புதன், 24 பிப்ரவரி, 2010

கனடிய வர்த்தகர்களின் அரிதாரம்.

அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடாத்திய கனடா வர்த்தக சம்மேளனமும், வைத்திய சங்கமும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு. அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டங்கள் நடாத்திய இந்த கூட்டம் புலியை வைத்து அன்று பிழைப்பு நடாத்தியது. புலிகளின் தலைமை கடந்த ஆண்டு மே மாதம் மெளனிக்கப்பட்ட நிலையில், தற்போது மஹிந்த அரசுடன் உறவு கொண்டு தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ் குழு அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சு நடாத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.(படம் இணைப்பு)


புலிகள்-ரணில் சமாதான காலகட்டத்தின்போது கனடாவில் இருந்து லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கரியான்ஸ், டிரக் லீ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து சென்று பிரபாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களான வைத்திய கலாநிதி சிவாஜி, கணேஸ் சுகுமார், குலா செல்லத்துரை போன்றவர்கள் பிரதானமாக செயற்பட்டவர்கள் ஆவர். தமது பிழைப்புக்காக அன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை துரோகிகளாகவும், தீண்டதாகதவர்களாக கூறிவந்த இந்த வர்த்தக சமூகம் இன்று வன்னி இறுதி கட்டபோர் மூலம் தமிழினத்தின் அவலத்திற்கு காரணமான அரசுடன் ஊடல் கொள்வது மிகப்பெரும் துரோகமானது.

இது கனடா வாழ் வர்த்தகர்களின் இரண்டகமா?அல்லது பச்சோந்தி தனமா?இல்லை எல்லாமே இப்போ வியாபாரம்.சுயநலமிகளின் சூத்திரம் எப்போதும் இப்படித்தான் இயங்கும்.கேட்பவன் இல்லையென்றால் ஈசலும் ஈசன்தான்.
பலமிழநதோம் பேரம் பேசும் சக்தியும் அற்ற போது எல்லாமே?????

ஆயினும் அற்றதான இத்தனையும் வினையறுக்கும்,விதி என்பது மாறும்.மாற்றப்படும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வசிட்டர்களிற்காக காத்திருக்கும் வயல்.


பிரீத்தோதும் பிறவிகளால்,
பிரிந்திருக்கும் தமிழ் கூட்டமைப்பு.
எந்த தெரிவேந்தி இன்று தேர்தலில்?
சிந்தாத சிந்திப்புக்கள் சிதைந்தொழிந்து,
சின்னா பின்னமாக பின்னலிடும் பிறழ்வில்.

அண்ணன் இல்லையெனில்,
ஆளுமையும் அரோகரா!
தண்மையான தகமெல்லாம்,
தடம் புரண்டு அரோகரா!
திண்மை அங்கே தீ எழுதும்,
திடமெல்லாம் தீக்கிரையே அரோகரா!

வண்ண, வண்ண வளமெலாம்,
வயலறுந்து செயல் குலைந்து,
திண்ணைப் பேச்சாக திடகாத்திரம் தீய்ந்ததினால்?
பலமற்றப் போனதால் பகை-
வாசல் எம் "பா" எழுதுமா?

ஆளுமையற்ற அரசியலால் என்ன தகம்
நாம் குவிப்போம்?
சூனியமாய் அங்கு சுடரெரிந்து அணைந்ததுவா?
கூனியம் எம் குன்றாக குலமேந்துமா?
அன்றிலிருந்து இன்று வரை இந்த
பேரினவாதம் எம்மை பெயர்த்தெடுத்ததே தவிர
எந்த ஆளுமையையும் எமக்காற்றவில்லை.
இது என்றும் எம் வரலாறாக வழி காட்டும்.

ஆயுதம் இழந்தோம் அதனால் அத்தனையையும்
இழந்தோம்-ஆனாலும் மாற்று வழி ஏதும்
இல்லை.
எனவே மாற்றமான களமேந்தி
மீண்டும் நாம் தரிக்க தளம் ஒளி கூட்டும்-இதுதான்
தாற்பாரியம் இதற்கு வருடங்கள் கூட ஆகலாம்.

