வெள்ளி, 6 டிசம்பர், 2013


மனம் நிறைய பேச எழும் ஆவல்கள்.
ஒரு
ஆதங்கத்தின் கீற்றாக அலைமோதும்
போதெல்லாம் அணைபோடும்.
துணை கூட அதை துய்க்கும்.
ஏணைகளில் என் எண்ணங்கள்
வரட்சியாக வற்றிப் போகின்றது.

ஏதுமே ஆவலற்ற உள்ளங்களால்
சாதுவான ஒரு துணைபோல
சதா காலமும் சஞ்சரிப்பதாய்
பதாகை தூக்கிய தோள்களையும் காணோம்?

ஒரு போக காலம் முடிந்ததுபோல் பின் வாங்கும்
பல உள்ளங்களின் முதுகுப் பார்வையால்---
தெருவோர பாடகனாய் மனம் பின்னும்
உணர்வுகளில் என் உளம் தேயும்.

நோகின்ற உள்ளம்
நோகாத இணைப்புக்கள்
பிணைப்புக்களில்
எந்த ஒரு பிரயோகமும்,
ஏன்


பிரியோசனமும் இல்லாமல்
தேடும் அலை மேல் துரும்பா?

எடுத்த ஒவ்வொரு அடியும்
வடு சுமக்கும்.
ஆதலால் திண்ணம் இன்னமும் துணிவேற்றும்.
சாதலாவதில்லை இந்த சதா நினைவுகள்
எண்ணங்களின் அடிச் சுவடு
பாதை செப்பனிடும்
நாள் வரும வரை
மனம் நிறையவே பேச எழும்
ஆவல்களுடன்-
அடிமைச் சாசனத்தின்
எழுதாத
தீர்ப்புக்ளை
அடியோடு மாற்ற இவன் எடுத்த
ஆயுதங்கள் பல!

அமைதி வழி ஆர்ப்பாட்டம்-
ஆக்கிரமிப்பு வெள்ளையனிடம்
வேகாதென புரிந்த போது
ஆயுதமே ஆயுதமாக
அரண் காட்டினான்.

அமைதிக்கும்
ஆட்சி கவிழ்ப்பிற்க்கும்
உடந்தையானானெ
மடந்தைதனை விரித்த
வெள்ளையனால்
தீவொன்றினுள் தீ ஆனான்.

மானிடத்தை நேசிக்க
கற்றுக் கொள்ள இந்த அகிலத்திற்கே
அறை கூவலை தன் செயலாக்கியதால்
செவிலியனான்.

பெற்ற விருதுகளை விட
கற்ற பாடங்கள் பல உண்டு இவனிடம்
அதில்
சுதந்திரமும்,
மானிடமும் மகுடம் சூட்டும் சுட்டிகள்.

கறுப்பு
வெள்ளை
இனம் யாபேரும் பெற வேண்டியது
சுகந்தமான சுதந்திரமான
அகிலமே அவன் கனவு.

அடக்கப்படும் இனத்திற்கு
இவன் ஒரு வழிகாட்டி!
இடர்படும்போதெல்லாம் தெம்பூட்டும்
நுகர் தடி.

தனதான இன விடிவில் முழுமையான
வெற்றிபெற்றானா?
இல்லையா?
அதற்காகவே வாழ்ந்து காட்டிய
இவன் வரலாறு கூறும் சேதியில்
அவன் வெற்றியின் யதார்த்தம் பிரதிபலிக்கும்.

போய் வருக!
இன விடுதலை பெருஞ் சுடரே!
ஏன் இறந்தான் தேவனென
உலகம் வடிக்கும் இரங்கலில்
உளம திறந்தது போல்
எம்
மண்ணிற்கும் ஒரு விடிவெள்ளியாய்
போய் வருக.
போற்றுதற் கரிய அடலேறே!

புதன், 4 டிசம்பர், 2013

                                    பெருந் தலைவ!



நன்நெறியுடன்
வல் பொறி முறை பூண்ட
வல்வை மைந்தனாய்
வையகம் வந்தாய்.

செல் நெறியுடன் நீ வகுத்த
பல் களங்களும் பல்கி பெருக
பிறவியெடுத்த பெருந் தலைவ
அகவை 59ஆக
புகும் உன் வாழ்வு நிறை
தகமையான அகமையாக
ஆளுமை தந்தவனே!
வாழி நீ
வாழ்த்தேவும் பெரும் பேறு
உனதான பிறப்பால் எனக்கும் தேறியதுகாண்.

வனப்பெழுதும் நீ வைத்த பார்வையின்
தினம் இன்று.
தனை எழுதும் பேறாக்கிய
நினை
நிந்தன் பெருஞ் சுவடியை
காலம் கருக்கொண்டு
ஞாலத்தில் உந்தும் ஒரு ஒளி புலர.

வாழி நீவிர் என
வையகம் வாழ்த்தெழுதும்
போதும் உன் பெருங் கனவை
நனவாக்க நாளை கூடும்
மாவீரக் கனலில் ஒரு
உறுதி கொள்வோம்.

