சனி, 1 ஆகஸ்ட், 2009

விடியலற்று போனதை எந்த விந்தில் வினையாற்ற???


ஊற்றெடுக்கும்
ஊர் நினைவு-என்னை
பெற்றெடுத்த முற்ற நிலவு
நித்தம் என் உள்ளம் நைக்கும்-இந்த
நினைவுகளை கொல்லல் தகுமோ?

புலத்து வாழ்வில் என்ன புதுமை கொண்டோம்?-எம்
நிலத்து வாழ்வை நித்தம் ஒழித்து,என்
நெஞ்சை சுட்டு நீதி கேட்டு-அதன்
மஞ்சம் மரித்து விஞ்சும் மகிழ்வு.
நிலையா?
இல்லை நிகழ்வு.
தற்காலிகமான இந்த அகல்வு நித்தியமா?
நிச்சயமாய்.
அனிச்சையாகும் இந்த அகல்வு முகூர்த்தம் குறிக்கும்.

இது காலக் கோளில் நான் தரித்த தரிப்பு,
வேறில்லை,
என் நிலத்து வாழ்வை நித்தியம் கொள-எம்
நிலத்து மைந்தர் நீதி கேட்டு,
கோடிட்ட போர்ப் புலத்தில் நான்
வயலறுத்து புலர்ந்த வாழ்வு.

வைரியை என் வாகையர்கள்
வரையறுத்து,
நெருப்பெரிந்த என் வயலில்
வசந்தம் சந்தம் சாய
உருப்பெடுத்த என் ஒப்பற்ற
உத்தமர்களின்,
குருதியில் இங்கு செங்கம்பள வாழ்வு,
இந்த போலியான புல வாழ்வு.

நீதி இதுவா?
என் நேயம் இதுவா?
பொய்யின் பொய்கையிலே
பூத்திட்ட புனைகள் இவை,என்
மண்ணில் என் மறவர்களின் செங்குருதியின்
ஆற்றில் நான்
மனம் அரித்து மனசாட்சியை
வசதி கருதி கருக்கி,

ஐயகோ!
ஒரு இஞ்சி மண்ணிற்காய் என் அயலவனுடன்
ஆக்கிரோசித்த அற்ற ஆர்ப்புக்கள்,
என்
தாய் மண்ணை ஆரியன் ஆக்கிரமிக்க என்
நாட்டை விட்டு நான் நகர்ந்த
நர்த்தனம்,
உண்மையில்,
சத்தியத்தில் ஓர்
தரிப்பிருந்தால்,நானென்ன
நாமெல்லாம் நகர பிதாக்களை
நட்டாற்றில் கைவிட்ட கபோதிகள்,

இந்த இலட்சணத்தில் இனிமை கேட்கும்
இரக்கமற்ற இராட்சதகர்கள்,
வலிக்கும்
உண்மைகள்
வாரிசிற்காய்
எம்
வலம் ஈடு வைத்த வைரிகள்.

ஆம்
இன்றும், என்றும்
புலம் பெயர் தமிழர் நாம்
வெறும்
புரோகிதர்கள்,

அர்த்தமற்ற ஆயிலியத்தை
அறமென ஆகிக்கும் அயோக்கியர்கள்,
உற்ற துணை கொடா கயவர்கள்
தலைவனின் தர்மப் போரிற்கு
தாங்கும் தூண் தொடா தொலையர்கள்.

வீண் வாதம்
விதண்டாத வாதம்
வியப்பும் வீரியர்கள்---சொந்த
நாட்டிற்காக எந்த துரும்பையும் அசைக்கா
திராவிடரென திமிர் திரட்டும் அதைரியர்கள்,

ஆளுமையின் ஆலிங்கனத்தை
ஆதங்கமாய் ஆர்த்தெடுத்து,
தூளுமை துபிக்காத தூபிர்ரகள்,வெறும்
திண்ணைப் பேச்சு திரவியர்கள்,--நன்
நாட்டின்
நாளினிற்கு நாட் குறிக்க
நயம் ஞாயிக்கா
ஞாயிறுகள்,

திங்கள் நாமென செப்பும் செவிலியர்கள்-
எத்துணை
அதமம் இருந்தால்
இந்த
வையகத்தில் நாமும்
ஓர்
நாதியர்கள் என நாதர்சிக்கும்
நயம் இழைத்தோம்?

ஏ!
துரும்பிலும்
எளிய
புலத் தமிழ நீ நலிந்தென்ன?
நலம் வாழ்ந்தென்ன?
நாட்டிற்கும் நாம் குடி கொண்ட வீட்டிற்கும்,
விளக்கெரிக்கா வினையற்ற வித்தகனே?
விறும மகன்று வீரியமான
வினையாற்ற இனியென்ன விதைக்கப் போகின்றாய்?

எத்துணை
துணை இழந்தாய்?
உன் கொற்றத்து குடியிழந்தாயே,
உன் உற்றம்,சுற்றம்,முற்றத்து மல்லிகையின்
வாசம் வகை சூட்டிய அத்தனை
அகத்தாரையும்,
ஆதியோடந்தமாகவே?நீ
வீதி ஓடு விந்தகம் ஏற்ற உன்
விடியலற்று போனதை எந்த விந்தில் வினையாற்ற???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்