திங்கள், 5 ஜூலை, 2010

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?


ஈகையின் இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர் நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர்
பாதமான பாதை அழிக்க,
உம்மை
புடம் போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!

-நீவர்
தொட்ட பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,
உருமறைத்து,
உளம் செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க கரும்புலியமான
கார்த்திகர்களே!

இன்று உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர் தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்
செருக்காய் குடியிருந்த பெருநாளா?
அஃதன்றி-
அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்
உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய் நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?
செத்திருந்த தமிழினத்தை உயிர்த்தெழ வைத்த
வேதியர் நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர் பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்
மெட்டுக்கள் என்றும்
அணைந்து விடா கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம் வரைபுகள் வகையெழுதும்.

தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-

இன்று ஓர் பாரிய இடைவெளியில்-
ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,சந்தடியகற்றி சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும் நாளுடன் -உன்
செந்தமிழாணை கலந்து.

பொதுமை வேணி நீர் ஏந்திய சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,தமிழுணர்வின்,
இல்லை
தாயக விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,
ஏன்!
எல்லாவற்றிற்கும் மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும் இடிபடாமல்
விடுதலை உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய் என்றும் எம் நினைவில்.

சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல சங்கதிகளுடன்
சஞ்சரிக்கும் நாள் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்