சனி, 22 மே, 2010

நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.


வீதியில் நடமாட விதி விடவில்லையே?ஐயா
வீணர்கள் விளையாடும் வீதியல்லவா ஐயா
விபூதி பூசினாலும் வினை விடுமா ஐயா -நாம்
எந்த சந்நிதியில் தரிப்பெழுத சதி விழும் ஐயா?

நாளும் கடத்தல்கள் நகரெல்லாம் அழுத்தங்கள்.
பாழும் பரமர்கள் பதிலற்று பாவிகள்.
வேரும், விழுதுமாய் வேய்ந்த பகை நாள் குறிக்க,
ஆருமற்ற அனாதியாய் யார் ஆய்ப்பார்?

இத்தனை அவலமும் சுமந்த எந்தன் சுற்றம்.இன்னும்
எத்துணை சுமை,சுமக்க அவர் வாழ்வு பறித்தான்?
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்,
நெஞ்செரிக்கும் நியங்கள் எந்த கொம்பன் எமை அணைப்பான்?

விடிவு நொடிகளுக்கு மட்டும்தானா?
நொடிக்கும் எமக்கில்லையா?
வல்ல எம் வயலர்களை வார்ந்தெடுக்க பகைக்கு
பாதை விரித்த பாரதமே பதில் இறுப்பாயா?

உனையே துணையென தலைவன் துய்த்த-
பெரும் கணையை,
துப்பிய பெருந் துரோகத்தின்,
வேரே நீதான்.
இத்தனை அழிவின் அரூப அற்பனே!
கால ஓட்டத்தில் உனதான காத்திரமான பதிலாய்
எம் பாதத்தில் நீ இறைஞ்சும் பாத்திரம் ஏற்பாய்.
பார் இது ஒன்றும் பாஞ்சாலி சபதம் இல்லை.

செவ்வாய், 18 மே, 2010

கரி நாள் இன்று.



வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்
வாழ்ந்த இனம்,
வாகையே வகையாய் வயல் மீட்ட வள்ளல்கள்,
தோகை விரித்தாட தோட்டம் அமைத்த தோகையர்கள்,
பாகைகளால் பருதி பருத்து பரவி,விரவியிருந்த
பரிவுகள் எல்லாம் பாவிகளால்,
பறி்தெடுக்கப்பட்ட,
கரி நாள் இன்று.

மாற்றம் அதற்கு மட்டும்தான் மாற்றம் மையல் விரிக்காது.
ஆனால்!
மாற்றம்!
சுழலும் இந்த பூமிப் பந்து
சுமந்து வரும்....
நாள் ஒன்று நயக்கும்.
நலிந்து கொய்யப்பட்ட எங்கள் தோட்டம்-
நயப்பெழுதி நயனம் நயக்கும்.

ஈகத்தார்க்கு இரப்பெழுதும் மனம்,
இகத்தில் இதயத்தில் மட்டுமே எழுதட்டும்.
சொல்லிற்கு முன் செயலாக்கும் சேடியர்கள்,
செய்கை நியம் மொய்ய நாம்-
பொய்கை பொலிவுற போற்றும் எம் வழி செல்வோம்.

நேற்றைய போலவே பொழுது மட்டுமே விடியும்,
நாம் பொருதும் போக்கில் மாற்றம் மருவ,
பொலிவுற ஓா்மம் ஓங்க உலகொழுங்கு மாறும்.
விதைத்த உடன் எதுவும் அறுவடையாகாது.நாம்
விரிந்திருந்தால் வினைகள் விடையிறுக்காமல் ஓயாது.

நீதிக்கு தண்டனையை எந்த நிர்மலன் தொகுப்பான்?
போதித்த புத்தனின் பொய்மையில் உலவ?
சாதிக்கும் சரித்திரம் தர்மம் நிலை நாட்டும்.
பாதித்த எங்கள் பரப்பெழுதி ஊட்டும்.

சனி, 15 மே, 2010

கோவணமும் ஆவணமின்றி அகலும்.


வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,
எத்தகம் மூடி சிதைத்தார்கள்?
உன் சித்தகத்தில் சிறக்கல்லையா?
பித்தகங்கள் பிறவியாக பிடரி வழி
பிறழ்ந்த சிங்களனவன் பிஞ்சு முதல்-எங்கள்
உறங்கு குழிவரை உயிர்த் தண்ணி பறித்தான்.

பொது மக்களின் புதை குழியில் நாளை இவர்
"மா"?வீரக்குதூகலம் கலக்க -எந்த
"பா" ஏந்தினார்கள்?ஆம்
அரக்க சிந்தையர்கள் கால,காலமாக... களி(ழி)க்கும்,
அனந்த நிலையது அவர்கட்கும் பொருந்தும்.
எந்த போதினி போற்ற பொய்கை கலந்தார்.

