செவ்வாய், 29 ஜூன், 2010

செவ்வரத்தம் பூவில்!


செவ்வரத்தம் பூவில்-
எவ்விரத்தம் பார்க்க அது
இவ்வளவு சிகப்பாக?
-உன்
இரத்தம் சீராக்க இதுவும் ஓர்
மார்க்கமே.

ஆம்!
இதில் மருத்துவ குணம்
நிறைவே.
உண்டவர்களும்,அதன்
நிலையை அறிந்தவர்களும்
கூறும் அறிவுரை.

பசுந்தலாக அரைத்து உண்ண
பறக்குமாம் பல நோய்கள்.
பச்சையாக உண்ணுதல்,
பலா,பலன்கள் நிறையவே.

இதய நோய்க்கு இதமான மருந்து.
மார்பு வலியுள்ளவர்கள் பூவை,
நீரில் இட்டு கொதிக்க வைத்து,
காலையும் மாலையும் அருந்திவர-
நிவாரணம் காணலாம் ரணமகற்றி.

தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இன்னமும் இதன் சிறப்பை.
செம்பருத்தி பூவா?செவ்விரத்தப் பூவா?

ஞாயிறு, 27 ஜூன், 2010

சுற்றமே உனை சுதாகரித்து,


பேசுவது பெருமை,
பூசுவது (திரு)நீறு,
மாசுவது மனதில்,
கூசுவது உறவில்,

நீசுவது புலவில்,
காசு அது கலப்பில்,
தூசு என நினைத்து,
வீசுவது சரியா?

தூது அது துலைவில்,
மாது அது கனவில்,
தாது உனை குழப்ப,
மீது எது மீதம்?

வாது எது நிலையில்,
கூதுவது குலவில்,
பாசுவது பரணில்,
பேச வரும் பரப்பில்.

பேசு அது தமிழ?
பேரம் எது உறவோ?
இறைஞ்சி அது இந்து.
மிஞ்சியது எது?ஏந்த.

துஞ்சிய போதே-
தூக்கம் அது!
கலைத்திருந்தால்,
விஞ்சியதுவும்,மிஞ்சியதுவும்
மீதம் மிதந்திருக்கும்.

புரிந்தால்!
பதிவெழுது,இல்லையேல்
பசப்பெழுது.
வதி களை(லை)ந்த முகப்பெழுத-
பதிவேது பாடுபட?!

வரிந்ததுவும்,வகைத்ததுவும்,
பரிவெழுதும்.
பாதை பார்.
முகாரியின் முகவரியில்,
முத்தாய்பேதும் முடிவுறா?

பற்றுமே உனை பதகழித்து,
கரித்ததுவோ உந்தன் உசா தொலைத்து?
குற்றமே எனினும் இது-
உன்-
முற்றமே.
மறந்தும்,மறைத்தும் விடாதே.

திங்கள், 14 ஜூன், 2010

தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.


பாதாளம் வரையுன் பாதம் படியும்.
பரமனென்றுன்னை பரணியே பாடும்.
தெரிவான எந்த செல்வத்திலும்,பொழிவான போக்கு நீ-
இதனால்தான்-
எந்த தெரிவிலும் முதன்மையாக நீ.
எல்லா அசைவின் இசைவு நீ.

புவியில் நீ இல்லா இடமோ,வழியோ இல்லை.
இப்பொதெல்லாம் உன் அமைவு அரூபமாக,
வெறும் அட்டையில் உன் காத்திரமான அமர்வு.
மின் காந்த ஒளிர்வில் உன் ஓங்காரம்.
"ஓ"மென்ற மந்திரத்தை விட வலிமை நீ.
"ஓம்"இதற்கு உள்ளக வலிமை உண்டோ?இல்லையோ?

உனக்கு உள்ள வலிமை ஊரெல்லாம் வலியாய்,
உன்னால் பெற்றவளை தவிர்த்து மற்றெல்லாம்-
கொள் முதலாக்கலாம் என்பர் பலர்-ஆம்
மறுதலிக்கவே முடியாத "மா" செல்வம்-நீ
அதனால்தான் என்னவோ நீ இருக்க வேண்டிய-இடம் தவிர்த்து-
உலக மயமெல்லாம் உறுதியாய் இருக்கின்றாய்.
நீ கைமாறும் போதினெல்லாம் உரிமைகள் எல்லாம்,களம் மாறுகின்றது.
முள்ளியவளை கொடுந் துயரத்திலும் உன்-கொடிய பங்கு நெடியது.
உன்னை படைத்தவன்தான் கடவுளரையும் படைத்தான்.

