஒப்புவமைக்கு அப்பாற்பட்ட தொலை நோக்கின்-
ஈழவிடுதலையின் அவசியத்தை ஐயமின்றி நேசித்த
ஆழத்தை எந்த அரசியல்வாதி தமிழகத்தில் சிந்தித்தான்,
மெளனமாக மலைதாண்டிய உதவி.

தலைவனின் ஆழமான எதிர்பார்ப்பை எந்த இடையூறுமின்றி,
தானேந்தி தாளேந்திய தார்மீகத்தை என்னென்போம்?
திரையில் மட்டமல்ல நீவிர் புரட்சி படைத்தீர்,புடை
சூழும் எம் ,ஈழ தமிழர் இனத்திற்கே பசுமை படைத்தீர்.தமிழ்
விழாதிருக்க எம் விழுதேந்திய வீரனே நாம்
வழுவாதிருக்க வகை சூட்டிய வல்லோனே-ஈழ தமிழ்
இனம் இருக்கும் வரை வரையில்லா உம் வரைபிருக்கும்.

நன்றி மறவாத நல்லுள்ளம் ஈழத் தமிழருக்கு என்றும்,
குன்றிடாமல் உமதான நினைவெழுதும் குவலயம்.
கன்றிடாமல் காலமெல்லாம் கனதியெய்தும்.
வென்றிடும் நீ அரசாட்சியில் இன்றிருந்தால்-இந்த
ஈனம் அகற்றி ஈழம் இழைந்திருக்கும்-விதி
வழி உம் பயணம் ஒத்தி ஒப்பேறியிருந்தால்?

வஞ்சினம் கொலுவமைத்த வஞ்சி ஒன்றும்,
மிஞ்சி இந்தியில் இழவமைத்த இலங்கல் இணைப்பகற்றி,
இங்கிதம் அகற்றிய ஈனர்களால் நாம் இசைவகற்றி,
இழவேந்தி,
இராப்பகலாய் பழுதேந்தி பாரம் சுமந்து--?

அன்று போல் உன் அகலங்கள் எங்களின் ஆழப்
பரப்பேந்த யாருமில்லை ஐயா!இன்று
ஐயகோ என
நாமழ எமை தேற்ற,தோற்ற எந்த தோழமையும்-எம்
மனப் பரப்பில்கூட கூடவில்லையே,

வானவர் தேசம் வையத்தில் உண்டென்றால்-நீவிர்
எம்மவர் தேசம் கண்டு நெஞ்சம் பதறி,
சங்கறுக்க தமிழக சதிகாரரை சாய்த்திருப்பீர்-
வெங்களத்தின் வேதனையை,அதன் வெப்பியாரத்தை
வெம்பியே அறுத்திருப்பீர்.ஆனாலும் என்ன
துவண்ட ஈழத் தமிழினம் துயரறுக்கும்,
தூக்கணங் குருவிக்கும் தூங்க ஓர் தொட்டில் போல்
எக் கணமும் நாம் எமக்கமைக்க ஏற்றமாய் உழைத்திருப்போம்.

விழ,விழ வீரியம் சுரக்கும் விழுதுகள் எழும்.
தொழ,தொழ ஓர்மம் ஒழியும்,தொட்ட காரியம்
தொய்ய தோட்டம் அமைக்கோம்,
அமைப்போம்!
தரணியில் தமிழரின் தாயகம் எத் தடை வந்த போதும்-
எந்த வேளை வரினும் உம் நினைவெழுதி-
ஏந்தும் துயரறுத்து தூயவன்,எம் வேலுப்பிள்ளை
பிரம்மத்தின்,பிராயத்தை மீண்டும் மு(மி)டுக்கி.

நெக்குருகும் உன் நினைவுகளில் எம் துக்கம் உருகும்.
பக்கமிருந்தாய் பலம் தந்தாய்,பாங்குடனே பாரம் சுமந்தாய்.
துக்கம் தாக்காது துணையிருந்தாய் தூயோனே!
அகப் பரப்பில்,
ஆழ வேரோடி,
இங்கிதமாய் இலங்கியவனே,காலப்
பரப்பெழுதும் காத(ல) தூரம் கண்ணியமாய் எம் கருவேந்தும்.
விண்ணிலிருந்தும் நீ விசாலமாய் புறுவல் பூப்பாய்.
புலரும் பொழுது பூபாளமிசைக்க.
தமிழரின் தாகம் தமிழீழமாய் தர(க)மேந்த.

புதன், 23 டிசம்பர், 2009

திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே!


திரும்பும் இடமெல்லாம் எங்கள் திவ்வியனே-உன்
திரு முகம் காண திசைகள் திரும்புமே.உன்
ஒரு விழி கூறும் ஓர்மம் பகைவர் பெரு விழி மிரளும்-உன்
இரு விழி இயம்பும் இலங்கல் புரிய இலங்கை அதிருமே.
குரு விழியாக குவியம் குவிக்க குல மகனே குதிராயா?

இரும்பு இதயம் கொண்டாய் இருளர் இலங்கல் இரைந்தது-நீ
கரும்பு உள்ளம் கரைசலாய் கவித்ததில் களமே நிறைந்தது.-உன்
கரிசனங்கள் கலந்தபோது ஈழக் கலயம் கனிந்தது-உந்தன்
உரிமைச் சங்கு ஊதியபோதே உலகம் உணர்ந்தது.நிந்தன்
பரிவு பார்வை பகிர்ந்தபோதே பவனி புரிந்தது.

