திங்கள், 14 ஜூன், 2010

தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.


பாதாளம் வரையுன் பாதம் படியும்.
பரமனென்றுன்னை பரணியே பாடும்.
தெரிவான எந்த செல்வத்திலும்,பொழிவான போக்கு நீ-
இதனால்தான்-
எந்த தெரிவிலும் முதன்மையாக நீ.
எல்லா அசைவின் இசைவு நீ.

புவியில் நீ இல்லா இடமோ,வழியோ இல்லை.
இப்பொதெல்லாம் உன் அமைவு அரூபமாக,
வெறும் அட்டையில் உன் காத்திரமான அமர்வு.
மின் காந்த ஒளிர்வில் உன் ஓங்காரம்.
"ஓ"மென்ற மந்திரத்தை விட வலிமை நீ.
"ஓம்"இதற்கு உள்ளக வலிமை உண்டோ?இல்லையோ?

உனக்கு உள்ள வலிமை ஊரெல்லாம் வலியாய்,
உன்னால் பெற்றவளை தவிர்த்து மற்றெல்லாம்-
கொள் முதலாக்கலாம் என்பர் பலர்-ஆம்
மறுதலிக்கவே முடியாத "மா" செல்வம்-நீ
அதனால்தான் என்னவோ நீ இருக்க வேண்டிய-இடம் தவிர்த்து-
உலக மயமெல்லாம் உறுதியாய் இருக்கின்றாய்.
நீ கைமாறும் போதினெல்லாம் உரிமைகள் எல்லாம்,களம் மாறுகின்றது.
முள்ளியவளை கொடுந் துயரத்திலும் உன்-கொடிய பங்கு நெடியது.
உன்னை படைத்தவன்தான் கடவுளரையும் படைத்தான்.

உன் இருப்பில் ஏந்த எந்த கருவிகளும் இல்லை.
உன்னை சுற்றி எந்த தோத்திரமும் இல்லை.
பாலாபிசேகம் முதல் பூச்சூடும் புன்னங்கள் இல்லை.
ஏன் உனக்கு கருவறை கட்டி காப்பு சாத்தும் களேபரம்கூட இல்லை.
உனக்கு நேர்த்தி வைத்து நேருவோரும் இல்லை.ஆனால்
உன்னையே நேர்த்தியாக்கும் சூத்திரம்-
உன்னால்உனக்கே ஆன பாத்திரம் உண்டு.

நீ வசமாக வேண்டுமென்று எள்ளெரிப்போரும்,
சனிக் கிரகத்தின் சாளரத்தினால் நீ தன் வீட்டு,சாளரம் ஏக!
உனை கைக்கொள்ள,சாத்தியமானதாக எண்ணி,
கருவறை கற்களை உன் காத்திரத்தால் முழுக வைக்க,
கடன் வேண்டி கற்பூரம் காட்டும்,காட்சியில் உன் பாகம்!
முகப்பு நீதான் என முகரும் போதே உனை கருப்பெரிப்போர்-கனருண்டு.
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை,மட்டுமா வளர்த்தாய்?

அத்துடன்-
அறியாமை,தெரியாமை,தெளியாமை,கல்லாமை,
கற்றதை கைக்கொள்ளாமை, பேராண்மை
என்ற போர்வையில் பேராசை,
இன்ன பிற ஆசைகளின்,ஆமைகளின்- ஆசானே!

உன் உடன் இருப்பிற்காய்!உலக வலத்தில்
உறுப்பறுக்கும் உரிமையை என்று
கனதி குறைப்பாயோ? அன்றே மனிதமும் மானிடம் சூடும்.
யாரில்லா போதும் இயங்கும் பிரபஞ்சம்-இனி
என்றுமே நீயின்றி அசையா வரம் பெற்றாய் வாழி.

நேரம் இருக்கும் போது என் வீட்டு முற்றத்திலும்,
கொஞ்சூண்டு கொஞ்சம் ஓய்வெடு -
நானும்உன்னை நாணயமகற்றி "நா"நயமகற்றி,
நாலு நாட்கள் சுவாசிக்க வாசிக்க.
இதற்கும் நோ்த்தி வைக்க வேண்டுமென்றால்-
என் வாசலும்,வாசமும் ஏகாதே.

உடலில் வலுவும்,உள்ளத்தில் தெளிவும்,
பகுத்தறிவில் பாதையும் உண்டு .
எனவேஎன் வேர்வையின் துளிகளால் உன்னை
வேண்டியவரை வரை கொள்வேன்.
ஏந்த அர்த்தமற்ற ஆமைகளும்,ஆசைகளும் எனை அண்டாமல்,
அந்த தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்