புதன், 27 ஜூலை, 2011

புன்னை மரக் குயில்களாக,
புவனம் மருவ வாழ்ந்த மாந்தர்,
தின்னக் கொடுத்தோம்.திமிரெடுத்த
சிங்களத்தின் கொடுங்கரத்தில்.

என்ன பிறவிக் கடனிது?
ஏனிந்த அவலத் தொடரது?
தின்னத் தின்ன சின்னத்தனம்.
சிரசெரித்த கோழைத்தனம்.

வண்ணக் கலவை குழைத்த-எங்கள்
வைடூரியங்கள்-எல்லாம்
பண்ணை பிறழ்ந்த பரிதாபம்.
எண்ணக் கிடங்கில் எத்தனை நாள்?

நினைவழித்த நாட்களாய்-இனி
நிதம் கலைந்து போகுமா?
நினைவெழுதும் நாளின்றி-நெஞ்சம்
கனம் கலைத்து காயுமோ?

தொலை தூரம் தெரியாத சொப்பனமாய்-
வலையிறுத்து வஞ்சக பாழகர்கள்-எங்கள்
விலையற்ற வித்தகங்களை எந்த
வினையாற்ற அழித்தார்?

வலி, புரியவைக்க முடியாத வலி.
பலி, பகைக்கு பகை தெரியா பலி.
நலி ,நகையிழந்த நம் செஞ்சோலை நலித்த,
கலி, காலமிழந்த கலி வலியேற்றி -இனி
எந்த வதைமுகம் காட்டும்?

அஞ்சலிக்க மட்டுமல்ல இவ்வாக்கம்.
செஞ்சோலை பாலகரின் நினைவு நெகிழ்வாக,
கொஞ்சி விளையாடும் கொற்றங்களிற்கு தங்க
தலைவன் சமைத்த சபை பற்றி பண்ணாட,
நினைவுகள் தெறிக்க,உள்ளம் பற்றும் கனல் சுமந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்