ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

பேரன்னைக்கு என் பெரு வணக்கம்.


அம்மா!
ஈழத் தாயே!
ஈடில்லா வீர
வேங்கையை பெற்றெடுத்த பெருந் தகையே!
காலமெலாம் கயமைகளால்-
ஞாலமிழந்த எம் ஞாயங்களை-
மீளெடுத்து எம்
கோலமெழுதிய கொற்றவனை
தந்தவளே!
ஈன்ற பொழுதை விட பெருமை பெற்றவளே!
உன் மைந்தன் உமக்காற்றிய
ஆழ்ந்த வியத்தகு வீரியங்கள்,
பெரு விழுதாய்,
புடை சூழ இயற்கையெய்தினாய்.

ஈழத் தாயே
போய் வருக,
நோயின் உபாதைகளின்
உத்திரத்திலிருந்து உறவறுத்து
செத்திலாள் இந்த சேந்தனை பெற்றவள் என்ற
பெரு நிறைவுடன் போய் வருக எம்
பெரு நிறை சூழ் தாயே.

உங்கள் ஆத்மங்கள் ஓய்வெழுதட்டும்..
ஆன்மா அழகியலாய் அமைதி பெறட்டும்.
திங்களாய் எம் வாசல் வந்தாய்-அம்மா
சிங்களனால் எம் இனம் பெற்ற இன்னல் தீர்க்கும்.
பொன் ஈழ வேந்தனை ஈன்றெடுக்க நீ வருவாய்.
நிச்சயம் நீ வருவாய்.
போய் வா எம் பொற்பாதமே.
பதமே.
பேரன்னைக்கு என் பெரு வணக்கம்.

திங்கள், 13 டிசம்பர், 2010


நேர் கொண்ட வார்த்தையும்,
நிமிர்வான
வாழ்வும்
தேர் கொள்ளும் உனை தோள் கொளும்.

பார் இந்த பாரில்
உனக்கான வாழ்வை
தோள் கொண்ட
தோழர்கள் யார்?

என்றும்,
மறைமுகத்திற்கு
அப்பாற்பட்வர்கள்-.

இன்று!
புல
வாழ்வில்
எத்தனை அறிவுரை ஆற்றும்
இந்த
முத்திலர்களை
புரிந்து கொள்.
முட்டாள்தனமாக
எத்தனையோ?
முத்திரையிடுவர்.
ஐயா
வினா மட்டும் வேண்டாம்?????

இவர்கள்
யாருமே
எம் நித்திலம் பகிரா பாவியர்கள் .---
அல்ல!
இவர்கள்
பவித்திரர்கள்

ஆம்!?
எமை!
காக்க!
அவதாரமெடுத்த
ஆரியர்கள்.

புத்தி கூறும்
புவித்திரர்கள்.

ஏய்!
முட்டாள்களே!
என்---?
தலைவனை விட
தரமெழுதும் த(ச)ரித்திரர்கள்
ஏற்றுக் கொள்.
மன்னிக்கவும்
நேரமாகுது

பூம்பாவை பாட
போ!
சோரம் போ!
பாடு
விடியும் காலையில்
தேசிய கீதம் பாடு.
அதையும்
சிங்களத்தில் பாடு.

இனி
உன் வாசலில்
திருவெண்பாவை+காப்பெல்லாம் விடுத்து
தேசிய கீதம் பாடு.
பாளி மொளியில் பாடு.
தமிழ்
விட்டு வடு.
இல்லை விடு.

மனிதா!
ஈனத் தமிழா!
இனி
மரம் நடும் வேளையில் அரச மரத்தை மட்டும்
தவிர்த்து விடாதே.
உன்
வீட்டு
முற்றத்தில்
அகதியாய்
மகிந்தையும்,மகிந்தாவும்.

அது சிறீலங்கா!
ஐரோப்பா அல்ல????????

செவ்வாய், 2 நவம்பர், 2010

ஞால சுற்றலில் ஞாயிறு வீழாது!


நெஞ்சமெலாம் நெருஞ்சி முள்ளாக,
இதயம் சுமக்கும் ரணம் சுமந்து,
உதயனை,எங்கள் இதயனை,
ஈழ விடுதலையை நெருப்பாக அல்லும்,
பகலும் ஈகத்தில் ஏந்தியவனின்-
நினைவு நாட்கள் நெருட -அவனை
ஆழமாக,நேசமாக,நெருப்பாக
இழைகளோட இதம் ஒற்றி!

