வெள்ளி, 23 ஜூலை, 2010

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே!


எண்ண அலைகளில் என்றும்,
திண்ணமாய் திறனெடுத்து,
எண்ணாக் காரியத்தை எளிதாக்கி,
எரித்த ஏந்தல் நீ-
வரலாறு!
உன்னை என்றும் வரிந்து வகைத்திருக்கும்.

ஆடு,மாடு,பொன்,பொருளென,
ஓடித் திரிந்த எம் முற்றத்தில்,
நீ!
தேடியதுவும்,தெரிவெழுதி தேற்றியதுவும்,
விடியலின் முகவரியென முத்தாய்ப்பாய்.
சொல்லாமல் செயலாக்கமாக்கிய செவிலியனே!
உன் வைராக்கியத்தில் எந்த-
வரிகள் பொருதும்?இல்லை பொருந்தும்?

பாடு பொருள் இதுதானென,
ஊடு கூடி தேடும் உன் தெரிவில்,
எத்துணை உறுதி?
பேடு தேடும் தருணங்களில் உன் அகவை.
ஆனால் இந்த அகவையில் உன்-
ஆரோக்கியமான சிந்தனையில் உன்
கருக்கள் சீலமாக தக்கவைத்து!
உருவான உறுதியில் பிரபாகரனின் பிரமத்தை,
பிறழாமல் பின்பற்றிய பிதாமகன் நீ.

விழுப்புண் ஏந்தி!
அந்த விகாரமான பொழுதுகளிலும்- நீ
உதிர்த்தது தம்பி எனும் திருப் பெயர்.
உதிராத பிரமாணம்,
நெஞ்சகத்தில் நெருப்பாக,
நெகிழ்வெழுதிப் போனவனே!

வீரனே!
செல்லக்கிளி அம்மானான தீரனே!
ஞாலத்தில் எங்களின் நாயம் பிறக்க தீயான தீபமே!
ஒப்பாரிகளின் முதுகில்,
ஓர்மம் ஒட்டிய சிங்கள கிங்காதரர்களின் சிம்ம
சொப்பனம் நீ.

ஞாலனே வீரவரலாற்றின் முகப்புரையே
காலம் எமதாக்க கரந்தடியில் கலந்தாயோ!
வித்தாகி விழுதெறிந்த சித்திலனே!
முத்தாகும் எங்கள் முழு நிலம் ஒரு நாள்
சொத்தாகும் வரை சோர்வகற்றி
நித்திலத்தில் உங்களின் நினைவுகளுடன்
நெடும் பயணம் போகின்றோம்.
உங்களின் சத்தியக் கனவை அகத்தில் ஆழப்படித்தபடி.

செல்லக்கிளி அம்மானின் வீர நினைவு சுமந்து!
தமிழீழ விடுதலை வரலாற்றில் பெரும் பதிவில்-
வெல்ல வழி வகுத்த திருநெல்வேலி
கண்ணி வெடி தாக்குதலில் களப்பலியான
"மாவீரன்" சதாசிவம்-செல்வநாயகம் நினைவாக
இந்த நிழல் பதிவு.


வியாழன், 8 ஜூலை, 2010

அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்!


ஏந்திய கருவியை ஏலம் வைத்தான்-இவன்
எல்லோரையுமே சிதைக்க வைத்தான்.
சிந்திய இரத்தமது கொஞ்சமா?ஈழ
சிந்துகள் அழிந்தது இவன் வஞ்சமே.

உறவாடிக் கெடுத்த ஊழியன்- இவன்.
நவீன எட்டப்பர் கூட்டத்தின் நயவஞ்சகன்.
அறம் கொன்றது போதாதென்று,
இன்று -
வெறி
நட(ன)மாடுகின்றான்.தமிழர் குருதியில்-
ஆரியர் வீ(வி)தியில்.

ஆடு தாண்டவா ஆடு -ஆடு
கூட தாண்டும் நீ கூத்தாடு.
பேடு ஆன பேமாளி நீ-
பெருமை கொள்வாயா கோமாளி?