உன் இருப்பில் ஏந்த எந்த கருவிகளும் இல்லை.
உன்னை சுற்றி எந்த தோத்திரமும் இல்லை.
பாலாபிசேகம் முதல் பூச்சூடும் புன்னங்கள் இல்லை.
ஏன் உனக்கு கருவறை கட்டி காப்பு சாத்தும் களேபரம்கூட இல்லை.
உனக்கு நேர்த்தி வைத்து நேருவோரும் இல்லை.ஆனால்
உன்னையே நேர்த்தியாக்கும் சூத்திரம்-
உன்னால்உனக்கே ஆன பாத்திரம் உண்டு.

நீ வசமாக வேண்டுமென்று எள்ளெரிப்போரும்,
சனிக் கிரகத்தின் சாளரத்தினால் நீ தன் வீட்டு,சாளரம் ஏக!
உனை கைக்கொள்ள,சாத்தியமானதாக எண்ணி,
கருவறை கற்களை உன் காத்திரத்தால் முழுக வைக்க,
கடன் வேண்டி கற்பூரம் காட்டும்,காட்சியில் உன் பாகம்!
முகப்பு நீதான் என முகரும் போதே உனை கருப்பெரிப்போர்-கனருண்டு.
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை,மட்டுமா வளர்த்தாய்?

அத்துடன்-
அறியாமை,தெரியாமை,தெளியாமை,கல்லாமை,
கற்றதை கைக்கொள்ளாமை, பேராண்மை
என்ற போர்வையில் பேராசை,
இன்ன பிற ஆசைகளின்,ஆமைகளின்- ஆசானே!

உன் உடன் இருப்பிற்காய்!உலக வலத்தில்
உறுப்பறுக்கும் உரிமையை என்று
கனதி குறைப்பாயோ? அன்றே மனிதமும் மானிடம் சூடும்.
யாரில்லா போதும் இயங்கும் பிரபஞ்சம்-இனி
என்றுமே நீயின்றி அசையா வரம் பெற்றாய் வாழி.

நேரம் இருக்கும் போது என் வீட்டு முற்றத்திலும்,
கொஞ்சூண்டு கொஞ்சம் ஓய்வெடு -
நானும்உன்னை நாணயமகற்றி "நா"நயமகற்றி,
நாலு நாட்கள் சுவாசிக்க வாசிக்க.
இதற்கும் நோ்த்தி வைக்க வேண்டுமென்றால்-
என் வாசலும்,வாசமும் ஏகாதே.

உடலில் வலுவும்,உள்ளத்தில் தெளிவும்,
பகுத்தறிவில் பாதையும் உண்டு .
எனவேஎன் வேர்வையின் துளிகளால் உன்னை
வேண்டியவரை வரை கொள்வேன்.
ஏந்த அர்த்தமற்ற ஆமைகளும்,ஆசைகளும் எனை அண்டாமல்,
அந்த தீண்டாமையை,தீயாய் என் திடம் தீற்றி.

வியாழன், 10 ஜூன், 2010

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.


சரியாசனம் சாசனமாகாததால்,
புரியாசனம் புதைக்கப்பட்டதால்,
எரியாசனமாய் எழுதப்பட்டு-அந்த
உரியாசனம் உதிர்ந்தே போகுமா?

கரியாசனம் காட்டும்-ஆள
நிலக் கரியாசனமாய் நாளை-
அது தோன்றும் போதினிலே அதன்
வரியாசனம் வைடூரியமாய் மிளிரும்.

"தெரியா"(ஆ)சனம்,தெரியாத்தனம்
"வரியா"(ஆ)சனம் வரியாத்தனம்
வெறியாசனம் இலங்கும் சிங்களனால்,
கறையாசனமாய் இன்று புதைகுழியில்-ஆனால்

இவை யாவும்!
கரையாசனமாய் கனதி அள்ளும்-புவி
நிரையாசனமாய் எங்கள் மேனி தளிர
விபராசனமாய் விதி கீறும்-அன்று புரியும்
அவர் வரித்த புதியாசனம்.

