புதன், 17 பிப்ரவரி, 2010

அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.


ஒரு கரம்,
ஒரு கணம்,
திரும்பவும் தரிசனம்.
திகைப்பெழுதும் திமிர்த்தனம்.
வரும் வரை விழித்திரு,
வழியெலாம் முட்புதர்.

முற்றம்!
எப்போதும் தானா வளர்ந்ததில்லை.
முகமெழுதும் வயற் கட்டும்
தனியாக விளைவதில்லை.
பூத்திருக்கும் பூங்கா வனம்
பூமியில் உழைப்பின்றி
உதித்ததில்லை.

ரணங்கள்,
வலிகள்,
மாபெரும் இரத்த ஆறுகள்,
மனிதரின் மகத்தான
உரத்திறனால் எழுந்தவைகள்-இதில்
எதுவுமே ஏற்றம் இழைய
இழந்தவைகள் ஏராளம்.

இழப்புக்கள் தான்-
உதிப்பனவுகளிற்கு உந்து சக்தி.
தோல்விகளின் தோரணமே-
வெற்றிகளின் படிமானம்.

மீண்டும் முழைக்காதென,
வேரோடு அழிந்தவைகளும்,
வேகம் முதிர்த்து எழுந்ததுண்டு.
பதினேழு தடவை கயனி முகமது-
படை எடுத்து வென்றதுவும் வரலாறு.
பல ஒட்டு குழுக்களால் வலை திரித்து,
நிமிர்ந்ததுவும் எங்கள் வரலாறு.இன்று
ஏதும் அற்றதாக எல்லாமே அழிந்ததாக -ஆம்
ஏன் எரிந்ததாகவும்,

ஆயினும்!
எரிவிலும்,முற்றான அழிவிலும்
தோன்றாமல் தோய்வெழுதாது எங்கள்
தேசியம்,
களம் இன்று கனதி அற்றதாயினும்-
தளம் தரமேறும்,
விதைத்த உடன் எதுவும் விழையாது.
எரிந்த நிலம்,உழக்கிய மண்
பிய்த்த பிசிறிய கோலம்-கொஞ்ச காலம்
நிதானிக்க தானம் தேவை.

எனினும் எங்கோ உறுதி,
ஒன்று இதற்கான காய் நகர்த்தலில்,
அருவமாக,நாள் நகர உருவகமாக
உதிக்கும்-அது ஓர்மத்தின்,வீழ்ந்த வடுக்களை
மீள்,சுய மீளாக்கத்தால் மிடுக்கேற்றும்.
சோழ ராச்சியத்தின் தொப்பிள்கள் தொட்டில் கட்டும்.
வளி ஒன்று வகையாக்கும் அந்த வல்லோனின்,
விழியசைவில் வழி திறக்கும்.

வெறும் நம்பிக்கையில்,
வெற்றான எதிர்பார்ப்பில்,இது அசைவியக்காது.
வியாபங்கள் வித்தியாசமானவை.
விசுவரூபங்கள் இப்போதும் அவை மொய்யாது.
கால ஓட்டங்களில் இவையும்
பெரும் ரூபம் தரிக்கும்.ஈழ விடுதலையாய்.-
அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்