எம் இன அவல "சா"க்களில்:இவர்கள்
"சா"க்கடை திறப்பு.நாம் தீக்குளித்து
எரிந்த மேட்டில் சாம்பல் இன்னமும்
கரையவில்லை.
காயவில்லை!
கல,கலக்கின்றான்
சிங்களக் காடையவன்-பேரினவாத
தெருக் களத்தில்.

புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்
வேற்று முகம் காட்டி எந்த தோற்றுவாயில்
உன் வரப்பெழுதுவாய்?

இப்பவும் நீ தூங்க நாளை
உன் வீட்டு முற்றம் மட்டுமல்ல-நீ
கட்டியிருக்கும் கோவணமும் ஆவணமின்றி அகலும்.
விழித்திருக்க,
விவேகமாக செயலாற்று.அஃதின்றேல்
உன் முகவரியை மாற்றினாலும்-உன்
பிறப்பதை மாற்றமுடியாது.அது
உன் ஆயுள்வரை வரையறையின்றி
சந்ததி வரை வரப்பிளக்க வழியாகும்.

பசித்திரு!
பாரில் எப்போதும் விழித்தெழு -நாளை
ஊரில் உன் உறுப்பெழுத.

நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.


நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.
நிதம் அதை மனமது சாடும்.
பேரவலச் சாவதை இனமது மறக்குமா?
ஈனச் சாவென்றே மாற்று முகம் சூட்டுமா?
துரோகம் பெருந் துரோகம்,
எங்கள் இன மக்களை இழந்ததை நினைக்கால்
பெருந் துரோகம்.
இதயத்திற்கு மட்டுமல்ல!
இனத்திற்கே இழைக்கும் பெருந் துரோகம்.
ஈனச் சிங்களன் எங்கள் பெரு நிலத்தில்
ஈற்றில் ஈத்தியதை, வகை,தொகையின்றி வதைத்ததை,
எரித்ததை,உழக்கி எம் வயலெரித்ததை,
ஈகச் சுடர்களின் ஈர நிலத்தையும் இன்றும்
இழிவாக கரைத்ததை,
ஊர் கூடி உலகறிய உணர்வால் ஒன்றி,
உரத்து சொல்லாவிடில் பெருந் துரோகம்.
நமக்கு நாமே உந்தும் பெருந் துரோகம்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம்.


விழி மூடாக் கனவைய்யா -இது
வழி திறந்து வாசல் பூத்து-வயல் காற்று
வாகை பாட வாசமெல்லாம் நுகர்ந்திருந்த
திருக் கோலம் திடம் பூண்ட கொற்றம்.

பேரவலத்தால் இன்று பேயாட்சி-எங்கள்
தேரோட்ட வீதியெல்லாம் ரத்தாட்சி
நீரோட்டம் அங்கே வறட்சியாக்கி-எங்கள்
வாசலெல்லாம் வைத்தானே நெருப்பபாக்கி
சாம்பலாகி போனதுவோ சந்ததிகள்-அங்கே
ஆம்பலாக விழையாதோ ஆத்மாக்கள்

நீண்ட கொடைகளால் நிமிர்ந்த கொற்றம்-
தாண்ட தாண்டவம் ஆடினானே சிங்களம்
கொண்டதெல்லாம் இந்தி ரத்தம்-அதில்
இழிந்து போனதய்யா எங்கள் ரத்தம்-பாவி
பல தேசம் இணைந்து பலியெடுத்தான்-நாம்
பந்தயக் குதிரைகளாய் பலி கொடுத்தோம்.

எத்தனை இழவுகள் எம் வலம் விரித்தான்-அதில்
சித்தனைத்தும் சிதைத்து எரித்தான்
முத்தியவன் கொண்டானா முகிழ்வெரித்து வென்றானா?
பத்தியவன் பறித்ததெல்லாம் பாவி எம் உயிர்களையே-பாரத
புத்தியவன் புதைத்தானே புத்ததேசத்திற்காய்-எந்த
யுக்தியில் அவன் வென்றான்?எதை வென்றான்?

புதைத்தது,நஞ்சு குண்டால் எரித்தது,
விதி மீறி கொன்றது,வீதியெல்லாம் தின்றது
பதை,பதைத்து சரணடைய சண்டாள சிங்களம்
விதை பிதுக்கி,விரையிறுக்கி எத்துணை அட்டகாசம்?
வெற்றியின் குரல் இப்படித்தான் என்பதாக,
வெங்களச் சீனனுடன் வேடிக்கையாக எங்கள் வேதனைகள்
ஆரியனிற்கு.