பெளதீகாசனம் பகரும் பதிமுறை புரிவீரோ?-அந்த
பெளத்தாசனம் பயிற்றும் பாடையாசனம்-என்றோ அன்றி
பகுத்தாசனமாய் பரணியில் மறுதாக்காசனம் மரபெழுதும்
விகுத்தாசனம் நிச்சயம் எங்கள் வீரம் ஏற்கும் "விகுதா"(ஆ)சனமாய்-இது

"மா"வீராசனத்தின் மேல் நின்ற மெளன சாசனம்-எல்லா
"சா"ச(க)னத்தையும் எகிற்றி ஏறேறுமாசனமாய்-தமிழாசனம்
தரணாசனத்தில் தன் தகு சாசனம்!
தர்மாசனமாய்
சினையாசனம் சிறப்பேந்தும் சீர்காணீர்.

நாளை பிறப்பெழுதும் நன் நாடாம் தமிழீழத்தின் "மே"சாசனமாய்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.


பாதிக்கப்பட்ட பாவிகளின் பரந்த நன்றிகள்.

தென்னிந்திய திரைப்பட கர்த்தாக்களிற்கு!
வன்னி மண் தின்ற வணங்கா மக்களின்
வந்தனை கூறும் நன்றிகள்.

ஈழத் தமிழரின் இதயம் தின்ற,
பாழும் சிங்கள பாவிகள் தங்கள்-
மன அழுக்கின் மகத்துவம் கலைக்க-
இனமானம் சுமந்து ஈர்ப்புடன் இலங்கி
இலங்கையில் இன்றுவரை நெடுத்த,
ஐ.ஐ.பா விழாவை வாகையுடன்-
தோல்வியுற செய்த செம்மல்களே!

ஈழத் தமிழினம்!
நாளும்,பொழுதும் நலிந்து,
வலி சுமந்து மாளாத் துயர் பருக,
சிறீலங்கா ஆரியன் ஆதங்கித்து மகிழ,
எந்த விதி வரைந்தானோ -அதை
சிந்தையில் சிதைத்து சீரிய அடி கொடுத்த,
சிங்காரத் தமிழுணர்வுடன்-
திண்மையாய் முன்னெடுத்து,
எங்களின் கரம் பற்றி ஏங்கும்-
தமிழ் மனம் சுரக்க ஏந்திய,
ஊடகமாம் சினிமாத் திரையுலகினர்க்கு,
தமிழீழ மக்கள் சார்பாய்!
புலத் தமிழனின் புனிதமான நன்றிகள்.

மங்காத வடுவிருக்க,
மனமெல்லாம் சினமிருக்க,
தினவெடுத்து சினையீன சிங்களம்
வினையிட,
பொங்காத தமிழனாய் பொறுப்பறுக்க நினைத்தீரா?-எங்கள்
தொப்பிள் கொடியுறவை கொக்கென்று நினைத்தீரா?

சனி, 5 ஜூன், 2010

ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!


பூத்திருந்தாய் எங்கள் புவனத்தில்,
புனித விடுதலை ஒன்றையே யாத்திருந்தாய்.
புத்த நித்தியம் எங்களிற்கு விதைத்த-
சித்த வைத்தியத்தையே சீர்-
தூக்கியிருந்தாய்.

அதனால்!
அவர்தம் ஆயிலியங்களை களைய,
தூக்கினாய் கருவி-அது
எம்!
ஆயுத எழுத்தாக,
அதையே விடுதலை-
எழுத்தாணியாய் ஏற்றவனே!
பாயும் பொழுதிற்காய் உன்னையே பதித்திருந்தாய்.
சாயும் நிலை வரினும் சிங்களன் கையில்
சாயாத கலையல்லவோ காத்திரமாய்-
உன்-
காயாத கனவது.

புறச்சூழல் உனை புரியாத பொழுதாய்,
உறவுகள் உனை அரவணைக்கா கணமாய்,
உன் கண்ணியமான,கடப்பாடு,
திண்மையான செயற்பாடு,
உண்மையான யோகமாக உணரும் பொழுதில்!

