புதன், 4 டிசம்பர், 2013

எம் முற்றத்து முறக் கவிஞனே!
இன்று உனக்கு அகவை ஒன்று கூடும்
அரிய நாளாம்.
வாழ்த்தெழுதி உனை சேவிக்கும்
வரப்பில் எழும் அந்த இனிய பார்வையும்
நெகிழ்வும்
எனக்குள்
எனதான நினைவுப் பள்ளத்தாக்கில்
பெரும் பார,பாராத தழும்புகளாய்.

நிதம் நின் பாக்களையும்
பரவும் வரிகளையும்
மனக் கொண்டவன்.
ஆதலால் தமிழ் நிரவக் களை கொண்டவன்.
இப்படி எனைப்போல் எத்தனை பேரை
உளக் கொண்டவனே!

உலைக்கள வியாசனே!
கலை,பண்பாட்டுக் கழகத்தால்
களத்தையும்,தளத்தையும் மெருகேற்றி
உணர்வேற்றிய உலைக்களமே!

எங்குளாய்?
எப்படியுளாயோ?
யாமறியோம்
எனினும்
ஏடுகளிலும் எழுத்துக்களிலும்
நின் தகமையான தரிசனமாய்
என்றும் எம்முடன் வாழ்வாய்.

வரலாற்றில் நீ ஒரு பெருஞ் சுவடு.
அந்த தொடு தளத்தில்
நின் பேராண்மை.
தமிழுலகம் வாழும் வரை
வரையறையின்றி வாழ்வாய்.
வரும்
இளைய தலைமுறையின்
இடுகையான சுவட்டில் ஓர் பேரொளியாய்.

பெருஞ் சுடரே!
ஈழ அக்னிக் களத்தில்
தாழாமல் வேங்கைகளை சுரந்தவனே!
அரும்பாகிய பலரை
இரும்பாக்கிய
ஈகையே நின்
கருப் பொருளெல்லாம்
ஈழப் பிரவசத்திலென
வசமாகிய
வையகனே!

நிதம் சுவாசித்த தேசக் கந்தகக் காற்றின்
அலை வரிசையாகி,
ஆழப் புதைந்திருந்து ஆழ் மனதில்
என்றும் வல்ல பெருந் தீயாக
தென்றலின் சுகந்தத்துடன்
அழகாக என்றும் அனலாக!
ஈழ நேச நெஞ்சகங்களில்
குடியிருப்பாய்.

நினதான இந்த கம்பீரமும்,
மிடுக்கான,தெளிவான பார்வையும்
திசையெலாம் விசை எழுப்பிய
திடமான வரிகளும் நின் வாசம் பூசும்
இந்த பாரில் என்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்