சனி, 26 டிசம்பர், 2009

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.


அகிலத்தை அசைத்த அசைவது அதன்
ஆள(ழ)ப் பெயரே சுனாமி-உலகில் எத்தனை,
அக்கிரமங்களை ஆட்சியாளர்கள் ஆக்க,
அற்ப நிமிடத்தில் அதை மீறிய அனர்த்தனம்!
ஆக்கிய ஆழியின் ஆர்ப்பு நர்த்தனமே!உன்
அசைவின் புனர் பெயர்தான் பூமியில் சுனாமியாக
சுகந்தங்களை சுருட்டியதோ?

வறட்சியின் வையகத்தை மடக்கும் மாண்பூ _நீ
திரட்சியாய் திடகாத்திரமாய் திறன் ஊட்டி-இத்
தீவினை மட்டுமல்ல திறந்து,விரிந்து பரந்திருக்கும்
அவனியை ஆட்சி செய்யும் ஆர்ப்பு நீ-
அன்று!(26.12.2004)
பவனி வந்த பாரை பாறையாக்கிய போர்ப் பரணியை!
இன்று வரை யாரும் இறுமாந்து அழிவாற்றவில்லை.
ஊழிப் பெரும் ஊற்றே ஆழிப் பேரலைக்கு ஏன் இந்த
கோரப் பசி?

எத்தனை மக்களை எவ்வளவு இலாவகமாக--
இவ் வையகததில் வளமாக வாழ வைத்த வனப்பு நீ!
உன்னால்-
அன்றும்,இன்றும் ஆரோக்கிய வாழ்வதனை,
செளபாக்கியமாக்கிய செளதாமினியே!
செளந்தரியே!
ஆழ,அகல நீ ஆர்ப்பரித்து அலைகளாக அசைவெடுத்து,
மீள,மீள மிதமாக மீட்டிய உன் ஆதங்க கரம் தழுவ,
சோளகக் காற்றின் தோகை வரிப்பில் எங்கள் தேசம்
தழுவிய கடலம்மையே-ஏன்?
அன்று இந்த கோர ஊழி தாண்டவமாடினாய்?

உன்னால் உவப்பெய்த அத்தனை ஆத்மர்களையும்,
உனையே நாளும்,பொழுதும் உரசி,ஊடி நின்ற உவப்பான
உனதருமை உத்தம மைந்தர்களையும்,
ஏனிந்த தாளாச்சினமேந்தி
எக் காளமாய் கொன்றேகினாய்?
வயது,பால்,மறைத்து
புலர்ந்தது,
மலர்ந்தது,
வளர்ந்தது,
வாழ மடி தேடும் வஞ்சியர்,
நேற்றுத்தான் நேச மடி குடி புகுந்த-
கோவையர்கள்,கோமகர்கள்,
வாழுதலின் வசப்பெழுதி வையத்தில் தன்-
வாரிசுகளை வனப்பெழுத வசந்தமாய் வார்த்தெடுக்க,
வளம் தேடும் வாசலில்!நீ
வகித்த வதை பாகம்!

தனதான சந்ததியின் மழலை குரலேந்த,
இன்றைய விடியலில் இரத்தல் தவிர்த்து
இதமான வாழ்வெழுத,
நாளைய பொழுததினில் மங்கல நாணேந்த,
நாணம் நயித்த நங்கையரின்
ஞாயத்தை,
இராப்பொழுது இதமாக விடிந்ததால்!
இரவெல்லாம் இமை விழித்து இணையாளனை!
எதிர்பார்த்த மனைவியின் ஏக்கங்களை,
அவர் தம்-
மழலைகளின்,மையல்களை-எந்த
கூர்ப்பெழுதி குலைத்தழித்தாய்?

அடித்து நீ ரணப்படுத்தியிருந்தால்!
இதன் இலங்கலை இதப்படுத்தியிருப்போம்-ஆனால்
அத்தனையையும் அலங்கோலமாய்,குதறி,கிழித்து
வதைத்து,உன்னோடு கொண்டு,கொன்று
ஏக்கப் பரப்பில் நீ ஏகாந்தமாய் பறித்த
இந்த பரப்பளவை எந்த பரப்பில் நாம் நிமிர்ப்பெழுப்ப முடியும்?

ஆக்கிரமிப்பாளனின் பாளத்தில் நாம் அனுதினமும்,
ஆர்தெடுக்க ஆயிலியம் சுரப்போமா?
இந்த
வேதனையின் வேகமையில்,அதன் சுமைகளின் சுமையை
நின்று நிதானித்து, ஆசுவாசப்படுத்த, ஆர்த்த இந்த
இமைப்பொழுதிலா-நீ
இந்த இணையற்ற வேகம் தரித்தாய்,
எம் ஏற்றமெல்லாம் இழுத்தழித்து இழவெழுதினாய்?

ஏய்,
ஆழிப் பேரலையே!
ஆயுள் முழுவதும் நாம் ஒப்பாரி எழுதி-எங்கள்
ஒய்யாரம் அழிக்கவா?உன் ஓங்கார சங்கூதல்?
ஆரியனின் அதமத்தில்,அந்த ஆக்கிரமிப்பில்,
வெங்களத்தில் எங்கள் வேதம் தரித்தோம்.ஆனால்?

உந்தன் உற்சவத்தில் நாம் சவமாகவே சகம் தரித்தோம்.
நிந்தன் பொற்பாதத்தில் எங்கள் வாழ்வேந்த
தந்தனை உந்தன் ஈகபாகத்தை,
ஈய்ந்தனை இறைந்தனை,
சந்தன மேனியரின் சாகச களமே,விந்தனைத்தும்
சிதைத்தோம்-ஆயினும்
விடியலையும் இழந்தோம் அல்லோம்.

ஒவ்வொரு இழப்பிலும்,
இன்னொரு உயிர்ப்பிருக்கும்,
உணவுச் சங்கிலிபோல் உணர்விருக்கும்.
உயிர்த்தெழும் உரமிருக்கும்,உறங்காத
உணர்ச்சியிலே உற்சவமெழுதும்,
உயிர் இருக்கும்.
உந்துதலிலே உறுப்பெழுத உரமாக இன்னமும்
இந்த ஏகாந்த வெளியில்!

நம்பிக்கை எனும் நாணய ஞாலத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்