நீ!
சத்திய வேள்வியாய்
தமிழீழ மண்ணில் சாவால் சரித்திரம் எழுதி.
புண்ணியனே!
பிறப்புக்களின்
அர்த்தம் ஆரத் தழுவிய வித்தியனே!
விடியும் ஒவ்வொரு கணமும்,
உன் வீரம் சாற்றும் விகற்பத்தில்,
எம் விழி(ளி)ப்புக்கள் உமைத் தழுவும்.

சூழல்!
இன்று சூனியமாய் வரம்பு அள்ளியதாய்,
ஓரு பார்வை அவ்வளவே!
குருதிகள் சிந்தாத குதம் ஏதும் உண்டோ?
இது!
விடுதலை வேள்வி.இதில்
ஆகுதிகள் சாதாரணமான ரணம் சரிக்கா,
எல்லாமே!
இங்க அசாதாரண ஆயிலியம்
இத்தனையும் சுதந்திரம் விடுதலை என்ற பெருங்கனவின்-
இடுகுறி.

ஆம்:
சொல்லணத் துயரம் எம்
பூமிக்கு மட்டும் இல்லை எங்களின்
புதல்வர்களினதும்,
புனிதர்களும் மாவீரக் கனவெழுதும்.

எங்கள்-
தாயகத்தை சிதைத்து,
பிச்சு உதறி,சகலதுவும் பிணக்காடாய்!
வார்த்தைகளிற்குள் அடங்காத அட்டகாசம் அது.
மனிதம் தின்ற கோரத்தின் அரிச்சுவடியது.

இன்றும் அதன் தாரணங்கள் சூடிய வடுக்கள்
அனு தினமும் உள்ளம் அரித்து வெளிவரும்.

ஆயினும்!
புனிதனே உன் பாதம் ஆர்ந்து,அகோரணமாய்
உறுதி பூண்டோம்.
மலரும் தமிழீழத்திற்காய் நாம் மடி சுரப்போம்.
அந்த மகோன்னதம் மிளிரும்.
அரூவமான ஆத்தமங்கள் விழி விரிக்கும்.
விடியும் திசை எம்பால் ஒளிர,
உன் சத்திய வேள்வியின் வழியில்-
எம் வாசல் பூப் பூக்கும்.

சுதந்திரம்,
விடியல்,
எந்த இரத்த வடுவின்றியும்-
விடியாது.
விழி விரித்து,வழி பார்க்கும் பக்குவம் விகற்போம்.
வீழ்ந்தது எழுவதற்கே!
வேதம் படித்தோம்.
பாரில் உன் பாதை செழிக்கும்.
செந்தூரமாய் செந் தமிழீழம்.

வெள்ளி, 4 ஜூன், 2010

தொலை நோக்கு!



முகத்திற்கு நேரே சொரிந்த புன்னகைகள்-
முதுகு நேர்த்து சொறிந்த வன்னகைகள்-தமிழ்
இனத்திற்கு செறிந்த வஞ்சனையின்றி-எந்த
இகத்திற்கு இழைத்த பஞ்சணையாகும்.


தொலை நோக்கு!
தொலைவல்ல,
கலையால் கரம் தொடு.
விலை போனார்கள் சிலர்:
விதண்டா வாதம் செய்ய சிலர்.
கண்டதையும் கக்கி காசாக்க சிலர்.
விண்டதாக விவாதிக்க வித்தையேற்று சிலர்.
அண்டா,அண்டாவாக அளக்க சிலர்.
கொண்டதெல்லாம் தாம் விடுதலையின் தலையென்பர் சிலர்.

அன்றலர்ந்த மலராய்,
ஆளுமையாய் அண்ணனுடன்,
சென்றிந்த செம்பகையை,
பொடியாக்கி போனார்களே. அவர்கள:
பொடிகளல்லர் தமிழுடன் தன்னை,
ஆகுதியாக்கிய கரும்பூ இவர்கள்.

இந்த-
கல்லறையின் கனதிகளையும்,
அதன் காத்திரத்தையும்,
கொண்ட கொள்கையின் கொற்றங்களையும்,
தன்
சுயத்திற்காக
கொன்று
இங்கு
பிரிந்து நிற்கும் பீடர்கள்
என்று இவர் உறுதியாய் எங்கள்
உழவன் கரம் கொடுத்தான்.

