வியாழன், 26 நவம்பர், 2009

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.


பூபாளம் புலரும்
பூமிப் பந்து மெல்ல அசையும்
புள்ளினங்களும் மெல்லிசை இசைக்கும்
நீர்ப் பரப்பெங்கும் நெகிழும்
ஆலோலம் பாடும் செடி,கொடி,மரங்களெல்லாம்
ஆலிங்கனமாய் ஆரோகணிக்கும்,
வான் பரப்பை மென் முகில் வையப் பரப்பெங்கும்
நெகிழ்த்தி பரவசமாய் பாவும்.
இந்த இயற்கையின் இந்த பரப்பளையும் முகையை
பரவசப்படுத்த பகலவனின் பார்வையே முகாந்திரம்
முகிழ்த்த மூல காரணம்.

சூரியனற்ற பூமிப் பந்தை
யாராலும் கற்பனையிலாவது காணமுடியுமா?
ஆதவனில்லா அவனியை அகப்படுத்த முடியுமா?
மேய்ப்பானில்லா மேனியர் மேதினியில் மேன்மை கொள்ளல்
மேய்ந்தவர்கள் காண்டீரா?
ஆலிங்கனமற்ற ஆனந்தம் அவனியில் ஆர்ப்பதுண்டோ?
ஆயிழையாள் அற்ற அறமெங்கும் உண்டோ?
அவர் தம் மழலை இன்றி அரனேதும் உண்டோ?

இத்தனைக்கும் மூலம்
ஆதவனெனறால் மறுப்போர்தான் உண்டோ?
இதைவிட வலிமை உள்ள வையவர் யாரும் யாண்டால்
பூமிப் பந்தே புவனத்தில் பூண்டே.
இத்தனை மகிமையின் மையலை ஒத்தவன்
ஈழத் தமிழர்க்கு இளையோன் எங்கள்
கிழக்கின் கீர்த்தனன் வல்வை மண் ஈன்ற
மைந்தன் ஈழ வேந்தல் பிரபாகரன் தவிர வேதம் உண்டோ?

தமிழ் இலக்கியத்திற்குள் அடங்கா இலக்கணமவன்,
ஈழ விடுதலைக்காகவே அவதரித்தவன்,ஈழ வானின்
பகலவன்,பகைவர்க்கு சிம்ம சொப்பனவன்,பாங்கானவன்
தமிழீழ விடுதலை வேட்கை பூத்தவர்க்கு பா“ அவன்
எழுத,எழுத இனியவன்,பகை பரப்பளந்தவன் பாரில்
பூக்கும் புவன தமிழீழ கட்டுமானத்தின் கரை கடைத்தவன்:

ஆதலால்தான்
அயலவர்க்கு அமுதமானவன் அவர்தம் ஆளுமையில்
பெரும் வீச்சேந்திய அசகாய நர்த்தனம் நாட்டினான்.
இவ்வளவு கட்டுமானங்களின் ஒப்பீட்டளவற்ற ஓங்கார நாயகனின்
ஒவ்வோர் அசைவிலும் கட்டுண்ட காத்திர நாயகர்கள்தான்
எத்தனை பேர்,
அத்தனையும் எங்கள் மாவீரச் செல்வங்கள் என்றால் மிகை ஏது?
இதில் வகை என்று வேறுண்டா?

விடியல் ஒன்றே இலக்கு
ஈழம் விடியும் இமாலய நாயகனின் பெயர் உச்சரித்து
எம் பூமியை புனிதமாக்கிய சரித்திர நாயகர்களே!
உங்களின் தியாகத்தை எந்த மொழிகளிற்குள்ளும் கட்டி,
அவை
சொரியமுடியாது.
ஆம் இதுதான் யதார்த்தம்.

தமிழினம் என்றால் அது தலைவன் பிரபாகரன் பெயரின்றி
அசைவை ஆர்க்காது.
உதிக்கும் திசை பார்க்கும் எம் உத்தமர்காள்.
ஆதவன் யார் சொல்லி ஆழிக் கரை ஏகுவான்.
இடம்,
பொருள்,
ஏவல்,
காலப் புற யதார்த்தம்,
இத்தனையையும் அறியும் ஞானம் படைத்தவன்
ஈழ ஞாயம் அறிவித்தவன்,
அவனறியா கால,நேரம் யாதும்
உண்டோ?
ஆகவே என் இனிய ஈழ தேசத்துறவுகளே!

எங்கள் அன்னையிலும் மேலான பூமிப் புதல்வர்களாம்
எம் மாவீரர்களை நெஞ்சார அவர்கட்கு புனிதமான
வீராஞ்சலி மானசீகமாக மைத்து வீர சபதம் செய்வவோம்
வாருங்கள் அணி,அணியாய்,
இன்று நாம் பேரணியாய் செலுத்தும் பேராண்மையான அஞ்சலிதான்,
எம் பேராளனாம் அண்ணன்,பெருந்தலைவன் பிரபாகரனிற்கு கூறும்
பிறந்த நாள் நற் செய்தி ஆகும்.

நெஞ்சம் கலங்குமா?
நினைவு சிதையுமா?
துஞ்சும் கோலத்தை தூமணி துய்க்குமா?
இல்லை!
கலங்கும் நாளல்ல,
காத்திரமான,நேர்த்திணை நீட்சிக்கும்
நேரிய நாள் பூத்திருப்போம்!
புது வாழ்வு புலவ யாத்திருப்போம்.
ஒப்பாரும்,மிக்காரும் அற்ற பெருந் தலைவனின் வீர --
வரலாற்றிற்கு வித்திட்ட இந்த வீரிய நாளில்
எம் ஆயங்களை அகன்றெடுப்போமென சித்திக்கும் சித்தம் கொள்வோம்.

கால நேரம் சித்திக்க கதிரவன் ஒளிர்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்