சனி, 4 ஏப்ரல், 2015

மனம் நிறைக்கும் ஏக்கம் எதுவோ?


புலம் பெயர் வாழ்வில்
மறைந்தே போகிறது என் மண்ணின் வாசனை

ஏன்?
மனிதர்களின் வாசனையும் வாடையும்தான்
மண் வாசனை!
மன ஏக்கம் ஒரு இளந்தளிரில் பூத்த மலர் போல
மனம் நிறைய ஒட்டிய வாசனையது.

சமூக காற்றில் நாளும் பொழுதும் பூத்த மலரல்லவா?
ஏன் ஆத்மாவும் அகவும் உறவும் தோய்ந்த
நிலமதில் நிறைந்தே பூத்த மலரல்லவா?
ஒவ்வொரு இதழும் வடு சுமக்கின்றது
ஆறாத வலி தரும் வலியில்.

காலம் ஒரு கலத்தை திண்மையாகவே பூட்டியிருக்கும்
மனக் கலசத்தில்.
எதனாலும் மறைக்க முடியாத ஒரு கறையாக
பெருங்கதையாக--

ஒரு கால ஓடு தளம்
நிறைவாக பொருள் தேடும் தளமாக
திரைகடலோட வைத்தது.
திரவியம் மட்டுமே தேடும் தலமது

காலக் காற்று திசை மாற,மாற
ஒய்யாரம் தேடி மனம் ஊளையிட்டதுவோ?
ஆதலால் அனந்தம் தேடி
ஆசைக்காற்று
அயல்களையும்,வயல்களையும்
களைந்தது.
குடும்பமாய் குடியேறி குதூகலம் விதைத்தது.
தடுமாறாத ஓடமாய்
தாளமது தப்பாமல் நாம் தப்பியதாய்
எகத்தளமாய் ஏற்றமிறைத்த மனமின்றி-இன்று
அகத் தளமாய் உறவு தேடி உயிர் வாடும் நாளாய் தினம் கலையும்.

வானம்பாடி என ஒரு பெரும் நினைப்பெழுதி
புழுதி கலைந்து கரைந்து போனதாக
காலம் கடந்து மனம் ஓர்மமாய்
ஒரு தளம் தேடும்
நரை நிறை தலைகள்-தினம்
சமூக உறவெழுதும் ஞாயமாய்

இரு தள சமூக பண்பாடு ஒரு புறம்
இடம் பெயர் அகதி என மறு புறம்
இரு பெரும் மனுக்களில் வாழ்வு
சம நிலை தேடும்-
மொழி புரியாத போதும் வழி கண்டதாய் ஒரு அறம்
பல கழிவுகளையும் களித்து
வழி ஏற்றியது பலவாய் புலவாழ்வு.


பணம்,காசு
துட்டு
பொருள் ஆதாரம்
ஆதார்சமென மனம் தனம் சேர்த்தது.
ஆனால் இருளுடன் என்பதை இதயம் எண்ண மறந்தது.
மறைத்தது.

காத்திரமாக சொல்வதானால்
அக் காலம் பணம் மிகப் பெருந்தேவை.
காலத்தின் அறமும் அதுவாக
ஒரு வகையில் கட்டளையும் அதுவே ஆக!

இன்று வாழ்வெழுதும் எம் இளைய தலைமுறைக்கு புரியாது.
அன்று நாம் வாழ்வெழுத துலைத்த அருவிகளை.
நின்று நிதானம் பொலிந்தே பதிகின்றேன்-ஞாயங்களை
நியங்கள் ஒரு போதும் தாளம் தப்பாது.

அதன் தொகுப்பே-
இன்று இந் நல் நிலையும் கூட,
ஆயினும் ஒன்றதன் இழப்பிலேதான்-
மற்றொன்றின் பிறப்பூ –யதார்த்தமும் அதுவே ஆக
கற்கை நெறி கனதி கூட்டியது.

நடந்தது எதுவும் காலப் பிழையும் இல்லை
அன்றி களங்கம் இல்லை-ஆகவே
கலக்கமும் தேவையில்லை-அது
கனிவாகிக் கொழித்தது காலத் தேவையே!


 காலச் சுற்றோட்டம்
திண்ணை மனிதராய்
மலரும் நினைவெழுதும் போதெல்லாம்
உறவுகளும் அதன் உயர்வுகளின்,
உயிர் துடிப்பெழுதும் உள்ளக நாடியாய்.

.

இதையும் மீறி தலை நரை சூட
மனம் சமூகத் களம் நாடும்
இதுவே அறமென அகம் ஆடும்
மறவாதே!

எதிர் கால நினைவெழுதி
எம் சமூக உறவு நாடு(ம்)
புல வாழ் உறவுகளே!
நிலம் வாழ் உறவுகளும் புரிந்தெழ!

மனம் நிறைந்தே மண் வாசம் அகம் சூடும்.
என்றும் மறைந்தும் மறைத்தும் போகா
மண் வாசம்.மனை ஏக!         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்