உறவாடி கெடுக்கும்
உறவு.
இதுதான் அன்று வரை இன்று ஈறாக
தொடரெழுதும்
ஒட்டு,
எட்டப்பர் க(ஓ)டை.
முள்ளி வாய்க்காலில் விழ்ந்தாலும்
கள்ளிப் பால் தெளிக்க எங்கள் இனமே
கனதியாய்.
இழி நிலையேற்ற கொடியோரின்
கும்பம் கண்டோம்.

பிரித்தகற்ற முடியா பிடாரிகள் எல்லாம்
இன்று தானாவே தன்னை பிரிகையாற்றிய
பிம்பம் ஒரு சுத்திகரிப்புக்குள்
சுதாகரித்து.
தன் பீடத்தை தானே தகற்ற வரலாறும் இங்குதான்.

நன்றே.
பிரிவில் ஊறும் உறுதியற்ற உருவம் கண்டோம்.
பிறளாத எங்களின் திண்மையான திண்ணம் கண்டோம்.
இனி
விதி அளி(ழி)க்கா வீரியம் பெறுவோம்.
எமக்குள்
களையற்ற காளையரும்,
கனதியான,
தாளையரும்---வலம் வரும் தலம்.

விடிவெள்ளி இனி தூரமும் இல்லை.
சோரம் போகும் சாரமும் இல்லை.
தோள் தொடும் தோழர்கள் இனி
தேற்றம் பெறுவர்.ஈழத் தோற்றம் வரைவர்.

செவ்வாய், 1 ஜூன், 2010

பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.


எந்த நினைவுகளையும்,
எங்கள் உறவுகளையும்,
எந்தன் சுற்றத்தையும்,
எங்களான முற்றத்தையும்,

நினைவுகளால் என்றாலும்,
களையும் நினைவிருந்தால்,
எல்லாமே அல்,ஆன்,ஒடு,ஓடுவாக
ஓர்மம் களி(ழி)த்தால்!
நாம் தமிழராய் தலை நிமிர்வதில்
எவ்வித யோக்கியதையோ,பாத்தியதையோ
அர்த்தமோ இல்லை.

எனவே!
எனக்குள்,உனக்குள்,எம் எல்லோர்க்குள்ளும்
குமுறும் குரலாய் நான்
இங்கு குறியிடும் குவியத்தை குலைக்க
யாரும் கனவிலும் சுடுகலன்
மொள்ள வேண்டாம்.

இது!
தர்மத்தின் குரலாய்
குறி சுடும்.
சூடப்(கற்பூரம்) புத்தியுள்ள
சூட்சுமம் உள்ளோரே!
சுகிப்பீராக!?

என்னைத் தாழ்த்துவதாய்-நீ
தாழ்ந்து போகாதே,நீ
நுணலானால் ஒரு போதும்
அரவமாய் அறம் தீண்டேன்.
மறவாதே மானிடமே!

அனுதினமும்,
உறங்கும் முன் ஒரு கணமாவது
உன் முற்றத்தின் அவலத்தை
உள் வாங்கு!
சிலாகி!
உற்ற வழி தேடு உனக்குள் உறங்கும்.
பிரபாகரங்களின் கரத்தை கைப்பற்று.

ஒரு திவ்விய ஒளி உன் அகம் சூடும்.
கனவுகள் காண்,
அதை தினமும்
புனருத்தாரணம் செய்.
சமூக சிந்தனை அகம் ஊட்ட,
ஏதோ,
ஏதோ ஒன்று உன் இலங்கலில்
இயங்க மடி தேடும்.அந்த
மனிதம்,
அதுதான் உன் இயல்பாக முடி சூட.
எது உன்னால் முடியுமோ?
அது தானாக உனை இயக்கும்.

ரத்தத்தின் சத்தத்தில்
முற்றங்கள் முகை அவிழ!
கேட்குதா!
எங்கள் முற்றத்தின் அழுகுரல்.
இதையும்
பத்தோடு பதினொன்றாய் நீ
எண்ணினால் என் பதிவுகளில் இருந்து -உன்
...பதியங்களை களை-இது
விநயமான வேண்டுகோள்.

வலைப்பதிவு காப்பகம்