அது!
தமிழர் கனவை மென் மேலும்
அமிழ்தாக்க ஒரு ஆக்கம் பேணும்.
மாறுதல்களில்
நின்
வார்த்தையால் அகவுவேன்.
போராட்ட வடிவம் மாறலாம்
கொண்ட கொள்கைப் போரது மாறதென
மீண்டும்
ஒரு பெருவொலி இவ் வுலகம் நெய்யும்.

"தமிழரது தாகம் தமிழீ(ழுலக)த் தாயகம்"

நினைவுகளின் தடத்தில்
ஒரு பாதம் பணிந்து
நீர்த் திவலைகள் பனித்து
இதயமே ஒரு மெளன ரீங்காரத்தை
ஓசையின்றி இழைத்தது.

மழையும்,அதன் சாரலும்
மெல்ல எம் தேசம் தழுவிய ஒரு
மாலைப் பொழுதில்
ஆலய மணியின் கணீரென்ற
ஒலியிழையில்
தேசத்து மலர்கள் யாவும் சிலிர்த்துப் போயின.
அது ஒரு காலமாக!

இன்று!
மூலைக்கு மூலை பல மூடர்களின் கண்காணிப்பும்
ஈரமாக்கவா இல்லையா எனும் உந்துதலில்
இயற்கையின் இசைவின்மையும்
மனதை நெருட--
நின்றொரு ஒலி கொட்டும் எண்ணம் மனதை உந்த
மனைகள் பலவற்றில் தீபாரதனையுடன் ஒரு மெளனாஞ்சலி
எது நடந்தாலும்-
ஏக்கம் சுமக்கும் நெஞ்சகம்
இயங்கத்தான் சாலவே தடமிடும்.

நடந்தது!
நனவாகவே சகல இதயத்திலும்.
இது
ஆரியர்களின் அடக்கு முறையால்
வீரியம் பெற்றது.
இது
குருதியோடும்,நரம்பினூடும்
இழைந்த சங்கமம்.

தேசத்தின் புதல்வர்களை
எம் நேயத்தோடும்,பாசத்தோடும்
என்றும் நினைவாக்கம் கொள்வோம் எனும்
நனவாக்கத்தின் நல்லிருப்பாய்.
உதிர்ந்து
தொலைந்து கோணாது இந்த
உயிர்ப்புக்களின் ஊடு தளம் எனும்
பயிர்ப்பாய்.


முகிழொன்றாய்
நெகிழ்வகற்றி நெறிகட்டிய விந்தை-இன்று
அகிலமெலாம் அவன் ஆளுமை.
தகித்த வேதனையிலும்,
சகிக்கவே முடியாத சோகத்திலும்
செழிப்பேற்றியது காண் இன்று
தமிழீழ,தமிழக உறவுகள்.

இது!
உலகெலாம் உலவும் உலவு.
கலப்பில்லாத உவப்பு -இது
காலம் காலமாய் எம்
கரிகாலனால்,அவனது
தரிசனத்தால் தாளொற்றிய சிறப்பு.

பொற்காலம் ஒன்றை போரால்-அதன்
பேரால் வேர் கொள வைத்த விந்தையது.
தொலை நோக்காய்
தொக்கிய வீரியம் -அதன்
ஆளுகைகள் இன்று அவன் பேருடன்
மாதவ வீரர்களையும் மையப்படுத்தி
உணர்வுகளை,இதன் தெறிப்புக்களை
அதனூடான விறுமங்களை நம்
ரத்த நாளத்தில் தறையும் விந்தை நாளிது.

அது!
தமிழர்களின் விருத்தம் என்றால்
வடக்கில்,கிழக்கில் ராணுவத்திற்கு கருத்தலாக?
அதன் பெயர்தான் "பிரபாகரன்"
மறு பெயர் மாவீரச் செம்மல்கள்.

விளக்குகளிற்கு விளக்கெதற்கு.
ஒவ்வொரு
இதயக் கூட்டிலும் தேசம் பூராகவும்,
நாளை ஒளிரும் ளெிச்சத்தை என்ன செய்வதாக உத்தே(வே)சம்?
பாவம் பயப் பிம்மங்கள்.
ஒரு தீபம் ஒளிர்ந்தாலே
பளீரென அறையும் தடமே
திடமான மாவீர இருப்பு.
மாதவம் செய்த மாநிலம்.

பூப்பந்தல்
பூம்புனலாய் நாளை ஓடியே ஒரு
புது வீச் செய்யும்.
இது காலத்தின் கட்டளை
கடைசித் தமிழன் இருக்கும் வரை இறவாது.
இது
நீதி மட்டுமல்ல நியதி(தீ)யும்.
இதயத்தால் உங்களின் ஈகங்களில் நனையும்
தேசம் பெரும் கங்கணத்தால் ஒரு கணம் வேயும்.
அது
காலப் பெரு வெள்ளத்திற்கு காத்திரமாய் கூறும்
கூற்றாக -----

உங்கள் உறுதிகள்
உறு தீகளாக உரிமம் சூடும்.
இத் திங்கள் தரும் சேதியது.
எத் திங்களிலும்,சிங்களத்தாலும்
வதைக்கவோ,ஒடுக்கவோ முடியா பெருந்தீயாக
மாவீர இல்லங்கள் ஒளிரட்டும்.
அவர் தம் ஈகையின் பேரால்.