தலைவனின் தாற்பாரிய புதல்வன்,
கலைகளை,மக்களை இணைப்பதில்
அலைகளாகி, நாதமாக ரீங்காரித்தவனை,
போராளிகளை போசிப்பதில் இனியனை,
மகளிரை மையப்படுத்தி கள உள்வாங்கல்களை
காத்திரமாகவே யோகித்தவனை,

ஈழ விடுதலையை மட்டுமே வாசித்தவனை,
தலைவனின் கட்டளைகளையே காற்றாக சுவாசித்தவனை,
அலை,அலையாக துயர் மேவினாலும்,
ஆளுமைகளையே தன் ஆவியாக ஆராதித்தவனை,
நேயமென்றால் என்னவென்பதை நேத்திரமாகவே
நோத்திரமாக்கிய எங்கள் தமிழ் செல்வனை!

உடலால் இழந்து,உள்ளத்தால் உயிர்ப்பித்து
ஆண்டு இன்றுடன் மூன்றாக -
கால வெள்ளத்தில் களங்கள் காத்திரமிழந்தாலும்,
கோல ஆட்டத்தில் கொலுக்கள் சரிந்தாலும்,
ஞால சுற்றலில் ஞாயிறு வீழாது .அதுவாகவே
பாலம் ஒன்றாக பாசமுடன் நினைவள்ளும்
ஈர இதயங்களின் இறுக்கமான நினைவுகள்
நாளும் பொழுதும் நித்திய செல்வனை
நித்திலத்தில் நினைவெழுதும்.

தமிழீழ காலக் கவிஞன்
ஐயா புதுவை பூச்சொரிந்தது போல்
நித்திய புன்னகை அழகன் நித்திலத்தில்
நினைவழியாமல் வாழ்வான்.
இவன் ஓங்காரமாக ஒற்றிய தாகம்
எமை இவன் வழித்தடம் மாறாமல்
ஒற்றி நடத்தும்.

பூத்த உன் புன்னகை இப் புவி உள்ளவரை,
பொலிவிழக்காது.
நீத்தது நீதானென எம் உள்ளமதுவும் ஏற்காது.
நீலியர்களின் நீசங்கள் நெடுநாள் தாங்காது.நேசமுள்ள
நேயங்கள் விடை தெறிக்க நாள் கூடும்.
நயந்திருப்போம் நாள் வரும் நெகிழ்ந்திருப்போம்.
நேசனே.
நினைவழியா நாம் நின் பாதையில்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நானிலம் நிறைந்த நல்லவர் ஒளிர்வார்.


காலக் கடவுளரால் கனதியாக படைத்து,
வைத்த பாமரத்தனங்கள்.
பாரில்-
பார்ப்பனமெழுதும் ஈனத் தனங்கள்-
ஈற்றில் இரவல்
தாயகம் தேடி
ஒளிந்தே ஓயும்.

இது
காலக் கட்டளையாய்
ஓலம் தறித்து உரமாகும்-நாளை
பார் என் நாயகனே-இது
வீர்ர்கள் விதைந்த விளை நிலம்.
வியப்பெழுத உலகம்
விரிந்தொரு தருணம்
வினையாகும்.

கட்டமைப்புக்கள் களைந்ததாய்-
கனதி படைத்த கயவர் நிலம்
களேபரம் சூடும்.
நிலவரம் பார்க்க-
நீயிருப்பியா அன்றி நானிருப்பேனா எம்
நிலமிருக்கும் –இந்த
நிழல் சூட எம் நாயகரிருப்பார்-
நானிலம் நிறைந்த நல்லவர் ஒளிர்வார்.

ஈழக் கடனொதுக்கம் நிறைவாக
ஈடு செய்யப்படும்.
துலாம்பாரமாய் இது துகிலெழுதும்.
ஈடாட்டமற்றதாய் ஈற்றில் ஈழம்.
எங்கள்
ஈசனின் வழிகாட்டல் மடலெழுதும்.அது
தமிழீழ தாயகத்தை தாலாட்டும்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.