நாடு தாங்குமா உன் நர்த்தனம்?எந்த
நாவும் உனையே அர்ச்சனம்.
பீடு பிறழும் பிறப்பேந்தி-உன்
பீடம் யாவுமே இறப்பேந்தி.

பொழுது வருமே தன்னாலே அதை
உழுது கொள்வாயே உன்னாலே,
அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்-அது
விழுது எழுதும் வித்தகம்.

திங்கள், 5 ஜூலை, 2010

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?


ஈகையின் இமய வரம்பே!
நெடிதுயர்ந்த வீரக்கனலே!
துயர் தாங்கிய கொடிகளின்,
உயிர் நெருப்பே!
பகை எரித்து பாளும் அவர்
பாதமான பாதை அழிக்க,
உம்மை
புடம் போட்டு புனருத்தாரணம்,
பூட்டிய பூம்புனல் புனித திருவே!

-நீவர்
தொட்ட பகையின் உளப் பரப்புக்கள்,
எல்லாமே உன் பெயருக்குள் அணுவாக,
கரு எனும் வார்த்தையில் அவை கரியாக,
வரும் பகை திருப்பிய திருவாக,
உருமறைத்து,
உளம் செருக்கி,
சொல்லாப் பெயர் சுருக்கி,
சுயம் எரித்து,
கயம் கலைக்க கரும்புலியமான
கார்த்திகர்களே!

இன்று உன் நினைவெழுதும் நாளா?
இல்லை,
நீவிர் தமிழீழப் பரப்பில் பிறந்த திருநாளா?
அல்லது,
பாரும் பகையே எந்த பரமத்திற்கும்
அடிபணியாத் தலைவனின் அகத்தில்
செருக்காய் குடியிருந்த பெருநாளா?
அஃதன்றி-
அகிலத்தில் தமிழீழத்தை யாகிக்கும்
அத்தனை தமிழர்களின் ஆவிதனில்
நீவிர்
உனது ஆன்மாவை நிறைவிருப்புடன்,
தமிழீழத்திற்காய் நிமிர்வெழுதி நிறைவாக்கி,
நிலைவெழுத்தாக்கிய நிறைநாளா?

எத்திரு நாளென எண்ணி உனை எழுதுவேன்?
செத்திருந்த தமிழினத்தை உயிர்த்தெழ வைத்த
வேதியர் நீவர்.
உங்கள் சொத்தனைத்தும்-
தமிழீழ தாகமென உயிரெழுதி-
உயிர் பரப்பி உன்னதமான இந்நாளை
ஆவிக்குள்ளும் அடங்கா எமை மேவித்திரியும்
உன்
மெட்டுக்கள் என்றும்
அணைந்து விடா கட்டுக்களாக -
எமது சந்ததிகள் உள்ள வரை
உம் வரைபுகள் வகையெழுதும்.

தமிழீழ யாசகர்களே!
தனை சான்றெழுதிய போசகர்களே!
உமை ஈன்ற மண்ணிற்கானவர்களே!
மனை மீளும்.
விழி சிரிக்கும்.
உன் குவியங்களின் குழிகள்-

இன்று ஓர் பாரிய இடைவெளியில்-
ஆயினும்-
ஓயாத,ஒப்புவமையற்ற ஓர்மங்கள்
சலனமின்றி,சந்தடியகற்றி சாவாசமாய்,
புலனேற்றி பூப்பார்கள்.
புண்ணியரே!
சேதிவரும் நாளுடன் -உன்
செந்தமிழாணை கலந்து.

பொதுமை வேணி நீர் ஏந்திய சிந்தனைகள்.
இனத்தின் தமிழினத்தின்,தமிழுணர்வின்,
இல்லை
தாயக விடியலில்,
தலைவனின் தார்மீக சமரில்,
ஏன்!
எல்லாவற்றிற்கும் மேலாக,
சுதந்திரத்தின் அந்த சுந்தர,
விடியலில் நீவிர் கொண்ட வேட்கைகள்
எந்த வேதத்திற்குள்ளும் இடிபடாமல்
விடுதலை உச்சாடனத்திற்குள் மட்டுமே
உறைந்திருந்த உணர்வுகள்.
சந்தனக் காற்றாய் என்றும் எம் நினைவில்.