ஆரிய கிட்டலரிம் இல்லாத மதை,மதைப்பு
ஆனாலும் எதை அழித்தான்?
ஆணவம் தலைமீற ஆயிரம் அவனிற்குள்,
அவனியும் சேர்ந்தே அத்தனையும் அறுவடையாய்,
ஆனாலும் ஆனதா ஆன்மாவில் விதைத்ததை அழிக்க
ஆக்குவோம் நாம் நாடு கடந்த தமிழீழம்-அதனால்
நோக்குவோம் எம் நோத்திரத்தை நோற்றுவோம்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-மா வீரத்தால் வளர்ந்த தீ


போகும் வழி போகின்றோம்-
போர் சுமந்து செல்கின்றோம்
சாகும் வரை நாம் தொடர்வோம்.எங்கள்
சாசனங்கள் நிறையும் வரை,

ஆவி வழி சொந்தங்கள்
ஆயிரங்கள் இழந்தாலும்
மீதி எழும் பந்தங்கள்-வீதி
கீற விழுமியங்கள்.

ஊர் அழிந்து போனாலும்
உறவழிந்து போனாலும்
உறுதியாகிப் போகின்றோம்-எங்கள்
உறுதி எழுதப் போகின்றோம்.

இலட்சியங்கள் சாவதில்லை-எங்களை
இழைத்தவர்கள் ஓய்ந்ததில்லை
வறட்சி ஒன்றும் வரைவதில்லை-இந்த
புரட்சி என்றும் புரள்வதில்லை.

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-"மா" வீரத்தால்
வளர்ந்த தீ
விருப்பாற்றி எரிந்த தீ-புலி வீரர்களால்
மலர்த்திய தீ
சுதந்திர தீபம் ஏந்தாமல் சுரம் குன்றி
குமைந்திடுமா?
சுந்தரத் தீ மழுங்க சுரைந்திடுமா?

மங்காத ஒளி வீசும்-அது
மாவீரம் காத்திருக்கும்
ஓங்காமல் ஓயாது ஒளி தீபம் ஏற்றாமல்
மாமாங்கம் போனாலும் மலராமல் போகாது.எங்கள்
மண் விடுதலை கீதம் இசைத்தேகும்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

சுயபரிதாபம் சூனியமே சுரக்கும்


இருத்தலையும்,நுகத்தலையும்
நாடும் மனம்-எந்த பொறுத்தலையும்
போற்ற போகம் மறுக்கும்
திருத்தலம் நாடும்-இவர் திருந்தார்
உருத்தளம் அமைப்பார்-ஏந்த
உவப்பெதுவும் மொள்ளார்-ஏதோ
பெருந்தலை சாத்தானாராக பெருமை மொய்வார்.

கருத்தல்,கறுத்தல்,உறுப்புக்களின்
உசா கருக்கும்.
பெருத்தல் என்றும் பெருமைக்கு உரியதில்லை.அது
வெடித்தலையும் வேகம் வெய்யும்.ஆக
உருத்தல்,உறுத்தல் உலவல் எல்லாம்
மாற்றத்திற்கு உரித்தானதே-எனவே
கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல்
காரியத்தின் கனதியை கைக்கொள்ளல்-அதன்
காத்திரத்தை காக்கும்.

வேகம் என்பது வேதம் கொள்ளலும்,
பாதம் அதை பதிக்க பார்வை கூர்மையும்,
விரிந்த நோக்கமும்,விரியா சுயமும்,
சுரந்த போதில் சுமையது குறையும்.
கரந்த எந்த கயமையும் கலைய
குறைந்திடாத குவலயம் வேண்டும்.

இயலாமை என்பது உதாசீனமாகும்,
முயலாமை அதன் முதற்படியாகும்,
செயலாற்ற என்றும் செம்மைகள் சேர்த்து
புயலாக நீயும் புயங்களை பூட்டு
வயலாக விரியும் வளமது வருடும்-வந்த
பனியாக யாவும் பரவலாய் மடியும்.

சுயபரிதாபம் சூனியமே சுரக்கும்-தன்னை
சுயபரிசோதனை ஆற்றல் சூத்திரம் சூட்டும்
நம்பிக்கை என்பது ஐந்தெழுத்து மந்திரமாய்
ஐயமது போக்கி ஆளுமை நோக்கு
பையவென்றாலும் வையகம் போற்றும்.

புதன், 24 பிப்ரவரி, 2010

கனடிய வர்த்தகர்களின் அரிதாரம்.

அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடாத்திய கனடா வர்த்தக சம்மேளனமும், வைத்திய சங்கமும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு. அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டங்கள் நடாத்திய இந்த கூட்டம் புலியை வைத்து அன்று பிழைப்பு நடாத்தியது. புலிகளின் தலைமை கடந்த ஆண்டு மே மாதம் மெளனிக்கப்பட்ட நிலையில், தற்போது மஹிந்த அரசுடன் உறவு கொண்டு தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ் குழு அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சு நடாத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.(படம் இணைப்பு)


புலிகள்-ரணில் சமாதான காலகட்டத்தின்போது கனடாவில் இருந்து லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கரியான்ஸ், டிரக் லீ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து சென்று பிரபாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களான வைத்திய கலாநிதி சிவாஜி, கணேஸ் சுகுமார், குலா செல்லத்துரை போன்றவர்கள் பிரதானமாக செயற்பட்டவர்கள் ஆவர். தமது பிழைப்புக்காக அன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை துரோகிகளாகவும், தீண்டதாகதவர்களாக கூறிவந்த இந்த வர்த்தக சமூகம் இன்று வன்னி இறுதி கட்டபோர் மூலம் தமிழினத்தின் அவலத்திற்கு காரணமான அரசுடன் ஊடல் கொள்வது மிகப்பெரும் துரோகமானது.