எங்கோ ஒரு நுகர்வு என் தளம் மேயும்.
சங்கேதமேதுமின்றி அது சாளரம் திறக்கும்.
பங்கமேது இல்லாததாய் அது பாசுரம் பாடும்.
அங்கம்,
அந்த அங்கம் அது போதும் எனக்கு -என்
ஆக்கம் தேக்கமது தவிர்க்கும்.
பூக்கும், அது-
பூக்கும் தொடர் பூபாளம் இசைக்கும்.
உனக்கும் அந்த நெருக்கம் உளமாலை சூடும்.அதை
வனப்பம் ஏற்று வாசல் வசந்தம் ஊ(கூ)டும்.

சிந்தனை செய்யென்றால் நிந்தனை செய்வோரே!
வந்தனை வாசம் பெற வாயிலை திறக்காரே!
நிந்தன் நியம் நியமம் ஊற சுய ஊக்கம் ஆய்ந்தீரா?
பந்தமது பரப்பெழுத பண்பலை வாசித்தீரா?

சொந்தமது சொத்தல்ல என்று சித்தமது நிறைத்தீரா?
மந்தமான மனக் கணக்கில் மணிக்கணக்கில் சீராய்ந்தீரா? -
உந்தனது குணக் குன்றில் என்ன வன(ள)ம் யாசித்தீர்?
மைந்தன் -எங்கள் வைகுந்தன்-
எம் மண்ணென்ற மாதவத்தை மறந்தீரோ? -நாளை
உன் மண்ணே உனை மற(று)க்கும் யாதகத்தை மறுதலிப்பீரா?.

எங்கோ ஒரு நுகர்வு என் தகம் ஆசிக்கும்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே!


எண்ண அலைகளில் என்றும்,
திண்ணமாய் திறனெடுத்து,
எண்ணாக் காரியத்தை எளிதாக்கி,
எரித்த ஏந்தல் நீ-
வரலாறு!
உன்னை என்றும் வரிந்து வகைத்திருக்கும்.

ஆடு,மாடு,பொன்,பொருளென,
ஓடித் திரிந்த எம் முற்றத்தில்,
நீ!
தேடியதுவும்,தெரிவெழுதி தேற்றியதுவும்,
விடியலின் முகவரியென முத்தாய்ப்பாய்.
சொல்லாமல் செயலாக்கமாக்கிய செவிலியனே!
உன் வைராக்கியத்தில் எந்த-
வரிகள் பொருதும்?இல்லை பொருந்தும்?

பாடு பொருள் இதுதானென,
ஊடு கூடி தேடும் உன் தெரிவில்,
எத்துணை உறுதி?
பேடு தேடும் தருணங்களில் உன் அகவை.
ஆனால் இந்த அகவையில் உன்-
ஆரோக்கியமான சிந்தனையில் உன்
கருக்கள் சீலமாக தக்கவைத்து!
உருவான உறுதியில் பிரபாகரனின் பிரமத்தை,
பிறழாமல் பின்பற்றிய பிதாமகன் நீ.

விழுப்புண் ஏந்தி!
அந்த விகாரமான பொழுதுகளிலும்- நீ
உதிர்த்தது தம்பி எனும் திருப் பெயர்.
உதிராத பிரமாணம்,
நெஞ்சகத்தில் நெருப்பாக,
நெகிழ்வெழுதிப் போனவனே!

வீரனே!
செல்லக்கிளி அம்மானான தீரனே!
ஞாலத்தில் எங்களின் நாயம் பிறக்க தீயான தீபமே!
ஒப்பாரிகளின் முதுகில்,
ஓர்மம் ஒட்டிய சிங்கள கிங்காதரர்களின் சிம்ம
சொப்பனம் நீ.

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே
காலம் எமதாக்க கரந்தடியில் கலந்தாயோ!
வித்தாகி விழுதெறிந்த சித்திலனே!
முத்தாகும் எங்கள் முழு நிலம் ஒரு நாள்
சொத்தாகும் வரை சோர்வகற்றி
நித்திலத்தில் உங்களின் நினைவுகளுடன்
நெடும் பயணம் போகின்றோம்.
உங்களின் சத்தியக் கனவை அகத்தில் ஆழப்படித்தபடி.

செல்லக்கிளி அம்மானின் வீர நினைவு சுமந்து!
தமிழீழ விடுதலை வரலாற்றில் பெரும் பதிவில்-
வெல்ல வழி வகுத்த திருநெல்வேலி
கண்ணி வெடி தாக்குதலில் களப்பலியான
"மாவீரன்" சதாசிவம்-செல்வநாயகம் நினைவாக
இந்த நிழல் பதிவு.