இரண்டகம் புரிந்த ஈனர்களை இனம் காண நீ படைத்த,
இமாணயர்கள் எத்துணை இடுக்கண் வரினும்,
எத்தனை ஈனர் கண்டாய் களத்தில் உன் கனதி தெரிந்தது.
இழைந்து,
சித்தம் கலந்து சிதைக்க சினந்தாய் சிலர் திமிரே சி(தி)ரைந்தது.
அத்துணை ஆற்றல் அலையாய் உன்னில் அமரர் அணைத்தனர்-அவர்
ஆவி,உடல் பொருளெல்லாம் உன்னால் உதித்தது-மாவீரக்
கனல்களெல்லாம் மாதவம் செய்ய உனையே சூழ்ந்தது.

இராச தந்திரம், அரசியல் ஆவணம், ஈழக் கட்டுமானம்,
இராசாதி ராசன் சோழப்பெரு வேந்தனின் தோகையை தொட்டதாக,
ஈழம் களித்தது.தமிழீழம் களித்தது.
தேசக் கட்டுமானம்,
தேவையான சேந்தல்கள்,
விஞ்ஞானத்தின் விதைப்பு,
சாதி ஒழிப்பு,சீதனக் காப்பு சட்டம்,
விதியின் வரைபூ உன் மதியின் தெளிவு.
ஈழ செளமியத்தின் செளபாக்கியம்,ஈனமாக இழைத்த
இழிவுகள் இறைந்தே கழிந்தது.

மனிதாபிமான மரபுக் கட்டளை,
மனித நேயம்,மாந்தர் உள்ளம் மதிக்கும் தன்மை-அதில்
பூத்த தண்மை,மென்மை,பதித்த மேன்மை-இத்தனை
வித்தகமும் விதைத்த வீரியா -- இன்று
உன் அன்பான முகம் காண,ஆசியான வார்த்தை கேட்க
விகசிக்கும் எம் மனம் மானசீமாய் மருகுகின்றது.

வார்த்தைகட்கு அப்பாற்பட்ட வைராக்கியம்-ஆளுமையின்
ஆர்ப்பு வசீகரப் புன்னையின் புறுவல்.
தேர்ந்த தேசியம் தேவையின் தேடல்-ஆதலினால்
அகமெல்லாம் ஆக்க வேண்டிய ஈழத்தின் ஆதங்கம்.
அரிய,பெரிய ஆவலின் ஆதாரம்,அவதாரம் ஆக
உரியவர்களின் உள்ளக் கிடக்கறிந்து ஊக்கம் உருத்த தெரிவுகள்,
மலரும் மணம் அறிந்து வேர் நாட்டிய வேதம் நீ.
பரிவுகளின் பாகம் உதிரிகள் ஆகக் கூடதென்பதான
ஊக்கம்,
உள்ளதெல்லாம் உதயமாகும் ஈழப்பரப்பிற்கே என்பதில்-
எள்ளளவும் ஐயம் திரிபுற அர்ப்பணிக்கும் ஆதார்சம்
எந்த இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் என்பதில்
அகிலத்திற்கே ஆளுமையற்ற பொறாமை.

ஐயனே!
என ஆரும் அழைப்பதில் பெருமை தவிர்க்கும் பெரும் விம்பம் நீ.
ஈழ இனத்தின் இயலாமையை ஒட்டு மொத்தமாக கரைப்பதில்-
ஈகமான பெரும் கருணை.
தன் கடமையை தட்டிக் கழிப்பதில் தமிழனிற்கு நிகர் தமிழனே.
இதை இயல்பாக சுட்டி இயலாமையை இகழ்ந்ததில் நீ இமயம்.
ஈர்த்தெடுத்து இனத்தின் ஈகத்தை இகம் மலைக்க வைத்த இயல்பன் நீ.

அவலத்தை தந்தவனுக்கே அதை ஆசுவாசமாக திருப்பி,
ஆர்த்து கொடுக்க ஆளாக்கியதில் அவனி அவதானிக்க வைப்பதில்,
அலாதியாக தைரியம் தைத்த தைலவன்.
தாற்பாரியத்தை தக்க வைப்பதில்-
தாண்டவன்.
எதிரிக்கு என்றுமே எமன்-அவன் படை கட்டும் கட்டுமானம்
சுட்டுவதை சூத்திரம் சுதாகரிக்கா சுமையவன்-என்றும்
உதிரிகளுக்கும்தான்.
உரியவன்-
உவப்பான உரிமையின் உலகவன்.உலவவன்.
தெரிவான பாதை தெளிக்கும் உதயம்.
உரிய நேரம் உதயமாகும்-எங்கள் உதய உரிமம்.
அன்று தெளிவாகி சேமம் விசாரிக்கும்-உலக தேசமெல்லாம்
தெவிட்டாத சேதிகளாக,சோதி ஒளிர சோகம் அகல ஆருடமா எமக்கு தேவை?
அல்ல அல்லும்,பகலுமாய் அயராதுளைத்த ஆளுமைகளே நாளை,
எம் வயல் வகுக்கும்
தொடரும்)

வலைப்பதிவு காப்பகம்