புதன், 27 ஜூலை, 2011

வலி!
அது எனக்கு புரியவில்லை.இந்த
ஆழி சுமந்து ஆற்றிய வேதனையின்,
சுவடுகள் கூட என்னை சுடவில்லை.
ஏனெனில்!
நான் அந்த மண்ணிலும் இல்லை.ஏன் இப்போதும்
நான் அம் மண்ணின் மைந்தனும் இல்லை.

எப்படி இந்த வேதனைகளின் கொடுமைகள்
எனை சுடும்?
அல்லது-
எப்படி என்னால் அந்த ரணங்களின்
கதங்கள் எனை கவ்வும்?நான்
வெளிநாட்டின் வேதகன்.

துப்பாக்கி குண்டின் சத்தங்கள் கூட,
என் செவி மொள்ளவில்லை.
அவர்களின் உத்தமமான,உயர்வான
போராட்டத்தின் பொறிகூட என்னை பாதிக்கவில்லை.
நான்தானே பக்குவமாக புலம் பெயர்ந்து விட்டேனே?
எனக்கென்ன மனக் கவலை?

இராணுவத்தின் வக்கிரகங்கள் எனை
வலமாக்கவில்லை.பேரினவாதிகளி​ன்
ஆழிக்கூத்து எனை சீண்டவில்லை.ஆகவே
அதுவரையில் அவர்களின் அனந்தம் நன்றே.

ஒரு முடறு தண்ணீர்க்கு என் சொந்தங்கள்
உறவுகள் பாடாய் பட்டதை,அதன் ஐீவித
வேதனைகள்--
பாலுக்கழுத பச்சிளம் பாலகரின் அழுகுரலும்,
எந்த பாலுக்கும் வழியின்றி அந்த தாயவள் பட்ட
வேதனைகள்,
வாழும் வயது முற்றி இயங்க முடியாமல்
அந்தரித்த எங்களின் முதியவர்கள்,
சுந்தர வயதில் சுகவாழ்விற்காய்
சுந்தரிகள் அவலத்தில்!
வாலிப வயதில் வளமாக்க வாழ்வை
வையத்தில் வகுக்க வாய்த்த என்
வாலிபர்கள்,

அத்தனை உறவுகளும் போட்டதை போட்டபடி
அடுத்த விநாடியில் எந்த நாடிகளை
இழப்போமன அறியாமல்,அடுத்த வேளை கஞ்சிக்கு கூட
கூடமில்லா கூடறுந்த என்
உறவுகளின் எந்த வேதனையும் என்னை பாதிக்கவே இல்லை.

ஏனெனில்,
நான் இங்கு வசந்தம் விரித்த,
வயலில் அதன் வயப்பில்,
என்னை கறுப்பனே வெளியேறென,
எனை விரட்ட துடிக்கும்,
நாசிகளின் கொதிப்பு எனக்கு பழகி
உடலும்,மனமும் அதனதன் இயல்பிலேயே
எருமை மேல் பெய்த மழையாக,
காலம் செல்ல அதுவே இயல்பாக --

உணர்வுகளின் சூட்சுமமும்,
உணர்ச்சிகளின் லயமும் எனக்கு எந்த ரீதியிலும்
எனை வதைக்கவில்லை.
எனக்கு எப்படி பிறக்கும் ரோசமும்,மானமும்,வெட்கமும்
உப்பு போட்டு தின்றதே எல்லாம் ருசிக்கே தவிர,
உணவிற்காக மட்டுமே?

இல்லவே இல்லை-
என்னமோ நடக்குது,நடந்தது.
யார் இறந்தால்,யாரிழந்தார்?
எதை இழந்தார்?ஏன் இழந்தார்?
எதற்காக இப்படி?
இவைகள் எல்லாம் எனக்கு சம்பந்தமே
இல்லாத கேள்விகள்.

நான் புலத்து குடிமகன்.
என் சுற்றமும்,முற்றமும்
ஏன் சகல உறவுகளும்,உணர்வுகளும்
இந்த புல முற்றத்து கொற்றமே.

முள்ளியவளை எங்குள்ளது?அதன்
பாரிய சரிதம் இப்போ யாது?அங்கு இறந்தவர்கள்
என் உறவும் இல்லை,அதனால் எனக்கு ஏந்த
உணர்வும் இல்லை.

நான் புலத்தில் மலர்ந்த புதியவன்.
என்னை எந்த உணர்வுகளும்,
ஏன் எதுவுமே!
எனை பாதிக்கவில்லை.
நான் இந்த நாட்டு குடிமகன்.
யார் அழுதாலும்,யார் செத்தாலும்
எவர் முட்கம்பிக்கள் வதைந்தாலும்.
எந்த புதைகுழிக்குள் எவரை புதைத்தாலும்,

எவரை சிங்களன் பாலியல் வன்புணர்ந்தாலும்,
யாரின் மார்பகத்தை அவன் அறுத்தாலும்
அரிந்தாலும்,
எவன் பெண்டிரை ஆமி புணர்ந்தாலும்,
எனக்கென்ன!
நான்
புலத்தில்
பிரசாவுரிமை பெற்ற
ஈனத் தமிழன்.
எனக்கு எதுவுமே வலியில்லை.ஆழி
வலித்தெடுத்த வதையும் இல்லை.

ஒன்று தெரியுமா?
நான்
தமிழனே இல்லை.
யேர்மனிய,கனடிய,பாரிசு,சுவி​ட்சர்லாந்து,
ஏன் சர்வதேச குடியுரிமைக்காய்
களம் தேடும் புலக் குடிமகன்.
வாழ்க சிறீலங்காவின் பேரினவாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்