வியாழன், 8 ஜூலை, 2010

அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்!


ஏந்திய கருவியை ஏலம் வைத்தான்-இவன்
எல்லோரையுமே சிதைக்க வைத்தான்.
சிந்திய இரத்தமது கொஞ்சமா?ஈழ
சிந்துகள் அழிந்தது இவன் வஞ்சமே.

உறவாடிக் கெடுத்த ஊழியன்- இவன்.
நவீன எட்டப்பர் கூட்டத்தின் நயவஞ்சகன்.
அறம் கொன்றது போதாதென்று,
இன்று -
வெறி
நட(ன)மாடுகின்றான்.தமிழர் குருதியில்-
ஆரியர் வீ(வி)தியில்.

ஆடு தாண்டவா ஆடு -ஆடு
கூட தாண்டும் நீ கூத்தாடு.
பேடு ஆன பேமாளி நீ-
பெருமை கொள்வாயா கோமாளி?

நாடு தாங்குமா உன் நர்த்தனம்?எந்த
நாவும் உனையே அர்ச்சனம்.
பீடு பிறழும் பிறப்பேந்தி-உன்
பீடம் யாவுமே இறப்பேந்தி.

பொழுது வருமே தன்னாலே அதை
உழுது கொள்வாயே உன்னாலே,
அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்-அது
விழுது எழுதும் வித்தகம்.

திங்கள், 5 ஜூலை, 2010

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?


ஈகையின் இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர் நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர்
பாதமான பாதை அழிக்க,
உம்மை
புடம் போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!

-நீவர்
தொட்ட பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,
உருமறைத்து,
உளம் செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க கரும்புலியமான
கார்த்திகர்களே!

இன்று உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர் தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்
செருக்காய் குடியிருந்த பெருநாளா?
அஃதன்றி-
அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்
உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய் நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?
செத்திருந்த தமிழினத்தை உயிர்த்தெழ வைத்த
வேதியர் நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர் பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்
மெட்டுக்கள் என்றும்
அணைந்து விடா கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம் வரைபுகள் வகையெழுதும்.

தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-

இன்று ஓர் பாரிய இடைவெளியில்-
ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,சந்தடியகற்றி சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும் நாளுடன் -உன்
செந்தமிழாணை கலந்து.

பொதுமை வேணி நீர் ஏந்திய சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,தமிழுணர்வின்,
இல்லை
தாயக விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,
ஏன்!
எல்லாவற்றிற்கும் மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும் இடிபடாமல்
விடுதலை உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய் என்றும் எம் நினைவில்.

சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல சங்கதிகளுடன்
சஞ்சரிக்கும் நாள் கூடும்.

சனி, 3 ஜூலை, 2010

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.


இந்த
வக்கிரம் வகைத்தவரா -உன்
உத்திரம் வகுப்பார்?
முத்திரமான எங்கள் சத்திரியர்களின்
சித்திரம் பார்.

எத்திரை வந்தபோதும்,
பத்தரையான பவித்திரர்கள்.
விதித்திரை விண்ட வீரியர்கள்-அவர்
தேசத்திற்காய்
வீரச் சமர் கொண்டவர்கள்,அவரைக்
கொன்ற பின்னும் சேடம் வரையும்-
ஆரியத் தரை அகம் ஆய்ந்தாயா?

தினமும்,
வன்மையாய் முகம் மறைக்கும்-
மூர்க்கம் காண்.
வெறும் தரை வழிப்பாதையில்,
பார்வை வேண்டாம்.
புனர் வாழ்விற்கு வகையில்லை,இவர்
அபிவிருத்தியென்று எதை ஆய்கின்றார்?

அடுத்த வேளை கஞ்சிக்கு அதரம் அற்று,
படுத்த வேளை கிஞ்சிதமாய் கிராகதர்கள் கிள்ளும்-
இராணுவ சக்கரம் எந்த சதங்கை கட்டும்?
புராணம் பாடும் புலமே உன் உலவலிற்காய்,
உறுப்பறுத்து உசாவல் நலமென்னும் நர்த்தனம் அறு.

வெறும் வெளிகள் உள்ளம் உலவாது.
ஊடுகள் உணர சிலாகி.
தாறு மாறாய் தடம் புரண்ட தமிழ் நிலம்.
ஊறு கொடுத்த தேறுகள் தேச வீதியெங்கும்.