இது கனடா வாழ் வர்த்தகர்களின் இரண்டகமா?அல்லது பச்சோந்தி தனமா?இல்லை எல்லாமே இப்போ வியாபாரம்.சுயநலமிகளின் சூத்திரம் எப்போதும் இப்படித்தான் இயங்கும்.கேட்பவன் இல்லையென்றால் ஈசலும் ஈசன்தான்.
பலமிழநதோம் பேரம் பேசும் சக்தியும் அற்ற போது எல்லாமே?????

ஆயினும் அற்றதான இத்தனையும் வினையறுக்கும்,விதி என்பது மாறும்.மாற்றப்படும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வசிட்டர்களிற்காக காத்திருக்கும் வயல்.


பிரீத்தோதும் பிறவிகளால்,
பிரிந்திருக்கும் தமிழ் கூட்டமைப்பு.
எந்த தெரிவேந்தி இன்று தேர்தலில்?
சிந்தாத சிந்திப்புக்கள் சிதைந்தொழிந்து,
சின்னா பின்னமாக பின்னலிடும் பிறழ்வில்.

அண்ணன் இல்லையெனில்,
ஆளுமையும் அரோகரா!
தண்மையான தகமெல்லாம்,
தடம் புரண்டு அரோகரா!
திண்மை அங்கே தீ எழுதும்,
திடமெல்லாம் தீக்கிரையே அரோகரா!

வண்ண, வண்ண வளமெலாம்,
வயலறுந்து செயல் குலைந்து,
திண்ணைப் பேச்சாக திடகாத்திரம் தீய்ந்ததினால்?
பலமற்றப் போனதால் பகை-
வாசல் எம் "பா" எழுதுமா?

ஆளுமையற்ற அரசியலால் என்ன தகம்
நாம் குவிப்போம்?
சூனியமாய் அங்கு சுடரெரிந்து அணைந்ததுவா?
கூனியம் எம் குன்றாக குலமேந்துமா?
அன்றிலிருந்து இன்று வரை இந்த
பேரினவாதம் எம்மை பெயர்த்தெடுத்ததே தவிர
எந்த ஆளுமையையும் எமக்காற்றவில்லை.
இது என்றும் எம் வரலாறாக வழி காட்டும்.

ஆயுதம் இழந்தோம் அதனால் அத்தனையையும்
இழந்தோம்-ஆனாலும் மாற்று வழி ஏதும்
இல்லை.
எனவே மாற்றமான களமேந்தி
மீண்டும் நாம் தரிக்க தளம் ஒளி கூட்டும்-இதுதான்
தாற்பாரியம் இதற்கு வருடங்கள் கூட ஆகலாம்.

இதை எதிரியே தீர்மானிப்பான்-அது
எங்கே?,எப்போது?எப்படி?ஏன்?
விடை தெரியா வினாவாக இது நீட்சி காட்டாது.
காலம் களம் திறக்கும்.
கோலமிது மாறும் கொற்றங்கள் குழுமும்.
ஞாலத்தில் எமதான ஞாயிறு உதிக்கும்-அது
உலவும் இந்த உகைப்பெல்லாம் உறுத்தறுக்கும்.

எம் இடையே விசுவாமித்திரர்கள் அதிகமா?
துரோணர்கள் அதிகமா?
ஒட்டுக் குழுக்களே அதிகமாகி போனார்கள்.
எமக்கு தேவையானவர்கள் வல்ல வழி காட்டும்
வசிட்டா்களே.
இருப்பெழுதும் இவர்கள் இழைவார்கள்-எம்
உறுப்பெழுதி மிளிர்வார்கள்.

மாறும்,களம் மாறும்
நிச்சயமாய் இத்தனையும் மாற்றம் பெறும்.
சுழலும் பூமிப் பந்து இந்த மாற்றத்தை
அங்கீகரித்து எம் ஆயிலியம் வரைய மாறும்
எல்லாமே மாற்றம் பெறும்.
புறச் சூழல் இந்த புதுமையை புகுத்தும்.
பொறுத்திரு அதுவரை உன் தேசியக் கடமையில்
கரம் கொடு.எல்லாமே ஆகும்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

மறக்கக் கூடாத மயானம்.