இதை எதிரியே தீர்மானிப்பான்-அது
எங்கே?,எப்போது?எப்படி?ஏன்?
விடை தெரியா வினாவாக இது நீட்சி காட்டாது.
காலம் களம் திறக்கும்.
கோலமிது மாறும் கொற்றங்கள் குழுமும்.
ஞாலத்தில் எமதான ஞாயிறு உதிக்கும்-அது
உலவும் இந்த உகைப்பெல்லாம் உறுத்தறுக்கும்.

எம் இடையே விசுவாமித்திரர்கள் அதிகமா?
துரோணர்கள் அதிகமா?
ஒட்டுக் குழுக்களே அதிகமாகி போனார்கள்.
எமக்கு தேவையானவர்கள் வல்ல வழி காட்டும்
வசிட்டா்களே.
இருப்பெழுதும் இவர்கள் இழைவார்கள்-எம்
உறுப்பெழுதி மிளிர்வார்கள்.

மாறும்,களம் மாறும்
நிச்சயமாய் இத்தனையும் மாற்றம் பெறும்.
சுழலும் பூமிப் பந்து இந்த மாற்றத்தை
அங்கீகரித்து எம் ஆயிலியம் வரைய மாறும்
எல்லாமே மாற்றம் பெறும்.
புறச் சூழல் இந்த புதுமையை புகுத்தும்.
பொறுத்திரு அதுவரை உன் தேசியக் கடமையில்
கரம் கொடு.எல்லாமே ஆகும்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

மறக்கக் கூடாத மயானம்.

நடந்து முடிந்ததாக கூறப்படும் அத்தனை அழிவுகளும் நெஞ்சில் அணையாத தீயாக என்றுமே எரியவேண்டும்.மறக்கவோ,மறைக்கவோ முடியாத வெஞ்சினமாய் உள்ளத்தில் அனல் எரிய வேண்டும்.இதை மறந்தால் தமிழன் என்ற தார்மீக எண்ணத்தையும் எரித்து விடு.இந்த இகத்தில் எந்த நுகமும் அற்ற,அறமுமற்ற அனாதியனாய் அலை.தாய் நிலத்தையம்,தர்மத்தின் அறத்தையும் அழித்தவனை எந்த முகாந்திரத்திலும் உன் மனம் கொள்ளாதே.சுழலும் இந்த பூமிப் பந்து மீண்டும் எங்கள் கொற்றத்தை கொலுவேற்ற அயராமல் உழை.இணையங்களில் நாளொரு திரிப்பும், பொழுதொரு பழிப்புமாய் சில,பல சுய நலமிகளால் தொப்பி பிரட்டி தோரணம் வேயும் ஒட்டர்களை,இந்த கூத்தர்களை பிரித்தறிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்டு உனதான தேசியத்திற்கு தோள் கொடு.நாளை விடியலின் சந்நிதியில் எம் அவலங்கள் முடிவு முகரும்.

புதன், 17 பிப்ரவரி, 2010

அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.


ஒரு கரம்,
ஒரு கணம்,
திரும்பவும் தரிசனம்.
திகைப்பெழுதும் திமிர்த்தனம்.
வரும் வரை விழித்திரு,
வழியெலாம் முட்புதர்.

முற்றம்!
எப்போதும் தானா வளர்ந்ததில்லை.
முகமெழுதும் வயற் கட்டும்
தனியாக விளைவதில்லை.
பூத்திருக்கும் பூங்கா வனம்
பூமியில் உழைப்பின்றி
உதித்ததில்லை.

ரணங்கள்,
வலிகள்,
மாபெரும் இரத்த ஆறுகள்,
மனிதரின் மகத்தான
உரத்திறனால் எழுந்தவைகள்-இதில்
எதுவுமே ஏற்றம் இழைய
இழந்தவைகள் ஏராளம்.

இழப்புக்கள் தான்-
உதிப்பனவுகளிற்கு உந்து சக்தி.
தோல்விகளின் தோரணமே-
வெற்றிகளின் படிமானம்.

மீண்டும் முழைக்காதென,
வேரோடு அழிந்தவைகளும்,
வேகம் முதிர்த்து எழுந்ததுண்டு.
பதினேழு தடவை கயனி முகமது-
படை எடுத்து வென்றதுவும் வரலாறு.
பல ஒட்டு குழுக்களால் வலை திரித்து,
நிமிர்ந்ததுவும் எங்கள் வரலாறு.இன்று
ஏதும் அற்றதாக எல்லாமே அழிந்ததாக -ஆம்
ஏன் எரிந்ததாகவும்,

ஆயினும்!
எரிவிலும்,முற்றான அழிவிலும்
தோன்றாமல் தோய்வெழுதாது எங்கள்
தேசியம்,
களம் இன்று கனதி அற்றதாயினும்-
தளம் தரமேறும்,
விதைத்த உடன் எதுவும் விழையாது.
எரிந்த நிலம்,உழக்கிய மண்
பிய்த்த பிசிறிய கோலம்-கொஞ்ச காலம்
நிதானிக்க தானம் தேவை.