சரித்திரர்களே!
சாந்தி கொள்.
நல்ல சங்கதிகளுடன்
சஞ்சரிக்கும் நாள் கூடும்.

சனி, 3 ஜூலை, 2010

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.


இந்த
வக்கிரம் வகைத்தவரா -உன்
உத்திரம் வகுப்பார்?
முத்திரமான எங்கள் சத்திரியர்களின்
சித்திரம் பார்.

எத்திரை வந்தபோதும்,
பத்தரையான பவித்திரர்கள்.
விதித்திரை விண்ட வீரியர்கள்-அவர்
தேசத்திற்காய்
வீரச் சமர் கொண்டவர்கள்,அவரைக்
கொன்ற பின்னும் சேடம் வரையும்-
ஆரியத் தரை அகம் ஆய்ந்தாயா?

தினமும்,
வன்மையாய் முகம் மறைக்கும்-
மூர்க்கம் காண்.
வெறும் தரை வழிப்பாதையில்,
பார்வை வேண்டாம்.
புனர் வாழ்விற்கு வகையில்லை,இவர்
அபிவிருத்தியென்று எதை ஆய்கின்றார்?

அடுத்த வேளை கஞ்சிக்கு அதரம் அற்று,
படுத்த வேளை கிஞ்சிதமாய் கிராகதர்கள் கிள்ளும்-
இராணுவ சக்கரம் எந்த சதங்கை கட்டும்?
புராணம் பாடும் புலமே உன் உலவலிற்காய்,
உறுப்பறுத்து உசாவல் நலமென்னும் நர்த்தனம் அறு.

வெறும் வெளிகள் உள்ளம் உலவாது.
ஊடுகள் உணர சிலாகி.
தாறு மாறாய் தடம் புரண்ட தமிழ் நிலம்.
ஊறு கொடுத்த தேறுகள் தேச வீதியெங்கும்.

ஆனால் நீவிரோ!
வெற்றுக் காட்சியில் வேகம் கரைத்து,
எம் வேதம் மறைத்து,
இப்படியா உரைப்பாய்?
உல்லாச பயணத்திற்காய் உன் உறுப்பமைக்கும்
சல்லாபத்திற்காகவா?
சவக்காடானது எம் தேசம்?

சுய நல சூத்திரர்களே!
நலமானதாய் நாடு என-
நா ஒளித்து நடுகல் நடாதே.
நீதி,நியம் ஒளித்து எதையும் ஒவ்வாதே.
எதையும் நாட்டிற்காய் ஒப்பாத சுயமே!

உன்-
சுவடனைத்தும் பாவியர்கள் பாதம்.
பதகழித்து பாகை சரித்து பல்லாயிரமாய்-
பாடை விரித்தவர் தடமது.
பரணியிலும் பரவும் பதமது.

உன் சாவால் கூட மறக்க முடியாத,கூடாத
மனக் காயமது.
சொகுசு பேரூந்து பிரயாணத்திற்காய் எம்
தேசப் புதல்வர்கள் பிராணன் விடவில்லை.
அன்று எரிந்தது அவர் களம்-நாளை
அது உன் மனையின் மீதும் பெ(ம)ருகும்.
மறக்காதே நிச்சயம் இதுவும்-!

பலமுள்ளதே வாழும் இது வாழ்வியல் நியதி.
அது பணமாக,கருவியாக,படைபலமாக
பலவித முகம் கொள்ளும்-அற்ற போதே
அத்தனையும் அடிவருடும்.அதுதான்
இன்று சிறீலங்காவில் ஆரியக் கடைவிரிப்பு.
ஈழத்-
தமிழரின் அவலச் சரிவு.

ஆக மீண்டும் பலம் கறுக்க
கே.பி யின் கேனத்தனம்,கோத்தாவுடன்
கோமயம்.
புலமே சுதாகரிக்கும் சுயம் வேண்டும்.அன்றேல்
ஆதியுடன் அந்தமாக அத்தனையும்
கதி அதோ கதிதான்.
அரசியலையும் ஆத்தமார்த்தாமாய் அகம் கொள்.
தூரத்துப் பச்சை பசுமையே இல்லை.

வலைப்பதிவு காப்பகம்