ஆனால் நீவிரோ!
வெற்றுக் காட்சியில் வேகம் கரைத்து,
எம் வேதம் மறைத்து,
இப்படியா உரைப்பாய்?
உல்லாச பயணத்திற்காய் உன் உறுப்பமைக்கும்
சல்லாபத்திற்காகவா?
சவக்காடானது எம் தேசம்?

சுய நல சூத்திரர்களே!
நலமானதாய் நாடு என-
நா ஒளித்து நடுகல் நடாதே.
நீதி,நியம் ஒளித்து எதையும் ஒவ்வாதே.
எதையும் நாட்டிற்காய் ஒப்பாத சுயமே!

உன்-
சுவடனைத்தும் பாவியர்கள் பாதம்.
பதகழித்து பாகை சரித்து பல்லாயிரமாய்-
பாடை விரித்தவர் தடமது.
பரணியிலும் பரவும் பதமது.

உன் சாவால் கூட மறக்க முடியாத,கூடாத
மனக் காயமது.
சொகுசு பேரூந்து பிரயாணத்திற்காய் எம்
தேசப் புதல்வர்கள் பிராணன் விடவில்லை.
அன்று எரிந்தது அவர் களம்-நாளை
அது உன் மனையின் மீதும் பெ(ம)ருகும்.
மறக்காதே நிச்சயம் இதுவும்-!

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.
அது பணமாக,கருவியாக,படைபலமாக
பலவித முகம் கொள்ளும்-அற்ற போதே
அத்தனையும் அடிவருடும்.அதுதான்
இன்று சிறீலங்காவில் ஆரியக் கடைவிரிப்பு.
ஈழத்-
தமிழரின் அவலச் சரிவு.

ஆக மீண்டும் பலம் கறுக்க
கே.பி யின் கேனத்தனம்,கோத்தாவுடன்
கோமயம்.
புலமே சுதாகரிக்கும் சுயம் வேண்டும்.அன்றேல்
ஆதியுடன் அந்தமாக அத்தனையும்
கதி அதோ கதிதான்.
அரசியலையும் ஆத்தமார்த்தாமாய் அகம் கொள்.
தூரத்துப் பச்சை பசுமையே இல்லை.

செவ்வாய், 29 ஜூன், 2010

செவ்வரத்தம் பூவில்!


செவ்வரத்தம் பூவில்-
எவ்விரத்தம் பார்க்க அது
இவ்வளவு சிகப்பாக?
-உன்
இரத்தம் சீராக்க இதுவும் ஓர்
மார்க்கமே.

ஆம்!
இதில் மருத்துவ குணம்
நிறைவே.
உண்டவர்களும்,அதன்
நிலையை அறிந்தவர்களும்
கூறும் அறிவுரை.

பசுந்தலாக அரைத்து உண்ண
பறக்குமாம் பல நோய்கள்.
பச்சையாக உண்ணுதல்,
பலா,பலன்கள் நிறையவே.

இதய நோய்க்கு இதமான மருந்து.
மார்பு வலியுள்ளவர்கள் பூவை,
நீரில் இட்டு கொதிக்க வைத்து,
காலையும் மாலையும் அருந்திவர-
நிவாரணம் காணலாம் ரணமகற்றி.

தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இன்னமும் இதன் சிறப்பை.
செம்பருத்தி பூவா?செவ்விரத்தப் பூவா?

ஞாயிறு, 27 ஜூன், 2010

சுற்றமே உனை சுதாகரித்து,


பேசுவது பெருமை,
பூசுவது (திரு)நீறு,
மாசுவது மனதில்,
கூசுவது உறவில்,

நீசுவது புலவில்,
காசு அது கலப்பில்,
தூசு என நினைத்து,
வீசுவது சரியா?

தூது அது துலைவில்,
மாது அது கனவில்,
தாது உனை குழப்ப,
மீது எது மீதம்?

வாது எது நிலையில்,
கூதுவது குலவில்,
பாசுவது பரணில்,
பேச வரும் பரப்பில்.

பேசு அது தமிழ?
பேரம் எது உறவோ?
இறைஞ்சி அது இந்து.
மிஞ்சியது எது?ஏந்த.