நடந்து முடிந்ததாக கூறப்படும் அத்தனை அழிவுகளும் நெஞ்சில் அணையாத தீயாக என்றுமே எரியவேண்டும்.மறக்கவோ,மறைக்கவோ முடியாத வெஞ்சினமாய் உள்ளத்தில் அனல் எரிய வேண்டும்.இதை மறந்தால் தமிழன் என்ற தார்மீக எண்ணத்தையும் எரித்து விடு.இந்த இகத்தில் எந்த நுகமும் அற்ற,அறமுமற்ற அனாதியனாய் அலை.தாய் நிலத்தையம்,தர்மத்தின் அறத்தையும் அழித்தவனை எந்த முகாந்திரத்திலும் உன் மனம் கொள்ளாதே.சுழலும் இந்த பூமிப் பந்து மீண்டும் எங்கள் கொற்றத்தை கொலுவேற்ற அயராமல் உழை.இணையங்களில் நாளொரு திரிப்பும், பொழுதொரு பழிப்புமாய் சில,பல சுய நலமிகளால் தொப்பி பிரட்டி தோரணம் வேயும் ஒட்டர்களை,இந்த கூத்தர்களை பிரித்தறிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்டு உனதான தேசியத்திற்கு தோள் கொடு.நாளை விடியலின் சந்நிதியில் எம் அவலங்கள் முடிவு முகரும்.

புதன், 17 பிப்ரவரி, 2010

அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.


ஒரு கரம்,
ஒரு கணம்,
திரும்பவும் தரிசனம்.
திகைப்பெழுதும் திமிர்த்தனம்.
வரும் வரை விழித்திரு,
வழியெலாம் முட்புதர்.

முற்றம்!
எப்போதும் தானா வளர்ந்ததில்லை.
முகமெழுதும் வயற் கட்டும்
தனியாக விளைவதில்லை.
பூத்திருக்கும் பூங்கா வனம்
பூமியில் உழைப்பின்றி
உதித்ததில்லை.

ரணங்கள்,
வலிகள்,
மாபெரும் இரத்த ஆறுகள்,
மனிதரின் மகத்தான
உரத்திறனால் எழுந்தவைகள்-இதில்
எதுவுமே ஏற்றம் இழைய
இழந்தவைகள் ஏராளம்.

இழப்புக்கள் தான்-
உதிப்பனவுகளிற்கு உந்து சக்தி.
தோல்விகளின் தோரணமே-
வெற்றிகளின் படிமானம்.

மீண்டும் முழைக்காதென,
வேரோடு அழிந்தவைகளும்,
வேகம் முதிர்த்து எழுந்ததுண்டு.
பதினேழு தடவை கயனி முகமது-
படை எடுத்து வென்றதுவும் வரலாறு.
பல ஒட்டு குழுக்களால் வலை திரித்து,
நிமிர்ந்ததுவும் எங்கள் வரலாறு.இன்று
ஏதும் அற்றதாக எல்லாமே அழிந்ததாக -ஆம்
ஏன் எரிந்ததாகவும்,

ஆயினும்!
எரிவிலும்,முற்றான அழிவிலும்
தோன்றாமல் தோய்வெழுதாது எங்கள்
தேசியம்,
களம் இன்று கனதி அற்றதாயினும்-
தளம் தரமேறும்,
விதைத்த உடன் எதுவும் விழையாது.
எரிந்த நிலம்,உழக்கிய மண்
பிய்த்த பிசிறிய கோலம்-கொஞ்ச காலம்
நிதானிக்க தானம் தேவை.

எனினும் எங்கோ உறுதி,
ஒன்று இதற்கான காய் நகர்த்தலில்,
அருவமாக,நாள் நகர உருவகமாக
உதிக்கும்-அது ஓர்மத்தின்,வீழ்ந்த வடுக்களை
மீள்,சுய மீளாக்கத்தால் மிடுக்கேற்றும்.
சோழ ராச்சியத்தின் தொப்பிள்கள் தொட்டில் கட்டும்.
வளி ஒன்று வகையாக்கும் அந்த வல்லோனின்,
விழியசைவில் வழி திறக்கும்.

வெறும் நம்பிக்கையில்,
வெற்றான எதிர்பார்ப்பில்,இது அசைவியக்காது.
வியாபங்கள் வித்தியாசமானவை.
விசுவரூபங்கள் இப்போதும் அவை மொய்யாது.
கால ஓட்டங்களில் இவையும்
பெரும் ரூபம் தரிக்கும்.ஈழ விடுதலையாய்.-
அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.


இளமையின் கனவுகள் கலைவது வாழ்க்கை-அதற்காக
கனவுகள் காண்பதை கலைப்பது முறையா?தோல்விகளில்
கற்றல் வாழ்வின் பிடிப்பாக பிடிமானம் நுகக்கும்.
ஆக!
வெற்றிகளில் மட்டும் களிப்பெழுதுவதை கழித்து
தொலை நோக்கில் தோகை விரி.
தோல்விகள் தோள் தட்டும் போது
முதலில் தன்னைத் தானே தட்டி.
கொடுத்தல் தன்னம்பிக்கையின் முதற் படி.

துவளாத மனமும் எதிலும்,
எதிர் நீச்சல் போடும் வீரியமும்,
முதன்மையாகும்.
சுய பரிதாபம் சூட்டுதல் சூனியம் வரையும்.
எப்போதும், எதுவும் நிகழலாம்.
எனவே முன்னேற்பாடு நயத்தல்
நயமாகும்.