உமது யாகங்களை,
எமது தாகங்களாக கையகப்படுத்தினோம்
எனும் தார்மீக சேதியாக.
தமிழரின் தாகம் தமிழீ(ழுலக)த் தாயகமாக!


தொழவே முடியாத
உங்கள் தொழுவங்களைவிட
எங்களின் ஆழ மனதில்
அமைதியாக உறங்குங்கள்..

அதிதியானாலும்-
ஆழக் கடல் கடந்தே நாம் வாழ்ந்தாலும்-
ஆழமான நேசத்தில்!
உங்களின் சுவாசங்களாக நாமிருப்போம்.
இருக்கின்றோம்.

ஆதலால்தான்-
சில கால குழப்ப,கலக்கங்கள்
ஒருவகை கலகங்களும் கூட -
கலைந்தது.
கலைத்தது உங்களின் தியாகங்களும்
யாகங்களும்.
போகும் பாதை தூரம்தான்.
பெரும் இன்னல்கள்
இடர்கள் சூழ்ந்ததுதான்.

பெரு நெருப்பாற்றை கடந்தவர்கள்-நீங்கள்
சொல்லற்கரிய சாதனையாளர்களாய்
வழி காட்டினீர்கள்-இந்த சுவடே
எமது பாதையாய்
இயங்கு நிலை வேறு.ஆயினும்
இலக்கில் மாற்றமில்லை.

அமைதியாக உறங்குங்கள்-
அதிதியானாலும் அறுதியாய் இலங்குவோம்.
இதுதான் நேற்றைய நாளில்
நேர்த்திய நோற்றல்கள்.
கார்த்திகைப் பூவில்
களங்கமில்லாமல் காப்பாய் இயங்கும் காத்திரர்கள்
காட்டும் கனதியான வீதியில்-
புது விதியெழுதுவோம்.
பூப்போம்.

எம் முற்றத்து முறக் கவிஞனே!
இன்று உனக்கு அகவை ஒன்று கூடும்
அரிய நாளாம்.
வாழ்த்தெழுதி உனை சேவிக்கும்
வரப்பில் எழும் அந்த இனிய பார்வையும்
நெகிழ்வும்
எனக்குள்
எனதான நினைவுப் பள்ளத்தாக்கில்
பெரும் பார,பாராத தழும்புகளாய்.

நிதம் நின் பாக்களையும்
பரவும் வரிகளையும்
மனக் கொண்டவன்.
ஆதலால் தமிழ் நிரவக் களை கொண்டவன்.
இப்படி எனைப்போல் எத்தனை பேரை
உளக் கொண்டவனே!

உலைக்கள வியாசனே!
கலை,பண்பாட்டுக் கழகத்தால்
களத்தையும்,தளத்தையும் மெருகேற்றி
உணர்வேற்றிய உலைக்களமே!

எங்குளாய்?
எப்படியுளாயோ?
யாமறியோம்
எனினும்
ஏடுகளிலும் எழுத்துக்களிலும்
நின் தகமையான தரிசனமாய்
என்றும் எம்முடன் வாழ்வாய்.

வரலாற்றில் நீ ஒரு பெருஞ் சுவடு.
அந்த தொடு தளத்தில்
நின் பேராண்மை.
தமிழுலகம் வாழும் வரை
வரையறையின்றி வாழ்வாய்.
வரும்
இளைய தலைமுறையின்
இடுகையான சுவட்டில் ஓர் பேரொளியாய்.

பெருஞ் சுடரே!
ஈழ அக்னிக் களத்தில்
தாழாமல் வேங்கைகளை சுரந்தவனே!
அரும்பாகிய பலரை
இரும்பாக்கிய
ஈகையே நின்
கருப் பொருளெல்லாம்
ஈழப் பிரவசத்திலென
வசமாகிய
வையகனே!

நிதம் சுவாசித்த தேசக் கந்தகக் காற்றின்
அலை வரிசையாகி,
ஆழப் புதைந்திருந்து ஆழ் மனதில்
என்றும் வல்ல பெருந் தீயாக
தென்றலின் சுகந்தத்துடன்
அழகாக என்றும் அனலாக!
ஈழ நேச நெஞ்சகங்களில்
குடியிருப்பாய்.

நினதான இந்த கம்பீரமும்,
மிடுக்கான,தெளிவான பார்வையும்
திசையெலாம் விசை எழுப்பிய
திடமான வரிகளும் நின் வாசம் பூசும்
இந்த பாரில் என்றும்.

வலைப்பதிவு காப்பகம்