எனினும் எங்கோ உறுதி,
ஒன்று இதற்கான காய் நகர்த்தலில்,
அருவமாக,நாள் நகர உருவகமாக
உதிக்கும்-அது ஓர்மத்தின்,வீழ்ந்த வடுக்களை
மீள்,சுய மீளாக்கத்தால் மிடுக்கேற்றும்.
சோழ ராச்சியத்தின் தொப்பிள்கள் தொட்டில் கட்டும்.
வளி ஒன்று வகையாக்கும் அந்த வல்லோனின்,
விழியசைவில் வழி திறக்கும்.

வெறும் நம்பிக்கையில்,
வெற்றான எதிர்பார்ப்பில்,இது அசைவியக்காது.
வியாபங்கள் வித்தியாசமானவை.
விசுவரூபங்கள் இப்போதும் அவை மொய்யாது.
கால ஓட்டங்களில் இவையும்
பெரும் ரூபம் தரிக்கும்.ஈழ விடுதலையாய்.-
அருவம் தவிர்க்கும் ஆளுமையாய்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.


இளமையின் கனவுகள் கலைவது வாழ்க்கை-அதற்காக
கனவுகள் காண்பதை கலைப்பது முறையா?தோல்விகளில்
கற்றல் வாழ்வின் பிடிப்பாக பிடிமானம் நுகக்கும்.
ஆக!
வெற்றிகளில் மட்டும் களிப்பெழுதுவதை கழித்து
தொலை நோக்கில் தோகை விரி.
தோல்விகள் தோள் தட்டும் போது
முதலில் தன்னைத் தானே தட்டி.
கொடுத்தல் தன்னம்பிக்கையின் முதற் படி.

துவளாத மனமும் எதிலும்,
எதிர் நீச்சல் போடும் வீரியமும்,
முதன்மையாகும்.
சுய பரிதாபம் சூட்டுதல் சூனியம் வரையும்.
எப்போதும், எதுவும் நிகழலாம்.
எனவே முன்னேற்பாடு நயத்தல்
நயமாகும்.

வரும் போது காத்தலும்,வந்த பின்
நோ(ர்)த்தலும் காத்திரமான களமல்ல எதையும்
தொலை நோக்கோடு யாத்தல் விவேகமாகும்.
விதி சொல்லி விழுவதை வதைத்து
கதியல்ல காதையென விழித்திரு.

ஆளுமைகளை அகம் கொள்ளுதல்-அதை
ஆத்ம சுத்தியுடன் அணைத்தல்,
பேதமைகளை களைத்தல்,மடமைகளை
கழித்தல்,
விடையிறுக்கும் விவேகத்தை கட்டிகாக்க.

சந்தர்ப்பம் என்பது
எப்போதும்,எங்கேனும் இலங்காது.அதை
இலங்கும் போது நலங்கிடுதல் நயம் நாட்டும்.
விலங்கது என்று வில்லங்கம் சூட்டினால்
மலங்கி,கலங்கி,மாய்தல் மானம் கரைக்கும்.

எனவே!
கூடும் தானங்களை தரம் பற்றி,
ஊடும் உலைப்புக்களை தரம் பிரித்து,
வாடும் வனப்பெழுதாமல்,
பாடும் மனம் கொள்க,பாதை அது திறக்க.

வெற்றிகளில் கரம் கொடுப்பதை விட
தோல்விகளில் தோள் கொடுத்தல்
நியாயமான செயற்பாடாகும்.
அது ஆரோக்கியமான ஆதார்சமாகும்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்க,அதை
வேடிக்கை பார்த்து நக்கலடிப்பதைவிட,
அவனை கைகொடுத்தெழுப்பி உற்சாகப் படுத்தல்,
கோடி கிடைத்தாலும் கிடைக்காத உவப்பது.
வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.

வலைப்பதிவு காப்பகம்