வரும் போது காத்தலும்,வந்த பின்
நோ(ர்)த்தலும் காத்திரமான களமல்ல எதையும்
தொலை நோக்கோடு யாத்தல் விவேகமாகும்.
விதி சொல்லி விழுவதை வதைத்து
கதியல்ல காதையென விழித்திரு.

ஆளுமைகளை அகம் கொள்ளுதல்-அதை
ஆத்ம சுத்தியுடன் அணைத்தல்,
பேதமைகளை களைத்தல்,மடமைகளை
கழித்தல்,
விடையிறுக்கும் விவேகத்தை கட்டிகாக்க.

சந்தர்ப்பம் என்பது
எப்போதும்,எங்கேனும் இலங்காது.அதை
இலங்கும் போது நலங்கிடுதல் நயம் நாட்டும்.
விலங்கது என்று வில்லங்கம் சூட்டினால்
மலங்கி,கலங்கி,மாய்தல் மானம் கரைக்கும்.

எனவே!
கூடும் தானங்களை தரம் பற்றி,
ஊடும் உலைப்புக்களை தரம் பிரித்து,
வாடும் வனப்பெழுதாமல்,
பாடும் மனம் கொள்க,பாதை அது திறக்க.

வெற்றிகளில் கரம் கொடுப்பதை விட
தோல்விகளில் தோள் கொடுத்தல்
நியாயமான செயற்பாடாகும்.
அது ஆரோக்கியமான ஆதார்சமாகும்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்க,அதை
வேடிக்கை பார்த்து நக்கலடிப்பதைவிட,
அவனை கைகொடுத்தெழுப்பி உற்சாகப் படுத்தல்,
கோடி கிடைத்தாலும் கிடைக்காத உவப்பது.
வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்!

இன்னா செய்தாரை ஒறுத்தல்-அவர்
நா நயம் செய்துவிடல்.

இரண்டகமும்,எதிரி பாகம்
இணைந்திருந்து தன் இனத்தையே
அழித்தவனிற்குமா?
இதை வள்ளுவன் வரைந்தான்?

இப்படியும் இயம்பும் ஈனர்களை
எந்த லயத்தில் இருத்தி
இலங்கல்களை இழைப்பது?
தம்படி நிலம் கூட எங்கள் தரத்தில்
தரணியிலற்று போனதால் தகமெல்லாம்
ஈரமற்று போய் விடுமா?

விலங்கிலும் இழிய வாழ்வேற்று
துலங்குமா எங்கள் துயரமும்,வேதனையும்?
மலங்க விழிக்கும மானிடரானோம்!
குலங்கெளெல்லாம் குடியற்று,குவிவற்று
கொடியவரால் குதறப்பட்டு
மடியும் இந்த மானிலத்தில்-எந்த
விடியலாற்ற வீணர் எம் களம் கலைத்தார்?

இருப்பதை விட்டு பறப்பதை பற்ற எண்ணும்
பேதமை என்று விலகும்?
நெருப்பாற்றில் நீந்திய எம் நேத்திரர்கள்
விருப்பாற்றி வீதி கீறிய விதிகள்
இதை விட்டால் வேறு வழியில்லை என்பதை
மீண்டும் மதி கீறும்
பேரினத்தின் விறுமம் கரைக்க
ஓரினமாய் எங்களினம் மீண்டும் இணையுமா?
ஈர்க்குமா?

இல்லை வேறு வழியில்லையென
சரணடையும் சாரம்தான் சங்கதியாகுமா?
போனதில் போக்கற்று வீர வரி கீற
விறுமம் இனி வரையுமா?
எங்கள் வீதி வெறிச்சோடி,எங்கள் வானம்
வெளிறி,எங்கள் கடல் குருதியில்?

நாளும்,பொழுதும்
காணாமல் போவோர் எத்தனை பேர்?
கிராமத்து கிணறுகள் விழுங்கும்
இளைஞர் எத்தனை பேர்?
இருட்டிற்குள் இன்னல்களே வாழ்வாய்
உருக்குலையும் எங்கள் குமர்கள் எத்தனை பேர்?

பலமாய் தமிழர் பாலம் அமைத்த அந்த
இளவேனில் ஈழத்தில் இந்த அவலம் இறைந்ததா?
இரவில் இளைஞிகள் இன்கலற்று திரிந்த
அந்த
ஈரமான நிலத்தில் என்றாவது இந்த இழவுகள்
இழைந்ததா?

ஆனால் இன்று
ஈழத்தில்,யாழில் நடக்கும்
சிங்களரின் சின்னகத்தனங்கள்
பலமற்று போனோம் ஆகவே
வலமற்றும் போனோம்.
எண்ணத்தை,எதிர்ப்பை,
எந்த வகையிலும் வார்க்க முடியாத
வகையற்று போனோம்.