துஞ்சிய போதே-
தூக்கம் அது!
கலைத்திருந்தால்,
விஞ்சியதுவும்,மிஞ்சியதுவும்
மீதம் மிதந்திருக்கும்.

புரிந்தால்!
பதிவெழுது,இல்லையேல்
பசப்பெழுது.
வதி களை(லை)ந்த முகப்பெழுத-
பதிவேது பாடுபட?!

வரிந்ததுவும்,வகைத்ததுவும்,
பரிவெழுதும்.
பாதை பார்.
முகாரியின் முகவரியில்,
முத்தாய்பேதும் முடிவுறா?

பற்றுமே உனை பதகழித்து,
கரித்ததுவோ உந்தன் உசா தொலைத்து?
குற்றமே எனினும் இது-
உன்-
முற்றமே.
மறந்தும்,மறைத்தும் விடாதே.

திங்கள், 14 ஜூன், 2010

தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.


பாதாளம் வரையுன் பாதம் படியும்.
பரமனென்றுன்னை பரணியே பாடும்.
தெரிவான எந்த செல்வத்திலும்,பொழிவான போக்கு நீ-
இதனால்தான்-
எந்த தெரிவிலும் முதன்மையாக நீ.
எல்லா அசைவின் இசைவு நீ.

புவியில் நீ இல்லா இடமோ,வழியோ இல்லை.
இப்பொதெல்லாம் உன் அமைவு அரூபமாக,
வெறும் அட்டையில் உன் காத்திரமான அமர்வு.
மின் காந்த ஒளிர்வில் உன் ஓங்காரம்.
"ஓ"மென்ற மந்திரத்தை விட வலிமை நீ.
"ஓம்"இதற்கு உள்ளக வலிமை உண்டோ?இல்லையோ?

உனக்கு உள்ள வலிமை ஊரெல்லாம் வலியாய்,
உன்னால் பெற்றவளை தவிர்த்து மற்றெல்லாம்-
கொள் முதலாக்கலாம் என்பர் பலர்-ஆம்
மறுதலிக்கவே முடியாத "மா" செல்வம்-நீ
அதனால்தான் என்னவோ நீ இருக்க வேண்டிய-இடம் தவிர்த்து-
உலக மயமெல்லாம் உறுதியாய் இருக்கின்றாய்.
நீ கைமாறும் போதினெல்லாம் உரிமைகள் எல்லாம்,களம் மாறுகின்றது.
முள்ளியவளை கொடுந் துயரத்திலும் உன்-கொடிய பங்கு நெடியது.
உன்னை படைத்தவன்தான் கடவுளரையும் படைத்தான்.

உன் இருப்பில் ஏந்த எந்த கருவிகளும் இல்லை.
உன்னை சுற்றி எந்த தோத்திரமும் இல்லை.
பாலாபிசேகம் முதல் பூச்சூடும் புன்னங்கள் இல்லை.
ஏன் உனக்கு கருவறை கட்டி காப்பு சாத்தும் களேபரம்கூட இல்லை.
உனக்கு நேர்த்தி வைத்து நேருவோரும் இல்லை.ஆனால்
உன்னையே நேர்த்தியாக்கும் சூத்திரம்-
உன்னால்உனக்கே ஆன பாத்திரம் உண்டு.

நீ வசமாக வேண்டுமென்று எள்ளெரிப்போரும்,
சனிக் கிரகத்தின் சாளரத்தினால் நீ தன் வீட்டு,சாளரம் ஏக!
உனை கைக்கொள்ள,சாத்தியமானதாக எண்ணி,
கருவறை கற்களை உன் காத்திரத்தால் முழுக வைக்க,
கடன் வேண்டி கற்பூரம் காட்டும்,காட்சியில் உன் பாகம்!
முகப்பு நீதான் என முகரும் போதே உனை கருப்பெரிப்போர்-கனருண்டு.
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை,மட்டுமா வளர்த்தாய்?

அத்துடன்-
அறியாமை,தெரியாமை,தெளியாமை,கல்லாமை,
கற்றதை கைக்கொள்ளாமை, பேராண்மை
என்ற போர்வையில் பேராசை,
இன்ன பிற ஆசைகளின்,ஆமைகளின்- ஆசானே!

உன் உடன் இருப்பிற்காய்!உலக வலத்தில்
உறுப்பறுக்கும் உரிமையை என்று
கனதி குறைப்பாயோ? அன்றே மனிதமும் மானிடம் சூடும்.
யாரில்லா போதும் இயங்கும் பிரபஞ்சம்-இனி
என்றுமே நீயின்றி அசையா வரம் பெற்றாய் வாழி.