இன்னும் எத்தனை நாள் இந்த அவலமும்,
அரியண்டமும்,ஆக்கினையும்.
மீண்டும்-
மகிந்தா என்ற மனிதமற்ற பேயாட்சி
மந்திகள் எல்லாம் எங்கள் மயிலாசனத்தில்?
சிந்திப்பானா தமிழன்?சினமாற்ற
சீற்றம் தொகுப்பானா?
தொகுத்தால் தொகுதி மீண்டும்-இதை
பகுத்தால் எங்கள் பருதி நிச்சயம்
ஆரை ஆர்க்கும்.

இப்போது
இன்னா செய்தாரை ஒறுப்போமா இல்லை
ஒன்றிணைந்து ஓர்மம் ஒற்றுவோமா?

வியாழன், 28 ஜனவரி, 2010

அவல் மட்டுமல்ல, அவலமும் கூட மெல்கின்றோம்.


சிரிக்கும் மலர்களிலே,அது
விரிக்கும் இதழ்களிலே-அறமிழக்க
மரிக்கும் கண்ம் உண்டு.அதுபோல்
எவர் தரிசிக்கும் அறமற்ற அரியாசனத்திலும்-
அழிவுண்டு.

ஆற்றும் திறனது அழியாது.
பிறரும் போற்ற பின் விழைவினை,
முன்பே தெறிக்கும் தெரிவுகள் ஆற்றினால்,
தெம்பே தெளிக்கும் செழிப்புக்கள் செப்பனிட.

தேர்வுகளில் தெளிவற்று,
பார்க்கும் பார்வைகளில் பரிவற்று,
ஊற்றெடுக்கும் உணர்வுகளை!
புரிவகற்றி,ஆற்றல்கள் அமைத்தால்
வலுவற்ற பாதை வாதைகளையே வார்க்கும்.
போகும் பாதை தெரிவற்று???
என்ன தேர்ச்சியை எவர் தேர்ப்பார்?

புரியாத பரிவெழுதும் புதர்களிலே!
வலியான எம் பார்வை எந்த வலுவேற்றும்?
வலுவெல்லாம் வதைமுகாமில்!
தெளிவெல்லாம் புறமுதுகில்!
வழியெங்கே?
வரித்தெடுத்த தெளிவெங்கே?
அத்தனையும் மெளனத்தில் மரிப்பெழுதுமா?

இல்லை!
இறைதலும், இலங்குதலும்,இயங்குவதும்
எந்த இழையை இனி இரப்பேந்தும்?
தளமும் அற்று,களமும் கலைந்து,
ஏந்த ஒரு உலையும் அற்று!
இப்படி எல்லாமே அற்றதாய்!?-
சூனியமே சுவடாய்!

இங்கிருந்து எந்த காரியத்தை?
மங்களமாய் நாம் மதிப்போம்?
வெங்களத்தில் எங்கள் வேதினியர்
சங்காரமாக்கிய சங்கதிகளை??
இங்கிதமகற்றி இந்தியனுடன் இன்ன பிற
வெங்களாந்திகளும்--

எம் களங்களை இனி
எந்த சந்தம் ஏற்றி?
ஆயுதம் அற்றபோது நாம் ஆளுமை இழந்தோம்.
இதனால் நாம் ஏதும் ஏந்தும்
ஏதனமும் இழந்தோம்.
பலமற்றவன் பவனிவர எந்த
பார்வையிலும் பாதை இல்லை.

இப்போ நாம்!
வெறும் வாய்.
மெளனமாக,
அவல் மட்டுமல்ல-
அவலமும் கூட மெல்கின்றோம்.
மெளனம் மேதினியில் மெய்சிலிர்க்க,
மேவும் நாள் கை கூட.அதுவரை
வரைமுறையற்ற வன்மங்கள்
மனமொழுக.

எம் மாவீரக் கல்றைகளே!
உற்றவன் இல்லையெனில்,
யாவும் அறமற்று அற்றே போகும்.
ஆயினும் எம் மனங்களில்
மாதவமாய் நீவிர் வாழும்
வேதத்தை எந்த வேமனும்
அழிக்கவோ,அகற்றவோ முடியாது.

நீங்கள் வாழ்வது,
எங்களின் ஆத்மார்த்த ஆன்மாவில்.
உங்கள் புன்னகைப் பூக்கள் என்றும்
கருகாது.
கால,காலமாய் கனதியாய் வாழும்.
மீண்டும் இந்த மேதினியில்
கல்லறை மேனி கலவரமின்றி
களமேற்றும்,
கலமேந்தும் எங்கள் காலக் கடனால்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத ஓர்மத்தின் வேரை.


அழுகைக்கு நிறமில்லையா?
அது உந்தன் ஆளுமைபோல் அல்லாது போயினும்,
உணர்வுகளின் உறைவிடமாக,
உணர்ச்சிகளின் கனதியாக ஓர்
உறுத்தல்,
இல்லை
இயலாமையின் இறைஞ்சல்.
அல்லது
துணையற்ற ஓர் தூரத்தில்
ஏதும் ஆற்றமுடியாமல்,அற்ற சூன்யத்தில்
இதுதான் என்பதான எந்த வழியும்,விழியும்
ஈற்ற முடியாத ஓர் கையாலாகாத் தனத்தின்
காவுகை,

அழுகை!
இடம்,பொருள்,ஏவல் சார்ந்ததாக
இப்படித்தான் என ஏதும் வெளிப்படுத்த முடியாத
அல்லது வெளிக் காட்டக் கூடாத ஒரு குவியம்.
ஆயினும் நிறமற்றதாக அழுகையை
ஆளுமை ஆற்றல் அது என்றோ ஓர் நாள்
பெரும் ரூபம் தரிக்கும்.

அழுகை
சந்தர்ப்பம் சார பழி வாங்கும்.
ஏன்?
அது அதமங்களை ஓர்மத்துடன்
வசதியாக அணிவகுத்து வன்மம் இறைக்கும்.
ஏற்ற அந்த இலங்கல் இழைய கொலையாக கூட
கூர்ப்பேற்றும்.

அழுகைக்கு நிறம் உண்டு.
இதை இலக்குவோர் இணைந்திருப்பர்,
தனதான தேவைகளையும்,சேவைகளையும்
கூவையாக குவித்திருந்து
கூர்மையான புலம் பருவ
தீர்மையான திடம் தீற்றும்.
அஃதின்றேல் அது அழுகையல்ல.

அழுகை மன்னித்தலை மனம் கொள்ளாது.நான்
இங்கு கோடிட்ட அழுகை
மாந்தர் எம் மைந்தர்கள் மையித்த
மறக்கவே,மறைக்கவோ,
ஒறுக்கவோ,ஒத்திவைக்கவோ முடியாத
ஓர்மத்தின் வேரை.

அழுகைக்கு நிறமுண்டு -அது
தொழகையகற்றி,தொய்வகற்றி
திடகாத்திரம் செதுக்கி திண்மையாய்
தீர்வாக தீட்ட தண்மையாய் தனை தகம் கொள்ளும்.
அந்த கொள்ளிடம் கொலுவேறும் வரை
கொய்யம் ஏதும் கொற்றம் காட்டாது.

வியாழன், 21 ஜனவரி, 2010

உந்தன் மன்றத்தில் மெளனம் கலைக்கும்.


உடலையும்,உணர்ச்சியையும்
கொன்று குவிக்கும்
கோலோச்சிகளே-எங்கள்
உணர்வுகளையும்,ஆத்மார்த்த
உறுப்பான தாகத்தையும் எந்த
தர்ப்பணத்தில் தகித்தெறிவீர்?

மானிடம் கலைத்த ஊனர்களே!
என்றோ ஓர் நாள்-அந்த
சாளரத்தை நீ சாசுவதமாய் சுகிக்க
அந்த அந்திமத்தில் எந்த கோணத்தில்
உன் சுயம் செரிப்பாய்?எல்லாம்
ஆட்சி தரும் ஆவணம்,
ஆணவம்-
மிட்சியற்று நீ மிதிபட எந்த மீந்தனத்தில்
உனதான மிதப்பு?

உனக்குள் உறங்கும் மனசாட்சியே!
கனக்கும் உன் கனதியாக -நீ
சுவாசம் சரிக்கும் முன்னே முகிழும்
சகவாசம் உனதான பரிவிற்குள் ஏந்த எந்த
பச்சோந்திகளும் உன் பாதம் பார்க்கார்.

உனக்கான பருதி குன்றும்.இது
தனக்கானதாக ஏதும் விட்டம் வரையா
ஆரையை உந்தன் அகம் அருக்கியதால்
அழிவில் உன் அழிவில் எந்த
ஏற்பானும் உனை ஊக்கான்.

புரிதலை பதவி புறந்தள்ளும்-இது
உனதான தனி பாதையல்ல!
உலகில் ஈழ உலகில்
அரசென்னும் சிரசில் இத்துணை அழிவாற்றிய
அத்தனை அரக்கர்களும் ஆதித்த ஆற்றலது.
வரலாற்றில் அவர்கள் வற்றல்களையே தம்
சந்ததிக்கு சிந்தாக சிந்தினார்கள்.

விளைவு குருதி சிந்தும்
குவலயமாய் ஈழ நிலம்.எனினும்
தரிசாகிப் போயினதாய் தம்பட்டம் தட்டும்
சகட்டு மேனியரே!
செவிடன் காதில் சங்காய் உங்கள் சேந்தல்கள்.
நாளை மீண்டும் நுகை மிளிர,
மாண்டதெல்லாம் மெருகேந்தும்.
தோன்றும் தொய்வில்லா சோதிகள்-உந்தன்
மன்றத்தில் மெளனம் கலைக்கும்.

வலைப்பதிவு காப்பகம்