நேரம் இருக்கும் போது என் வீட்டு முற்றத்திலும்,
கொஞ்சூண்டு கொஞ்சம் ஓய்வெடு -
நானும்உன்னை நாணயமகற்றி "நா"நயமகற்றி,
நாலு நாட்கள் சுவாசிக்க வாசிக்க.
இதற்கும் நோ்த்தி வைக்க வேண்டுமென்றால்-
என் வாசலும்,வாசமும் ஏகாதே.

உடலில் வலுவும்,உள்ளத்தில் தெளிவும்,
பகுத்தறிவில் பாதையும் உண்டு .
எனவேஎன் வேர்வையின் துளிகளால் உன்னை
வேண்டியவரை வரை கொள்வேன்.
ஏந்த அர்த்தமற்ற ஆமைகளும்,ஆசைகளும் எனை அண்டாமல்,
அந்த தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.

வியாழன், 10 ஜூன், 2010

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.


சரியாசனம் சாசனமாகாததால்,
புரியாசனம் புதைக்கப்பட்டதால்,
எரியாசனமாய் எழுதப்பட்டு-அந்த
உரியாசனம் உதிர்ந்தே போகுமா?

கரியாசனம் காட்டும்-ஆள
நிலக் கரியாசனமாய் நாளை-
அது தோன்றும் போதினிலே அதன்
வரியாசனம் வைடூரியமாய் மிளிரும்.

"தெரியா"(ஆ)சனம்,தெரியாத்தனம்
"வரியா"(ஆ)சனம் வரியாத்தனம்
வெறியாசனம் இலங்கும் சிங்களனால்,
கறையாசனமாய் இன்று புதைகுழியில்-ஆனால்

இவை யாவும்!
கரையாசனமாய் கனதி அள்ளும்-புவி
நிரையாசனமாய் எங்கள் மேனி தளிர
விபராசனமாய் விதி கீறும்-அன்று புரியும்
அவர் வரித்த புதியாசனம்.

பெளதீகாசனம் பகரும் பதிமுறை புரிவீரோ?-அந்த
பெளத்தாசனம் பயிற்றும் பாடையாசனம்-என்றோ அன்றி
பகுத்தாசனமாய் பரணியில் மறுதாக்காசனம் மரபெழுதும்
விகுத்தாசனம் நிச்சயம் எங்கள் வீரம் ஏற்கும் "விகுதா"(ஆ)சனமாய்-இது

"மா"வீராசனத்தின் மேல் நின்ற மெளன சாசனம்-எல்லா
"சா"ச(க)னத்தையும் எகிற்றி ஏறேறுமாசனமாய்-தமிழாசனம்
தரணாசனத்தில் தன் தகு சாசனம்!
தர்மாசனமாய்
சினையாசனம் சிறப்பேந்தும் சீர்காணீர்.

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.


பாதிக்கப்பட்ட பாவிகளின் பரந்த நன்றிகள்.

தென்னிந்திய திரைப்பட கர்த்தாக்களிற்கு!
வன்னி மண் தின்ற வணங்கா மக்களின்
வந்தனை கூறும் நன்றிகள்.

ஈழத் தமிழரின் இதயம் தின்ற,
பாழும் சிங்கள பாவிகள் தங்கள்-
மன அழுக்கின் மகத்துவம் கலைக்க-
இனமானம் சுமந்து ஈர்ப்புடன் இலங்கி
இலங்கையில் இன்றுவரை நெடுத்த,
ஐ.ஐ.பா விழாவை வாகையுடன்-
தோல்வியுற செய்த செம்மல்களே!

ஈழத் தமிழினம்!
நாளும்,பொழுதும் நலிந்து,
வலி சுமந்து மாளாத் துயர் பருக,
சிறீலங்கா ஆரியன் ஆதங்கித்து மகிழ,
எந்த விதி வரைந்தானோ -அதை
சிந்தையில் சிதைத்து சீரிய அடி கொடுத்த,
சிங்காரத் தமிழுணர்வுடன்-
திண்மையாய் முன்னெடுத்து,
எங்களின் கரம் பற்றி ஏங்கும்-
தமிழ் மனம் சுரக்க ஏந்திய,
ஊடகமாம் சினிமாத் திரையுலகினர்க்கு,
தமிழீழ மக்கள் சார்பாய்!
புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.

மங்காத வடுவிருக்க,
மனமெல்லாம் சினமிருக்க,
தினவெடுத்து சினையீன சிங்களம்
வினையிட,
பொங்காத தமிழனாய் பொறுப்பறுக்க நினைத்தீரா?-எங்கள்
தொப்பிள் கொடியுறவை கொக்கென்று நினைத்தீரா?

சனி, 5 ஜூன், 2010

ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!


பூத்திருந்தாய் எங்கள் புவனத்தில்,
புனித விடுதலை ஒன்றையே யாத்திருந்தாய்.
புத்த நித்தியம் எங்களிற்கு விதைத்த-
சித்த வைத்தியத்தையே சீர்-
தூக்கியிருந்தாய்.

அதனால்!
அவர்தம் ஆயிலியங்களை களைய,
தூக்கினாய் கருவி-அது
எம்!
ஆயுத எழுத்தாக,
அதையே விடுதலை-
எழுத்தாணியாய் ஏற்றவனே!
பாயும் பொழுதிற்காய் உன்னையே பதித்திருந்தாய்.
சாயும் நிலை வரினும் சிங்களன் கையில்
சாயாத கலையல்லவோ காத்திரமாய்-
உன்-
காயாத கனவது.

புறச்சூழல் உனை புரியாத பொழுதாய்,
உறவுகள் உனை அரவணைக்கா கணமாய்,
உன் கண்ணியமான,கடப்பாடு,
திண்மையான செயற்பாடு,
உண்மையான யோகமாக உணரும் பொழுதில்!

நீ!
சத்திய வேள்வியாய்
தமிழீழ மண்ணில் சாவால் சரித்திரம் எழுதி.
புண்ணியனே!
பிறப்புக்களின்
அர்த்தம் ஆரத் தழுவிய வித்தியனே!
விடியும் ஒவ்வொரு கணமும்,
உன் வீரம் சாற்றும் விகற்பத்தில்,
எம் விழி(ளி)ப்புக்கள் உமைத் தழுவும்.

சூழல்!
இன்று சூனியமாய் வரம்பு அள்ளியதாய்,
ஓரு பார்வை அவ்வளவே!
குருதிகள் சிந்தாத குதம் ஏதும் உண்டோ?
இது!
விடுதலை வேள்வி.இதில்
ஆகுதிகள் சாதாரணமான ரணம் சரிக்கா,
எல்லாமே!
இங்க அசாதாரண ஆயிலியம்
இத்தனையும் சுதந்திரம் விடுதலை என்ற பெருங்கனவின்-
இடுகுறி.

ஆம்:
சொல்லணத் துயரம் எம்
பூமிக்கு மட்டும் இல்லை எங்களின்
புதல்வர்களினதும்,
புனிதர்களும் மாவீரக் கனவெழுதும்.

எங்கள்-
தாயகத்தை சிதைத்து,
பிச்சு உதறி,சகலதுவும் பிணக்காடாய்!
வார்த்தைகளிற்குள் அடங்காத அட்டகாசம் அது.
மனிதம் தின்ற கோரத்தின் அரிச்சுவடியது.

இன்றும் அதன் தாரணங்கள் சூடிய வடுக்கள்
அனு தினமும் உள்ளம் அரித்து வெளிவரும்.

ஆயினும்!
புனிதனே உன் பாதம் ஆர்ந்து,அகோரணமாய்
உறுதி பூண்டோம்.
மலரும் தமிழீழத்திற்காய் நாம் மடி சுரப்போம்.
அந்த மகோன்னதம் மிளிரும்.
அரூவமான ஆத்தமங்கள் விழி விரிக்கும்.
விடியும் திசை எம்பால் ஒளிர,
உன் சத்திய வேள்வியின் வழியில்-
எம் வாசல் பூப் பூக்கும்.

சுதந்திரம்,
விடியல்,
எந்த இரத்த வடுவின்றியும்-
விடியாது.
விழி விரித்து,வழி பார்க்கும் பக்குவம் விகற்போம்.
வீழ்ந்தது எழுவதற்கே!
வேதம் படித்தோம்.
பாரில் உன் பாதை செழிக்கும்.
செந்தூரமாய் செந் தமிழீழம்.

வலைப்பதிவு காப்பகம்